அரசாணையின்படி மேல்நிலை முதலாமாண்டு / இரண்டாமாண்டு கல்வி பயிலும் மாணவர்களின் மன அழுத்தம் மற்றும் உயர்கல்வி குறித்த அச்சத்தைப் போக்கும் வகையிலும் , வேலைவாய்ப்பிற்கு ஏற்ற வகையிலும் மேல்நிலைக்கல்வி முதலாம் ஆண்டிற்கு தற்போது நடைமுறையிலுள்ள பாடத்தொகுப்பு மற்றும் விதிகளை மேம்படுத்தி நடைமுறையிலுள்ள 4 முதன்மை பாடத் தொகுப்புகளுடன் சேர்த்து புதியதாக 3 முதன்மை பாடத் தொகுப்புகளை 2020-2021 ஆம் கல்வியாண்டு முதல் அறிமுகப்படுத்தி நடைமுறைப்படுத்த அனுமதி அளித்து கீழ்கண்டவாறு ஆணை வழங்கப்பட்டுள்ளது.
1. மாணாக்கர்கள் பார்வை 1 - இல் காணும் அரசாணையின் பிற்சேர்க்கை 1 - இல் குறிப்பிட்டுள்ளவாறு பகுதி -1 மொழிப்பாடம் மற்றும் பகுதி II ஆங்கிலம் தவிர , பகுதி- III இல் புதிய வழிமுறைகளுடன் கூடிய மூன்று முதன்மை பாடத் தொகுப்பினையோ ( 500 மதிப்பெண்கள் ) அல்லது தற்போது நடைமுறையிலுள்ள பார்வை 1 - இல் காணும் அரசாணையின் பிற்சேர்க்கை II- இல் குறிப்பிட்டுள்ளவாறு நான்கு முதன்மை பாடத் தொகுப்பினையோ ( 600 மதிப்பெண்கள் ) தெரிவு செய்து கொள்ளலாம்.
2. மாணாக்கர்கள் தெரிவு செய்யும் பாடத்தொகுப்பில் உள்ள பகுதி -1 மொழிப்பாடம் மற்றும் பகுதி II ஆங்கிலம் உட்பட பகுதி- III இல் உள்ள அனைத்து பாடங்களிலும் தேர்ச்சி பெற வேண்டும்.
3. புதிய மேம்படுத்தப்பட்ட பாடத்தொகுப்பு வரும் 2020-2021 ஆம் கல்வியாண்டு முதல் மேல்நிலை முதலாமாண்டிற்கு நடைமுறைப்படுத்தப்படுகிறது.
எனவே திருவள்ளூர் மாவட்டம் , அனைத்து வகை மேல்நிலைப் பள்ளித் தலைமை ஆசிரியர்கள் / முதல்வர்களும் பார்வை 1 - இல் காணும் அரசாணையில் குறிப்பிட்டுள்ளவாறு மாணவர்களின் மன அழுத்தம் மற்றும் உயர்கல்வி குறித்த அச்சத்தைப் போக்கும் வகையிலும் , வேலைவாய்ப்பிற்கு ஏற்ற வகையிலும் மாணவர்களின் விருப்பத்திற்கு ஏற்ற வகையில் பாடத்தொகுப்புகளை தேர்ந்தெடுக்க மாணவர்களுக்கு அறிவுரைகள் வழங்கவும் , மேற்படி அரசாணையில் தெவிக்கப்பட்டுள்ள மேம்படுத்தப்பட்ட பாடத்தொகுப்புகளை 2020-2021 ஆம் கல்வியாண்டு முதல் பள்ளியில் நடைமுறைப்படுத்தி செயல்படுமாறும் கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள் . மேலும் பள்ளிகளில் ஏற்கனவே உள்ள பாடத்தொகுப்புகளுடன் கூடுதலாக பிற்சேர்க்கை -1 ன்படி புதிய பாடத்தொகுப்புகளுக்கான அனுமதியினை பெற விரும்பும் தனியார் பள்ளிகள் புதிய பாடத்தொகுப்பு தொடங்குவதற்கான உரிய கருத்துருக்களை முதன்மை கல்வி அலுவலருக்கு சமர்ப்பித்து அதற்குரிய அனுமதியினை பெற்ற பின்னரே சேர்க்கையினை துவக்குதல் வேண்டும் . மேலும் எக்காரணத்தை முன்னிட்டும் தொடர் அங்கீகாரம் காலாவதியான தனியார் பள்ளிகளுக்கு புதிய பாடத்தொகுப்பிற்கான அனுமதி வழங்க இயலாது.
மேலும் எந்த ஒரு தனியார் பள்ளிகளும் மாணவர்கள் தேர்வு எழுதவிருக்கும் பாடத்தொகுப்பிற்கான அனுமதி கட்டாயம் பெறப்பட்டிருக்க வேண்டும் , சில தனியார் பள்ளிகளில் விதிமுறைகளை மீறி மே மாதம் மற்றும் ஜுன் மாதங்களில் மாணவர் சேர்க்கையினை முடித்து விட்டு அக்டோபர் , செப்டம்பர் திங்களில் புதிய பாட தொகுப்பிற்கு அனுமதி கோருவதும் , புதிய பாட தொகுப்பிற்கு அனுமதி பெறாமலே பள்ளியை நடத்துவதும் , மாணவர்கள் நலனுக்கு ஊறு விளைவிக்கும் செயல்பாடாக உள்ளது. இவ்வாறான நிகழ்வுகள் கடந்த கல்வியாண்டில் முதன்மைக் கல்வி அலுவலரின் கவனத்திற்கு தெரியவந்துள்ளது. எனவே எந்த வகை மேல்நிலைப் பள்ளியாக இருப்பினும் புதிய பாடத்தொகுப்பு அனுமதி பெறாமல் மாணவர் சேர்க்கையினை ( New Admission ) நடத்துதல் கூடாது என திட்டவட்டமாக தெரிவிக்கப்படுகிறது.
அனைத்து மாவட்டக் கல்வி அலுவலர்களும் இப்பொருள் மீது தொடர் நடவடிக்கை மேற்கொள்ள அறிவுறுத்தப்படுகிறார்கள்.
Post a Comment