Title of the document
கொாரோனா வைரஸ் தொற்று நோய் பரவுவதால் ஏற்பட்டுள்ள அசாதாரண சூழ்நிலையில் , மாநில அரசின் நிதி நெடுக்கடியினைக் காரணம் காட்டி ஏற்கனவே தமிழக அரசு ஆசிரியர்கள் - அரசு ஊழியர்களின் சரண் விடுப்பு மற்றும் அகவிலைப்படி நிறுத்தி வைப்பு , வருங்கால வைப்புநிதி வட்டி குறைப்பு போன்ற ஆசிரியர் - அரசு ஊழியர் விரோத நடவடிக்கையினை மேற்கொண்டது . தற்போது அரசு ஆசிரியர்கள் - அரசு ஊழியர்கள் அரசுப் பணியிலிருந்து ஓய்வு பெறும் வயதை 58 என்பதிலிருந்து 59 என உயர்த்தி மாண்புமிகு தமிழக முதலமைச்சர் அவர்கள் அறிவித்துள்ளார் . இந்த நடவடிக்கையானது எந்தவகையிலும் மாநில அரசின் நிதி நிலையினை மேம்படுத்தாது என்பதோடு மட்டுமல்லாமல் , ஓராண்டிற்கு தற்போது வழங்க வேண்டிய ஓய்வூதியப் பலன்களைத் தள்ளிப் போடுவதற்கான ஒரு தற்காலிக நடவடிக்கை என்பதுதான் யதார்த்தம் . மேலும் , பதவி உயர்வினை எதிர்நோக்கியுள்ள காத்திருக்கும் ஆசிரியர்கள் - அரசு ஊழியர்கள் ஓராண்டு காத்திருக்க வேண்டிய சூழ்நிலை ஏற்பட்டுள்ளது . தமிழக அரசின் இந்தப் போக்கானது , ஆசிரியர் - அரசு ஊழியர் என்ற சமூகத்தினையும் தாண்டி , தமிழகத்தில் வேலைவாய்ப்பிற்காகக் காத்திருக்கும் இலட்சக்கணக்கான இளைஞர்களின் அரசுப் பணி என்ற கனவினை முற்றிலுமாக ஓராண்டிற்கு முடக்கும் நடவடிக்கை என்பதோடு , தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் ஓராண்டிற்கு எந்தவித பணி நியமன நடவடிக்கையினையும் மேற்கொள்ள இயலாத சூழ்நிலையினை உருவாக்கி உள்ளது . இந்த நடவடிக்கையானது , 2003 ஆம் ஆண்டு தமிழக அரசு வேலை நியமனத் தடைச் சட்டத்தை இயற்றி , ஐந்தாண்டுகளுக்கு அரசின் காலிப் பணியிடங்களுக்கு ஆட்களை தேர்வு செய்வதற்கு தடை விதித்ததைப்போல் , ஓராண்டிற்கு அரசுப் பணிகளுக்கு தடை என்ற ஒரு நிலையினை தமிழக அரசு மறைமுகமாக உருவாக்கி உள்ளது .

ஓய்வுபெற்ற ஐஏஎஸ் அதிகாரி ஆதி சேஷய்யா அவர்கள் தலைமையில் காலிப் பணியிடங்களை தனியார் வசம் ஒப்படைப்பதற்கான ஒரு குழுவினை அரசாணை 56ன் கீழ் அமைத்து , அந்தக் குழு தமிழக அரசிடம் அறிக்கையினை அளித்து , அதற்கான பணியினை தமிழக அரசு முழு வீச்சில் செயல்பட்டுக் கொண்டுள்ளது . தற்போது ஓய்வுபெறும் வயதினை 59 என உயர்த்தி தமிழக அரசு அறிவித்துள்ளது என்பது , காலிப் பணியிடங்களை மொத்தமாக தனியார்வசம் ஒப்படைப்பதற்கான நடவடிக்கைகளை ஓராண்டிற்குள் செய்வதற்கான வழிகளை மேற்கொள்வதற்கான கால அவகாசமாக எண்ண வேண்டியுள்ளது . இதன்மூலம் இந்தியாவிலேயே 69 விழுக்காடு இட ஒதுக்கீட்டின்மூலம் பாதுகாக்கப்பட்டுவரும் சமூக நீதி என்பது கேள்விக்குறியாகி உள்ளது . இளைஞர்களின் வேலைவாய்ப்பினை காத்திடும் வகையிலும் ஆசிரியர் - அரசு ஊழியர் பதவி உயர்வினை பாதுகாக்கும் வகையிலும் , ஆசிரியர் - அரசு ஊழியர் ஓய்வுபெறும் வயதினை ஏற்கனவே உள்ள 58 வயது என நிர்ணயம் செய்து அறிவிப்பு வெளியிட வேண்டும் என மாண்புமிகு தமிழக முதலமைச்சர் அவர்களை ஜாக்டோ ஜியோ கேட்டுக் கொள்கிறது.
# இந்த பயனுள்ள தகவலை அனைவருக்கும் பகிருங்கள் - யாரேனும் ஒருவருக்காவது பயன்படும்...

Post a Comment

Previous Post Next Post