ஊரடங்கிற்கு மத்தியிலும் தினமும் பள்ளிக்கு சென்று , பாழடைந்த பள்ளியை புதுப்பித்து வண்ண மயமாக்கிய ஆசிரியர்
கொரோனா ஊரடங்கிற்கு மத்தியில் பாழடைந்த பள்ளியை புதுப்பித்த ஆசிரியரை கிராம மக்கள் பாராட்டி வருகின்றனர்.கர்நாடக மாநிலம் சிக்கமகளூரு மாவட்டம் மூடிகெரே தாலுகா பாலூர் அருகே சுங்கசலே என்ற குக்கிராமம் உள்ளது. இங்கு செயல்படும் அரசு பள்ளியில் சுமார் 12 ஆண்டுகள் காந்தராஜூ என்ற ஆசிரியர் பணிபுரிந்து வந்துள்ளார்.
இந்த பள்ளிக் கட்டிடம் பாழடைந்து கிடந்தது. இந்த நிலையில் அந்த பள்ளிக் கூடத்தை புதுப்பிக்க காந்தராஜூ முயற்சி செய்தார். இதுபற்றி அவர் மாவட்ட பஞ்சாயத்து அதிகாரிகளிடம் தெரிவித்தார்.
ஆசிரியர் காந்தராஜூ அவர்களின் கோரிக்கையை ஏற்று மாவட்ட பஞ்சாயத்து
நிர்வாகம் பள்ளியை புதுப்பிக்க ரூ.50 ஆயிரத்தை ஒதுக்கியது. இதற்கிடையே
கொரோனா தடுப்பு நடவடிக்கையாக ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது.
இதனால் பள்ளியை புதுப்பிக்க கால தாமதம் ஏற்பட்டது. இருப்பினும்
ஊரடங்கிற்கு மத்தியிலும் காந்தராஜூ தினமும் பள்ளிக்கு வந்து பாழடைந்த
கட்டிடத்தை புதுப்பிக்கும் பணியில் ஈடுபட்டார்.
அனைத்து பணிகளும் முடிந்து தற்போது அந்த இடமே புதுப்பொலிவுடன்
காட்சியளிக்கிறது. காந்தராஜூ தனியாளாக பள்ளி சுவர்களில் வண்ணங்கள்
தீட்டியதுடன், பூச்செடிகள் வரைந்து, தரையில் அமர்ந்த குழந்தைகளுக்கு
தற்போது நாற்காலிகள், மேஜைகள் போன்ற வசதிக்களை ஏற்பாடு செய்துள்ளார்.
மாணவர்களின் படைப்பாற்றலை ஆதரிக்கும் படங்களையும் ஆசிரியர் காந்தராஜூ
சுவரில் வரைந்துள்ளார். மாவட்ட பஞ்சாயத்து நிர்வாகம் வழங்கிய தொகையுடன்
தனது சொந்த பணம் ரூ.40 ஆயிரத்தையும் பள்ளியை புதுப்பிக்க காந்தராஜூ
செலவிட்டுள்ளார்.
இதற்காக பள்ளி அபிவிருத்தி, கண்காணிப்பு குழு மற்றும் பெற்றோர்களும்
உதவி செய்துள்ளனர். ஊரடங்கிற்கு மத்தியிலும் பாழடைந்த அரசுப் பள்ளியை
புதுப்பொலிவுடன் மாற்றியதற்காக கிராம மக்கள் அவரைப் பாராட்டுகிறார்கள்
Post a Comment