பொருளாதாரத்தில் பின்தங்கிய பொதுப் பிரிவினர், 10 சதவீதம் இட ஒதுக்கீடு பெறுவதற்காக, வருமானம் மற்றும் சொத்து சான்றிதழ் வழங்க வேண்டாம்' என, தாசில்தார்களுக்கு உத்தரவிடும்படி, அனைத்து மாவட்ட கலெக்டர்களுக்கு, வருவாய் நிர்வாக ஆணையர் கடிதம் அனுப்பி இருப்பது, பொதுப் பிரிவினரிடம், கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.பொதுப் பிரிவில், பொருளாதாரத்தில் பின்தங்கியோருக்கு, 10 சதவீதம் இட ஒதுக்கீடு வழங்கும் சட்டத்தை, மத்திய அரசு அமல்படுத்தி உள்ளது.
இச்சட்டத்தின்படி, இவர்கள், கல்வி மற்றும் வேலைவாய்ப்புகளில், 10 சதவீதம் இட ஒதுக்கீடு பெற, வருவாய் துறையிடம், வருமான சான்றிதழ் மற்றும் சொத்து சான்றிதழ் பெற வேண்டும்.தமிழகத்தில், தற்போது நடைமுறையில் உள்ள, இட ஒதுக்கீட்டிற்கான வரம்புக்குள் வராமல், குடும்ப ஆண்டு வருமானம், 8 லட்சம்ரூபாய்க்குள் உள்ளோர், இடஒதுக்கீட்டை பெற தகுதியுடையவர்கள்.அதேநேரம், ஐந்து ஏக்கருக்கு மேல், விவசாய நிலம் வைத்திருப்போர், 1,000 சதுர அடிக்கு மேல், வீட்டுமனை வைத்திருப்போர், இதற்கு தகுதியற்றவர்கள்.மேலும், பட்டியலிடப்பட்ட சில நகராட்சிகளில், 100 சதுர அடிக்கு மேல், வீட்டுமனை வைத்திருப்போர், மற்ற நகராட்சிகளில், 200 சதுர அடிக்கு மேல், வீட்டுமனை வைத்திருப்போரும், இந்த இட ஒதுக்கீட்டை பெற முடியாது.பத்து சதவீத இட ஒதுக்கீட்டு சான்றிதழை பெறுவதற்கான, வருமான சான்றிதழை, அனைத்து குடும்ப உறுப்பினர்களின் வருவாயை கணக்கிட்டே அளிக்க வேண்டும் என, தாசில்தார்களுக்கு, அரசு உத்தரவிட்டுள்ளது.அதன்படி, சான்றிதழ் வழங்கப்பட்டு வந்தது.
இரு தினங்களுக்கு முன், வருமான சான்றிதழ் மற்றும் சொத்து சான்றிதழை, 'ஆன்லைன்' வழியாகவோ, நேரடியாகவோ வழங்க வேண்டாம் என, தாசில்தாருக்கு உத்தரவிடும்படி, அனைத்து மாவட்ட கலெக்டர்களுக்கும், வருவாய் நிர்வாக ஆணையர் ராதாகிருஷ்ணன், கடிதம் அனுப்பி உள்ளார்.இது, பொதுப் பிரிவினரிடம், கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. திடீரென சான்றிதழ் வழங்க வேண்டாம் என உத்தரவிடப்பட்டதற்கான காரணம் வெளியிடப்படவில்லை.
பிராமணர்களை வஞ்சிப்பதா?
அரசின் இம்முடிவுக்கு, உலக பிராமணர் நலச் சங்கத் தலைவர்சிவநாராயணன்,கண்டனம் தெரிவித்துள்ளார்.அவர் கூறியுள்ளதாவது:மத்திய அரசு சட்டத்தை, பல மாநிலங்கள் அமல்படுத்தியுள்ளன. தமிழகத்தில், இதுவரை அமல்படுத்தவில்லை. தமிழக அரசு, எங்களை வஞ்சித்து வருகிறது. பல முறை சங்கம் சார்பில், கடிதம் அனுப்பினோம்;எந்தவித நடவடிக்கையும் எடுக்கவில்லை.இரு தினங்களுக்கு முன், வருமான சான்றிதழை, எந்த தாசில்தாரும் கொடுக்க வேண்டாம் என, உத்தரவிட்டுள்ளது, அதிர்ச்சி அளிக்கிறது.
தமிழகத்தில் மட்டுமின்றி, மத்திய அரசின் கல்வி, வேலைவாய்ப்பை பறிப்பதற்காக, தமிழக அரசு, வேண்டுமென்று திட்டமிட்டு, இந்த சான்றிதழ் கொடுக்கக் கூடாது என, சுற்றறிக்கை அனுப்பி உள்ளது.இவ்வாறு, அவர் கூறியுள்ளார்.
Post a Comment