Title of the document

கோவில்பட்டியில் பொய்யான தகவல் அளித்து இ.பாஸ் பெற்று சென்னை சென்று வந்த பள்ளி தலைமை ஆசிரியர் கைது செய்யப்பட்டுள்ளார். அவரது காரை போலீசார் பறிமுதல் செய்தனர்.

தூத்துக்குடி மாவட்டம், கோவில்பட்டி ராஜீவ்நகர் பகுதியை சேர்ந்தவர் கோவில்பிள்ளை மகன் அமுல்ராஜ். இவர் வீரபாண்டியபுரத்தில் உள்ள பள்ளியில் தலைமை ஆசிரியராக பணியாற்றி வருகிறார். சென்னையில் மருத்துவ பரிசோதனை என்று கூறி இ.பாஸ் பெற்ற தலைமை ஆசிரியர் அமுல்ராஜ், தனது காரில் மஞ்சநாயக்கன்பட்டி கிராமத்தில் இருந்து ஒருவரை ஏற்றி கொண்டு, சென்னை ஸ்ரீபெரும்பத்தூரில் இறங்கி விட்டுள்ளார். பின்னர் சென்னை அசோக் நகரில் இருந்து சிலரை காரில் ஏற்றி கொண்டு கோவில்பட்டி அருகேயுள்ள தெற்கு மயிலோடை கிராமத்தில் இறங்கிவிட்டுள்ளார். இந்நிலையில் மருத்துவ பரிசோதனை என்று கூறி பொய்யான தகவலை கூறி தலைமை ஆசிரியர் அமுல்ராஜ் இ.பாஸ் பெற்றுள்ளதாக கோவில்பட்டி தாசில்தார் மணிகண்டனுக்கு ரகசிய தகவல் கிடைத்துள்ளது.

இதனை தொடர்ந்து பாண்டவர்மங்கலம் கிராம நிர்வாக அதிகாரி சுப்பராஜ் மூலமாக விசாரணை நடத்தியதில் பொய்யான காரணம் கூறி இ.பாஸ் பெற்றது உறுதியானது.  இதையெடுத்து கிராம நிர்வாக அதிகாரி கொடுத்த புகாரின் பெயரில் கோவில்பட்டி மேற்கு காவல் நிலைய போலீசார் வழக்கு பதிவு செய்து தலைமை ஆசிரியர் அமுல்ராஜை கைது செய்து, காரையும் பறிமுதல் செய்தனர். இ.பாஸ்-க்கு விண்ணப்பம் செய்த மருத்துவ சான்றிதழ் உண்மை தான்மை குறித்தும் விசாரணை நடத்தப்பட்டு வருகிறது. கைது செய்யப்பட்ட தலைமை ஆசிரியர் அமுல்ராஜ் தனியார் பாலிடெக்னிக் கல்லூரியில் சிறப்பு முகாமில் தனிமைப்படுத்தப்பட்டுள்ளார். பொய்யான காரணங்களை கூறி இ.பாஸ் பெற்ற புகாரில் தலைமை ஆசிரியர் கைது செய்யப்பட்டது கோவில்பட்டியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 
# இந்த பயனுள்ள தகவலை அனைவருக்கும் பகிருங்கள் - யாரேனும் ஒருவருக்காவது பயன்படும்...

Post a Comment

Previous Post Next Post