Title of the document
'தனியார் பள்ளிகள், ஆன்லைன் வழியாக, மாணவர்களுக்கு பாடங்கள் நடத்தக் கூடாது,'' என, முதலில் அறிவித்த அமைச்சர் செங்கோட்டையன், ''தனியார் பள்ளிகள் ஆன்லைனில், மாணவர்களுக்கு பாடங்கள் நடத்த தடையில்லை,'' என, மீண்டும் மாற்றி அறிவித்ததால், மாணவர்களும், பள்ளி நிர்வாகத்தினரும் குழப்பம் அடைந்தனர்.

ஊரடங்கு காரணமாக, பள்ளிகள், கல்லுாரிகள், தொடர் விடுமுறையில் உள்ளன. எப்போது பள்ளிகள் திறக்கப்படும் என்பது, இன்னும் உறுதியாகவில்லை. இதனால், ஜூன், 1 முதல், ஆன்லைன் வழியாக மாணவர்களுக்கு வகுப்புகளை நடத்த, தனியார் பள்ளிகள் ஏற்பாடுகள் செய்துள்ளன. புதிய கல்வியாண்டுக்கான கல்வி கட்டணத்தை, ஆன்லைனில் செலுத்தும் படியும், மாணவர்களை பள்ளிகள் வலியுறுத்தி உள்ளன.

நடவடிக்கை

இந்நிலையில், தமிழக பள்ளிக்கல்வி அமைச்சர்,செங்கோட்டையன் அளித்த பேட்டி: பள்ளிகளை திறப்பதற்கு, தற்போது, அரசு அனுமதி அளிக்கவில்லை. எந்த பள்ளியும், ஆன்லைன் வழியாக வகுப்புகள் நடத்தவும், இன்னும் அனுமதி தரப்படவில்லை. அவ்வாறு வகுப்புகள் எடுக்கும் பள்ளிகள் மீது, பள்ளிக் கல்வித்துறை உரிய நடவடிக்கை எடுக்கும்.மேலும், ஊரடங்கு அமலில் உள்ள போது, கல்வி கட்டணம் வசூலிக்கவும் தடை விதிக்கப்பட்டு உள்ளது. அதை மீறி, கட்டணம் வசூலிக்கும் தனியார் பள்ளிகள் மீது, நடவடிக்கை எடுக்கப்படும்.பள்ளிகள் தாமதமாக திறக்கப்படுவதால், பாடத்திட்டத்தை குறைப்பது தொடர்பாக, ஆய்வு செய்ய குழு அமைக்கப்பட்டுள்ளது. அந்தக் குழு தரும் அறிக்கை அடிப்படையில், பாடத்திட்டத்தை குறைப்பது பற்றி முடிவெடுக்கப்படும்.இவ்வாறு, அவர் கூறினார். தெளிவான அறிவிக்கைஅமைச்சரின் இந்த பேட்டி, தொலைக்காட்சிகள் மற்றும் இணைய தளங்களில், உடனே வெளியானது. இந்நிலையில், ஊடக அலுவலகங்களுக்கு, தொலைபேசியில் அமைச்சர் அளித்த பேட்டியில், ''ஆன்லைன் வகுப்புகள் நடத்துவதற்கு எந்த தடையும் இல்லை.

பள்ளிகள் திறக்கப்பட்டு, நேரடி யாக மாணவர்களை வரவழைத்து, வகுப்புகள் நடத்தக் கூடாது என்று தான் அரசு முடிவெடுத்துள்ளது,'' என, விளக்கம் அளித்தார்.சில மணி நேரத்தில், அமைச்சரின் இரண்டு விதமான அறிவிப்புகள் வெளியானதால், பெற்றோர், மாணவர்கள் மற்றும் பள்ளி நிர்வாகிகள் குழப்பம் அடைந்தனர். இதுகுறித்த, தெளிவான அறிவிக்கையை, பள்ளிக் கல்வித்துறை வெளியிட வேண்டும் என, கல்வியாளர்கள் வலியுறுத்தி உள்ளனர்.

பள்ளிகள் திறப்பு எப்போது?அமைச்சர் செங்கோட்டையன் கூறியதாவது:

பிளஸ் 2 விடைத்தாள் திருத்த, ஆசிரியர்கள் அனைவரும், சரியான நேரத்திற்கு வந்து விட்டனர். அதற்கான முழு ஏற்பாடுகளும், தமிழக அரசு சார்பில் செய்யப்பட்டு உள்ளது.பள்ளிகள் திறப்பு குறித்து, நிலைமைக்கேற்ப முதல்வர் முடிவு செய்வார்.

சுழற்சி முறையில், மாணவர்களை வரவழைத்து, பாடம் நடத்துவது குறித்தும், முதல்வர் தலைமையில் உயர்மட்டக்குழு கூட்டம் நடத்தப்பட்டு, பின், முடிவு செய்யப்படும். தனியார் பள்ளிகளுக்கு, கல்வி கட்டணம் நிர்ணயம் செய்வது தொடர்பான குழுவுக்கு, விரைவில், தலைவர் நியமிக்கப்படுவார். இவ்வாறு, அவர் கூறினார்.
# இந்த பயனுள்ள தகவலை அனைவருக்கும் பகிருங்கள் - யாரேனும் ஒருவருக்காவது பயன்படும்...

Post a Comment

Previous Post Next Post