Title of the document
புதுடில்லி: ''நீட் மற்றும் ஜே.இ.இ., தேர்வுகளை திட்டமிட்டபடி நடத்துவதா அல்லது தள்ளி வைப்பதா என்பது குறித்து, கல்வித் துறை நிபுணர்கள் குழு, நாளை அறிக்கை சமர்ப்பிக்கும். அதன் அடிப்படையில், தேர்வு குறித்து விரைவில் முடிவு செய்யப்படும்,'' என, மத்திய மனிதவள மேம்பாட்டுத் துறை அமைச்சர், ரமேஷ் பொக்கிரியால் தெரிவித்தார்.ஐ.ஐ.டி., உள்ளிட்ட உயர் கல்வி நிறுவனங்களில், இன்ஜினியரிங் போன்ற தொழில் கல்வி படிப்பதற்கான, ஜே.இ.இ., முதன்மை நுழைவுத் தேர்வை, ஜூலை, 18 - 23ம் தேதிகளில் நடத்தப்படும் என, என்.டி.ஏ., எனப்படும், தேசிய தேர்வு முகமை அறிவித்திருந்தது.இதேபோல், மருத்துவப் படிப்புக்கான, 'நீட்' நுழைவுத் தேர்வு, ஜூலை, 26ல் நடத்தப்படும் என, அறிவிக்கப்பட்டிருந்தது. ஆனால், கொரோனா வைரஸ் பரவல் காரணமாக, தேர்வு தேதிகளை ஒத்தி வைக்க வேண்டும் என, மாணவர்களும், அவர்களது பெற்றோரும் வலியுறுத்தி வருகின்றனர்.முடிவுஇந்நிலையில், மத்திய மனிதவள மேம்பாட்டுத் துறை அமைச்சர், ரமேஷ் பொக்கிரியால் நேற்று கூறியதாவது:கொரோனா பரவல் குறையாத நிலையில், நீட் மற்றும் ஜே.இ.இ., தேர்வுகளை தள்ளி வைக்க வேண்டும் என, பல தரப்பிலிருந்தும் கோரிக்கை வந்துள்ளது. இதையடுத்து, தேர்வுகளை நடத்துவதற்கான நிலைமையை ஆய்வு செய்ய, என்.டி.ஏ.,வைச் சேர்ந்த அதிகாரிகள் மற்றும் கல்வித் துறை நிபுணர்கள் அடங்கிய குழு அமைக்கப்பட்டு உள்ளது. இந்தக் குழு, நிலைமையை ஆய்வு செய்து, தேர்வுகளை நடத்துவது தொடர்பான பரிந்துரைகளை, நாளை சமர்ப்பிக்கும். அதன் பின், தேர்வுகளை திட்டமிட்டப்படி நடத்துவதா அல்லது தள்ளி வைப்பதா என, முடிவு செய்யப்படும்.
இவ்வாறு, அவர் கூறினார்.சி.ஏ., தேர்வு நடக்குமா? 10ம் தேதி தெரியும்!சி.ஏ., எனப்படும், பட்டய கணக்காளர் தேர்வுகளை நடத்துவது குறித்து, 10ம் தேதிக்குள் இறுதி முடிவை அறிவிப்பதாக, இந்திய சார்டர்ட் அக்கவுன்டன்ட்ஸ் மையம் நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளது.வழக்கமாக, சி.ஏ., தேர்வுகள், மே மாதத்தில் நடத்தப்படும். கொரோனா வைரஸ் பாதிப்பு மற்றும் ஊரடங்கால், இந்தாண்டுக்கான தேர்வு ஒத்தி வைக்கப்பட்டது. தற்போது, ஜூலை, 29 முதல் ஆக., 16 வரை வரை நடத்தப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்த முறை, 'ஆப்ட் அவுட்' எனப்படும், தேர்வு எழுத முடியாதவர்கள், தேர்வில் இருந்து விலகிக் கொள்ளும் வாய்ப்பு அளிக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டது.இதை எதிர்த்து, உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டுள்ளது. மனுவில் கூறப்பட்டுள்ளதாவது:சி.ஏ., தேர்வை, 4.67 லட்சம் பேர் எழுதுகின்றனர். ஆனால், நாட்டில், 259 இடங்களில் மட்டுமே தேர்வு மையங்கள் அமைக்கப்பட்டுள்ளன. நாட்டின், 70 சதவீத மாவட்டங்களில், தேர்வு மையங்கள் அமைக்கப்படவில்லை.
இதனால், கிராமங்கள் மற்றும் ஊரகப் பகுதியில் உள்ளவர்கள், தேர்வு எழுத முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. இந்த நிலையில், ஆப்ட் அவுட் முறையால், இந்தப் பகுதியைச் சேர்ந்த மாணவர்களின் உரிமை பறிக்கப்படுகிறது. அதிக இடங்களில் தேர்வு மையங்களை அமைக்க உத்தரவிட வேண்டும்.இவ்வாறு மனுவில் கூறப்பட்டுள்ளது. இந்த வழக்கை, நீதிபதிகள், ஏ.எம்.கன்வில்கர், தினேஷ் மகேஸ்வரி, சஞ்சீவ் கன்னா அமர்வு விசாரித்து வருகிறது.
'வீடியோ கான்பரன்ஸ்' முறையில், நேற்று நடந்த விசாரணை யின்போது, இந்திய சார்டர்ட் அக்கவுன்டன்ட்ஸ் மையத்தின் சார்பில் ஆஜரான, வழக்கறிஞர் ராம்ஜி ஸ்ரீனிவாசன் வாதிட்டதாவது:பல மாநிலங்களில், 'கொரோனா' வைரஸ் பாதிப்பு தீவிரமடைந்துள்ளது. இந்த நிலையில், தேர்வுகளை நடத்துவது சாத்தியமா என்பது தெரியவில்லை. இது தொடர்பாக, மையத்தின் மாநிலப் பிரிவுகளை கலந்தாலோசித்து, தேர்வு நடத்தப்படுமா என்பது குறித்து முடிவு எடுக்கப்படும். இவ்வாறு, அவர் கூறினார். அதையடுத்து, வரும், 10ம் தேதிக்குள் பதிலளிக்கும்படி, அமர்வு உத்தரவிட்டுள்ளது.
# இந்த பயனுள்ள தகவலை அனைவருக்கும் பகிருங்கள் - யாரேனும் ஒருவருக்காவது பயன்படும்...

Post a Comment

Previous Post Next Post