Title of the document
இந்தியாவை உலகின் மருந்தகம் என்று அழைக்கிறார்கள். அதனால்தான் அமெரிக்க அதிபர் டொனால்டு ட்ரம்ப் இந்தியாவிடம் ஹைட்ராக்ஸிகுளோரோகுயின் எனும் மருந்தை ஏற்றுமதி செய்யச் சொல்லிக் கேட்கிறார். இது கொரோனா சிகிச்சைக்கு பயன்படக்கூடும் என்று அவர் நம்புகிறார்.

ஏற்றுமதி செய்யச்சொல்லி மிரட்டும் தொனியில் பேசியிருக்கிறார். அது இருக்கட்டும். அலோபதி மருந்துகளை இந்திய மருந்துக் கம்பெனிகளோ, விஞ்ஞானிகளோ கண்டுபிடிக்கவில்லை. ஆனால், இந்தியா மருந்து உற்பத்தியில் உலகின் முன்னணி நாடாக, உலகின் மருந்தகமாக திகழ்வது எப்படி? இதை சாத்தியமாக்கியவர் யார்?
இன்றைக்கு நாம் பயன்படுத்தும் மருந்துகள் பெரும்பாலானவற்றை கண்டறிந்தது மேற்கத்திய நாடுகள். அவற்றின் காப்புரிமையும் அவர்களிடமே இருந்தது. அந்த கம்பெனிகள், இந்தியாவில் மருந்துகளை விற்பனை செய்து வந்தன. அவை விலை அதிகமானவை. எனவே, மருந்துகள் வசதியானவர்களுக்கு மட்டுமே கிடைத்தது. இந்த நேரத்தில் இந்திராகாந்தி பிரதமராகப் பொறுப்பேற்றார். இந்திய மக்களின் நலம் காக்க, உலகின் வல்லரசுகள் அனைத்தையும் பகைத்துக்கொண்டு ஒரு முடிவெடுத்தார்.

இந்தியாவில், உணவு மற்றும் சுகாதாரம் தொடர்புடைய PRODUCT காப்புரிமைகள் செல்லாது என்று அறிவித்தார். இதனால், இந்திய பயன்பாட்டிற்கு மருந்துகளைத் தயாரிக்கும் சட்டரீதியான உரிமை இந்திய கம்பெனிகளுக்குக் கிடைத்தது. அதாவது, பல்லாண்டு காலமாகப் பெரும் பொருள் மற்றும் உழைப்பின் மூலம் கண்டுபிடித்து காப்புரிமை வாங்கிய மேற்கத்திய கம்பெனிகளின் மருந்துகளை `காப்பி' அடித்து இந்திய கம்பெனிகள் தயாரிக்கலாம். நெறிமுறைகளின்படி தவறான நடவடிக்கை என்றாலும், காப்பியடிப்பது இந்திராகாந்தி கொண்டு வந்த சட்டப்படி சரி. இதனால் மேற்கத்திய நாடுகளுக்கு மிகப்பெரிய பொருளாதார சிக்கல். எனவே, மேற்கத்திய அரசாங்கங்கள் பல அழுத்தங்களைக் கொடுத்தன.
வழக்கம்போல எந்த மிரட்டலுக்கும் அடிபணியவில்லை, இந்திரா காந்தி. எனவேதான் அவர் இரும்புப் பெண்மணி. சட்ட உரிமையை இந்திராகாந்தி கொடுத்தாலும், மருந்துகளைத் தயாரிப்பதில் இந்தியாவுக்கு வேறு சிக்கல் இருந்தது. மருந்துகளைக் காப்பியடித்து தயாரிக்கும் திறமைகூட இந்திய கம்பெனிகளிடம் இல்லை. இந்த இடத்தில் இந்திராகாந்திக்கு கை கொடுத்தது, அவர் தந்தை பண்டித நேரு தொடங்கிய நிறுவனங்கள்,

புனேயில் உள்ள CSIR-National Chemical Laboratory மற்றும் ஹைதராபாத்தில் உள்ள CSIR-Indian Institute of Chemical Technology. இங்கே பணியில் இருந்த விஞ்ஞானிகளை மருந்துகள் தயாரிக்க கேட்டுக்கொண்டார். எளிதான விஷயம் இல்லை என்றாலும், இந்த ஆய்வக விஞ்ஞானிகள் பல மருந்துகளை Reverse Engineering மூலம் தயாரித்து, அதை இந்திய மருந்து கம்பெனிகள் தயாரிக்கவும் பயிற்சி அளித்தனர். இதன் மூலம் இந்திய மருந்துக் கம்பெனிகள் மிகப்பெரிய வளர்ச்சியைப் பெற்றன. இதுதான் Generic Pharma என்பதன் தொடக்கம். இதனால்தான், அமெரிக்காவில் 50 ரூபாய்க்கு கிடைக்கும் Paracetamol, இந்தியாவில் 50 பைசாவுக்கு கிடைக்கிறது. ஹைட்ராக்ஸிகுளோரோகுயினை அனுப்பச் சொல்லி அமெரிக்க அதிபர் கேட்பதற்கும் இந்திரா காந்தி எடுத்த முடிவுதான் காரணம்.
இந்திரா காந்தியின் இந்த அபரிமிதமான துணிச்சல்மிக்க நடவடிக்கையால் இந்தியா உலகின் மருந்தகமாக மாறியது. அதற்கு CSIR-NCL மற்றும் CSIR-IICT விஞ்ஞானிகள் உறுதுணையாக இருந்தனர். எல்லா சாதனைகளுக்குப் பின்னும் UNSUNG HEROES இருப்பார்கள். இந்தச் சாதனைக்குப் பின் இருக்கும் UNSUNG HEROES தமிழர்கள். இந்த மருந்துகளைத் தயாரிக்கும் கொள்கலனில் வேதிப்பொருள்களை வாளிகளில் தூக்கி ஊற்ற வேண்டும். மிகவும் ஆபத்தான பணி. இதற்காகத் தமிழகத்தில் இருந்து ஏறக்குறைய 600 குடும்பங்கள் புனேவுக்கு வந்தன. அவர்களின் வாரிசுகள் இன்றைக்கும் CSIR-NCL-ல் இருக்கிறார்கள்.

இங்கே விஞ்ஞானியாகச் சேர்ந்தபோது, அங்கிருந்த தமிழ் குடும்பங்களைப் பார்த்து ஆச்சர்யமாக இருந்தது. மஹாராஷ்டிராவில் உள்ள இந்த ஆய்வகத்தில் இவ்வளவு தமிழர்கள் எப்படி வேலைக்கு வந்தார்கள் என்ற கேள்வி என் மனதில் எழுந்தது. அவர்களிடம் கேட்டேன், பதிலில்லை. தொடர்ந்து தேடியபோது கிடைத்ததுதான் இந்த வரலாறு. ஒவ்வொரு இந்தியனும் ஒரு மாத்திரையை விழுங்கும்போது, நினைவில் வைக்க வேண்டியது, இந்திராகாந்தி, CSIR விஞ்ஞானிகள், 600 தமிழ் குடும்பங்கள் மற்றும் Generic Pharma கம்பெனிகள்.

பின் குறிப்பு 1: புனேவில் CSIR-National Chemical Laboratory-ல் மாணவராக இருந்த அஞ்சி ரெட்டி தொடங்கியதுதான் உலகப்புகழ் பெற்ற இந்திய மருந்துக் கம்பெனி Dr Reddy's Lab. நாம் பயன்படுத்தும் மாத்திரைகளில் பல Dr Reddy's Lab தயாரித்ததாக இருக்கும்.
பின் குறிப்பு 2: இந்திரா காந்தியின் இந்த அதிரடி நடவடிக்கைக்கு முன் இந்தியா தயாரித்த Active Pharma Intermediate மதிப்பு 20 மில்லியன் அமெரிக்க டாலர்கள். 2005-ம் ஆண்டில் இது 2000 மில்லியன் அமெரிக்க டாலர்களாக ஆக உயர்ந்தது. இன்றைக்கு, உலகின் மருந்து உற்பத்தியில் 12% இந்தியாவினுடையது. இந்திராகாந்திக்கு முன்பு இந்திய மருந்து சந்தையில் சர்வதேச கம்பெனிகளின் பங்கு 70%. 2005-ம் ஆண்டு இந்திய கம்பெனிகளின் பங்கு 77%. நிலைமை தலைகீழாக மாறிவிட்டதைக் கவனியுங்கள்.
பின் குறிப்பு 3: சமீபகாலமாக விண்ணில் நிகழ்ந்தவற்றை விதந்தோதி, மண்ணில் நிகழ்ந்ததை மறந்துவிடும் பழக்கம் வந்துவிட்டதோ என்ற ஐயம் என் போன்றவர்களுக்கு வருகிறது.
# இந்த பயனுள்ள தகவலை அனைவருக்கும் பகிருங்கள் - யாரேனும் ஒருவருக்காவது பயன்படும்...

Post a Comment

Previous Post Next Post