Title of the document
மத்தூர் அரசு மகளிர் மேல்நிலைப்பள்ளி, பத்தாம் வகுப்பு மாணவியரை, டியூசன் சென்டரில், காலாண்டு தேர்வு எழுத வைத்ததால், பெற்றோர் அதிருப்திக்குள்ளாகினர். அரசு உத்தரவை மீறி செயல்பட்ட, ஆசிரியர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர்.கிருஷ்ணகிரி மாவட்டம், மத்தூர் அரசு மகளிர் மேல்நிலைப் பள்ளியில், 98 மாணவியர் பத்தாம் வகுப்பு படித்து வருகின்றனர். பத்தாம் வகுப்பு காலாண்டு தேர்வின் தமிழ் மற்றும் அறிவியல் பாட விடைத்தாள்கள் காணாமல் போனதாகவும், இதனால் பெற்றோரை, மொபைல் போன் மூலம் தொடர்பு கொண்ட ஆசிரியர்கள், மாணவியரை பள்ளிக்கு அழைத்து வருமாறும், மதிப்பெண் பட்டியலில் கையொப்பம் இடவேண்டும் என்றும் தெரிவித்துள்ளனர். அதன்படி நேற்று, 15 பெற்றோர் தங்களது மகள்களை பள்ளிகளுக்கு அழைத்து வந்தனர். பள்ளி வளாகத்தில் நுழைந்த போது, அங்கிருந்த ஒரு ஆசிரியர், மாணவியரை தனியார் டியூசன் சென்டருக்கு செல்லுமாறு அறிவுறுத்தியுள்ளார். அங்கு சென்ற பெற்றோரை, வெளியே நிற்க வைத்துவிட்டு, மாணவியரை மட்டும் உள்ளே அனுமதித்தனர்.அங்கிருந்த தமிழ் ஆசிரியை பத்மபிரியா, அறிவியல் ஆசிரியை சத்யா ஆகிய இருவரும், மாணவியருக்கு விடைத்தாள்களை கொடுத்து தேர்வு எழுத வைத்துள்ளனர். இதையடுத்து, டியூசன் சென்டரை நடத்தி வரும் அரசு மகளிர் மேல்நிலைப்பள்ளி ஆசிரியர் பெருமாளிடம் கேட்ட போது, ''காலாண்டு தேர்வின் தமிழ், அறிவியல் விடைத்தாள்கள் தொலைந்து விட்டது.
அதற்காக, தற்போது மாணவியரை தேர்வு எழுத வைத்துள்ளோம். வேண்டாமென்றால், மாணவியரை வீட்டிற்கு அனுப்பி விடுகிறோம்,'' என, கூறிவிட்டு உள்ளே சென்றவர், மாணவியர் அனைவரையும் வீட்டிற்கு செல்ல உத்தரவிட்டார். இது குறித்து, பள்ளி தலைமை ஆசிரியர் ஆனந்திமாலாவை தொடர்பு கொண்டபோது, அவர் மருத்துவ விடுப்பில் உள்ளதாக தெரிவித்தார்.மத்தூர் மாவட்ட கல்வி அலுவலர் பரிமளா கூறியதாவது: விடைத்தாள்கள் தேவையில்லை என்று, கடந்த வாரம் நடந்த கூட்டத்தில் ஆசிரியர்களிடம் தெரிவிக்கப்பட்டுள்ளது. விடைத்தாள் இல்லையென்றால், அதற்கான விளக்க கடிதம் இருந்தால் போதும்.
தற்போது நடந்துள்ள இச்சம்பவம் எனக்கு தெரியாது. சம்பந்தப்பட்ட ஆசிரியர்களிடம் விளக்கம் கேட்டுள்ளேன். அப்படி தேர்வெழுத வைத்திருந்தால், அவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும். இவ்வாறு அவர் கூறினார்.
# இந்த பயனுள்ள தகவலை அனைவருக்கும் பகிருங்கள் - யாரேனும் ஒருவருக்காவது பயன்படும்...

Post a Comment

Previous Post Next Post