Title of the document
`30 நாளில் அரசு வேலை; இல்லைன்னா பணம் வாபஸ்' - அதிர்ச்சி கொடுத்த தேனி அரசுப்பள்ளி தலைமையாசியர்

அரசு வேலை வாங்கித்தருவதாகக் கூறி, தலைமையாசிரியர் ஒருவர் பணம் வாங்கிக்கொண்டு தன்னை ஏமாற்றியதாக, போடியைச் சேர்ந்த நபர் ஒருவர் மாவட்ட கலெக்டரிடம் புகார் அளித்துள்ளார்.

தேனி மாவட்டம் போடியைச் சேர்ந்தவர் அசோகன். இவர் தன் மகனுக்கு வேலை வாங்கித் தருவதாக அரசுப் பள்ளி தலைமையாசியர் அறிவொளி என்பவர் தன்னை ஏமாற்றிவிட்டதாகக் கூறி கலெக்டரிடம் புகார் மனு கொடுத்துள்ளார்.

புகார் கொடுத்துள்ள அசோகன்

புகார் கொடுத்துள்ள அசோகன்

புகார் கொடுத்துள்ள அசோகன்

அசோகனிடம் பேசினோம். ``கடந்த 2018-ம் ஆண்டு போடி மேலச்சொக்கநாதபுரத்தைச் சேர்ந்த அறிவொளி என்பவர் அறிமுகமானார். போடி அருகே உள்ள தர்மத்துப்பட்டி அரசு மேல்நிலைப்பள்ளியில் தலைமையாசிரியராக இருக்கும் அறிவொளி, என் குடும்பத்தைப் பற்றி விசாரித்துவிட்டு, பொறியியல் பட்டதாரியான என் மகன் ராஜேஸ்குமாருக்கு அரசு வேலை வாங்கித்தருவதாகக் கூறினார். இதேபோல, பலருக்கும் அரசு வேலை வாங்கித் தந்திருப்பதாகவும் கூறினார். என்ன வேலை என நான் கேட்க, வனத்துறையில் உயர் பதவி வாங்கித்தருவதாகவும், அதற்கு 18 லட்ச ரூபாய் செலவாகும் எனவும் கூறினார்.

அவ்வளவு பெரிய தொகையை ஒரே நேரத்தில் என்னால் கொடுக்கமுடியாது என்று கூறி, என் மருமகனிடம் 7 லட்சத்து 27,000 ரூபாய் பெற்று, கடந்த 2018 நவம்பர் 3-ம் தேதி அறிவொளியிடம் கொடுத்தேன். பணத்தை வாங்கிக்கொண்டு `30 நாளில் வேலைக்கான ஆர்டர் கொடுக்கிறேன். இல்லையென்றால், பணத்தைத் திருப்பிக் கொடுத்துவிடுகிறேன்’ என்று கூறினார்.

இன்றோடு ஒரு வருடத்துக்கு மேல் ஆகிறது. பணமும் வரவில்லை. வேலைக்கான ஆர்டரையும் கண்ணில் பார்க்க முடியவில்லை. அவரிடம் நேரில் சென்று பலமுறை முறையிட்ட பின்னர், நான் கொடுத்த 7 லட்சத்தில், 3 லட்ச ரூபாயை மட்டும் கொடுத்தார். மீதிப் பணத்தைக் கேட்டபோது கொலை மிரட்டல் விடுத்தார்.

அவரிடம் முதலில் பணம் கொடுத்ததில் இருந்து, கடைசியாக எனக்கு 3 லட்ச ரூபாய் கொடுத்தது வரையில், நான் அவரிடம் பணம் கேட்டு முறையிட்டு அதற்கு அவர் பணம் தருகிறேன் என கூறியது, தொடர்ந்து மிரட்டியது வரை ஆடியோ மற்றும் வீடியோ ஆதாரங்கள் என்னிடம் உள்ளன. அதை அடிப்படையாக வைத்து கலெக்டரிடம் மனு கொடுத்தேன்.

மனுவானது மாவட்ட காவல்கண்காணிப்பாளர் அலுவலகம் மூலமாக, போடி காவல்நிலையம் வந்துள்ளது. போடி காவல் ஆய்வாளர் விசாரிக்கிறார். அரசுப் பள்ளியில் தலைமையாசிரியராக இருந்துகொண்டு இப்படி அரசு வேலை வாங்கித்தருவதாகக் கூறி மோசடியில் ஈடுபடுவது மாவட்டக் கல்வித்துறைக்குத் தெரியுமா அல்லது தெரிந்தும் கண்டுகொள்ளாமல் இருக்கிறதா என தெரியவில்லை.

அவரைப்பற்றி விசாரித்ததில், என்னைப் போல பலரையும் ஏமாற்றியிருப்பது தெரிந்தது. எனக்கு என்னுடைய பணம் வேண்டும். அறிவொளி மீது துறைரீதியான நடவடிக்கை எடுத்து பணி நீக்கம் செய்ய வேண்டும். அப்போதுதான் அரசுப்பணியில் இருந்துகொண்டு மோசடி உட்பட எதுவும் செய்துவிடலாம் என்று நினைப்பவர்களுக்கு தக்க பாடமாக அமையும்” என்றார் வேதனையுடன்.

இது தொடர்பாக விளக்கம் பெற அரசுப்பள்ளி தலைமையாசிரியர் அறிவொளியிடம் போனில் பேசினோம். ``அசோகன் சொல்லும் குற்றச்சாட்டுகளை நான் மறுக்கிறேன்” என்றதோடு முடித்துக்கொண்டார்.

போடி காவல்துறை வட்டாரத்தில் விசாரித்தபோது, ``புகார் கிடைக்கப்பெற்று விசாரணையில் உள்ளது. அரசுப்பள்ளி தலைமையாசிரியர் மீதான புகார் என்பதால், அவருக்கு முறைப்படி சம்மன் அனுப்பி விசாரணைக்கு அழைக்க இருக்கிறோம்” என்றனர்.
# இந்த பயனுள்ள தகவலை அனைவருக்கும் பகிருங்கள் - யாரேனும் ஒருவருக்காவது பயன்படும்...

Post a Comment

Previous Post Next Post