மாணவர்களின் வீடுகளுக்கே சென்று பாடம் நடத்தி வரும் ஆசிரியர்

இந்த கொரோனா காலத்தில் மாணவர்களுக்கு பாடங்கள் தொடர்பு விட்டுப் போகக்கூடாது என்பதற்காக அவர்கள் இருக்கும் வீடுகளுக்கே சென்று பாடம் நடத்திவருகிறார் ஒரு ஆசிரியர். தஞ்சாவூர் மாவட்டம் ஏனாதி கரம்பை அரசு உயர் நிலைப்பள்ளியில் கணித ஆசிரியராக 12 வருஷமாகப் பணியாற்றிக் கொண்டு வருபவர்தான் அந்த வித்தியாசமான ஆசிரியர் தமிழரசன்.இந்தப் பள்ளியில் படிக்கும் மாணவ மாணவயர் பெரும்பாலும் பக்கத்து கிராமங்களைச் சார்ந்தவர்கள் மேலும் விவசாய பின்னனியைக் கொண்ட எளிமையான குழந்தைகள்.இந்த குழந்தைகள் படித்து நல்ல நிலைக்கு வரவேண்டும் என்பதுதான் இங்குள்ள பல பெற்றோர்களின் கனவு காரணம் அந்த பெற்றோர்கள் பெரும்பாலனவர்களுக்கு படிப்பறிவு இல்லை.இந்த நிலையில் கொரோனா காரணமாக நீண்ட காலமாக பள்ளிகள் மூடிக்கிடப்பதால் பிள்ளைகள் படிக்காமல் இருப்பதைக் கண்டு பெரிதும் வேதனைப்பட்டனர் பெற்றோர்களை விட அதிகம் வருத்தப்பட்டவர் ஆசிரியர் தமிழரசன்தான்.குறிப்பாக ஒன்பதாம் வகுப்பில் இருந்து ஆல் பாஸ் காரணமாக பத்தாம் வகுப்பிற்கு வரக்கூடிய மாணவர்களுக்கு இவ்வளவு நாட்களில் கால்வாசிப்பாடம் நடத்தி இருக்கவேண்டும் ஆனால் இன்னும் பாடப்புத்தகத்தை பார்க்காமல் மாணவர்கள் இருக்கின்றனரே இவர்கள் எதிர்காலத்தை தீர்மானிக்கப் போகும் பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வில் நல்ல மதிப்பெண் எடுக்கவைக்கவேண்டும் என நினைத்தவர் ஒரு முடிவு எடுத்தார்.அதன்படி இவரது டூ வீலரை எடுத்துக் கொண்டு மாணவர்கள் இருக்கும் கிராமத்திற்கு சென்று விடுகிறார் குறிப்பிட்ட இடத்தில் மாணவ மாணவியரை வரவழைத்து அவர்களுக்கு மாஸ்க் கொடுத்து சமூக இடைவெளி கொடுத்து உட்காரவைக்கிறார்.பின்னர் பத்தாம் வகுப்பு பாடத்தை நடத்த ஆரம்பிக்கிறார்.தம் சொந்த செலவில் நோட்டு புத்தகம் மட்டுமின்றி மாஸ்க் மற்றும் பிஸ்கட் பாக்கெட்டும் கொடுத்து அவர்களை உற்சாகத்துடன் படிக்கவைக்கிறார்.இது போல பக்கத்து பக்கத்தில் உள்ள நான்கு கிராமங்களுக்கு சென்று இரண்டு மணி நேரம் ஒவ்வொரு கிராமத்திலும் செலவிட்டு மாலை வரை பாடம் நடத்திவிட்டு பின் தன் வீட்டிற்கு திரும்புகிறார்.தங்கள் கண் எதிரே பிள்ளைகள் பாடம் படிப்பதை பார்க்கும் பெற்றோர்களுக்கு பெரிதும் சந்தோஷம் கிராமத்து சூழலில் சிரமமின்றி படிப்பதால் மாணவர்களுக்கும் சந்தோஷம்.கொரோனா மீது பழியைப் போடாமல் கடமையை முடிந்த வரை செய்வதில் ஆசிரியர் தமிழரசனுக்கு சந்தோஷம்.-எல்.முருகராஜ்.
Post a Comment