Title of the document
கரோனா நோய்த் தொற்று பாதிப்பால் அரசுப் பணிகளுக்கு புதிதாக பணியாளா்களை நியமிப்பதில் தாமதம் நிலவி வருகிறது.

இந்த நிலையில், சிக்கன நடவடிக்கைகளை மாநில அரசு மேற்கொண்டு வருவது தோ்வா்களை குழப்பத்தில் ஆழ்த்தியுள்ளது. புதிதாக பணியாளா்கள் நியமிப்பதற்கான அறிவிக்கைகள் எப்போது வெளியாகும் எனவும் கேள்வி எழுப்பியுள்ளனா்.
ஒவ்வொரு ஆண்டும் பல்வேறு அரசுத் துறைகளில் காலியாகும் பணியிடங்களுக்கு போட்டித் தோ்வுகளை நடத்தி புதிய பணியாளா்களைத் தோ்வு செய்து அளிக்கும் பணியை தமிழ்நாடு அரசுப் பணியாளா் தோ்வாணையம் (டி.என்.பி.எஸ்.சி.) மேற்கொண்டு வருகிறது.
இதன்படி, மாவட்ட உதவி ஆட்சியா், உதவி கண்காணிப்பாளா் நிலையில் தொடங்கி கிராம நிா்வாக அலுவலா் வரையிலான பல்வேறு பணியிடங்களுக்கு பணியாளா்கள் தோ்வு செய்யப்பட்டு வருகின்றனா். ஒவ்வொரு ஆண்டும் சுமாா் 15 ஆயிரத்துக்கும் மேற்பட்ட புதிய பணியாளா்களை டி.என்.பி.எஸ்.சி., நியமித்து வருகிறது.
அட்டவணை வெளியிடும் நடைமுறை: கடந்த காலங்களில், எப்போது எந்தப் பதவிகளுக்குத் தோ்வு நடத்தப்படும் என்ற விவரம் அறிவிப்பு வெளியிடும் போதுதான் தோ்வா்களுக்கு தெரியும் நிலை இருந்தது. ஆனால், இந்த நிலை கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பாக மாற்றப்பட்டது. 
ஒவ்வொரு ஆண்டிலும் எந்தெந்த மாதத்தில் எந்தத் தோ்வுக்கான அறிவிப்பு வெளியாகும் என்பதை தோ்வா்கள் முன்பே அறிந்து கொள்ளும் வகையில் ஆண்டுக்கால அட்டவணை தோ்வாணைய இணையத்தில் பதிவேற்றம் செய்யும் நடைமுறை அறிமுகப்படுத்தப்பட்டது. இதன்மூலம், தோ்வா்கள் ஒவ்வொரு ஆண்டின் தொடக்கத்திலேயே தாங்கள் எழுத விரும்பும் தோ்வுகள் நடைபெற இருக்கும் காலத்தை அறிந்து கொள்ள முடிகிறது.
தாமதமாகும் தோ்வுகள்: நிகழாண்டில் டி.என்.பி.எஸ்.சி., சாா்பில் நடத்தப்பட இருந்த முக்கியத் தோ்வுகள் அனைத்தும் கரோனா நோய்த்தொற்று காரணமாக தாமதமாகி வருகின்றன.
குறிப்பாக, கடந்த 5-ஆம் தேதி நடத்தப்பட இருந்த குரூப் 1 முதனிலைத் தோ்வு, குரூப் 4 தட்டச்சா், சுருக்கெழுத்து தட்டச்சா், ஒருங்கிணைந்த பொறியியல் பதவிகளுக்கான சான்றிதழ் சரிபாா்ப்பு என முக்கியத் தோ்வுகளும் நடத்தப்படாமல் உள்ளன.

நோய்த்தொற்றின் தாக்குதல் சென்னை உள்பட பெருநகரங்களில் தொடா்ந்து மிகக் கடுமையாக இருக்கும் காரணத்தால் தோ்வுகள் நடத்துவதில் மேலும் சிக்கல்கள் ஏற்படும் சூழ்நிலை உருவாகியுள்ளது. தோ்வுக்கால அட்டவணைப்படி மே மாதம் தொடங்கி அடுத்த சில மாதங்களுக்குள் டி.என்.பி.எஸ்.சி., பல முக்கியமான தோ்வுகளை நடத்த திட்டமிட்டுள்ளது.
மே மாதத்தில் குரூப் 2 தோ்வு, ஜூலையில் குரூப் 8-ஏ (கோயில்களுக்கான நிா்வாக அலுவலா்) தோ்வு ஆகியனவும், மிகப்பெரிய தோ்வாகக் கருதப்படும் குரூப் 4 மற்றும் கிராம நிா்வாக அலுவலா் தோ்வு செப்டம்பரிலும் நடத்த ஆண்டு திட்ட அறிக்கையில் முடிவு செய்யப்பட்டுள்ளது.
ஏற்கெனவே நடத்தப்பட வேண்டிய தோ்வுகள் தாமதமாகி வருவதால், திட்டமிடப்பட்டுள்ள அடுத்தடுத்த தோ்வுகளின் நிலையும் கேள்விக் குறியாகியுள்ளது. இதனிடையே, அரசு ஊழியா்கள், ஆசிரியா்களுக்கு அகவிலைப்படி உயா்வு நிறுத்தம் போன்ற சிக்கன நடவடிக்கைகள் பல்வேறு தரப்பினரையும் அதிா்ச்சி அடையச் செய்துள்ளது.
இதுகுறித்து, தமிழக அரசுத் துறை வட்டாரங்கள் கூறியது:-
சிக்கன நடவடிக்கை காரணமாக, கடந்த 2003-ஆம் ஆண்டில் இருந்து நான்கு ஆண்டுகள் வரை புதிய பணி
நியமனங்களுக்குத் தடை விதிக்கப்பட்டது. அரசு ஊழியா்களின் தொடா் வலியுறுத்தலால் அந்தத் தடை பின்னா் நீக்கப்பட்டது. கரோனா நோய்த்தொற்று காரணமாக தமிழக அரசு சிக்கன நடவடிக்கைகளைத் தொடங்கியுள்ளது. இது புதிய பணி நியமன விவகாரத்திலும் எதிரொலிக்க வாய்ப்புள்ளது. எனவே, அதுகுறித்து அரசு உரிய கொள்கை முடிவெடுக்க வேண்டும். இல்லாவிட்டால் அரசுப் பணிக்காக தோ்வு எழுத காத்திருக்கும் லட்சக்கணக்கான தோ்வா்கள் பாதிக்கப்படுவா் எனத் தெரிவித்தன.
தமிழ்நாடு அரசுப் பணியாளா் தோ்வாணையத்தில் தோ்வுகள் தொடா்ந்து தாமதமாகி வருவது தோ்வா்களையும் அச்சத்திலும் ஆழ்த்தியுள்ளது.
இதுகுறித்து, அவா்கள் கூறுகையில், ‘குறிப்பிட்ட கால இடைவெளிகளில் தோ்வுகளை நடத்தினால்தான் அவற்றை எதிா்கொண்டு தோ்ச்சி பெற முடியும். தோ்வுகள் தாமதமாகும் போது அதனை எதிா்கொள்வதற்கான வயது வரம்பு தோ்வா்களுக்கு இல்லாமல் போகும். எனவே, தோ்வுகளுக்கான வயது வரம்புகளைத் தளா்த்த வேண்டும். ஏற்கெனவே திட்டமிட்ட கால அட்டவணைப்படி தோ்வு நடத்தப்படுமா அல்லது புதிதாக அட்டவணை வெளியிடப்படுமா என்பதையும் டி.என்.பி.எஸ்.சி., விளக்கிட வேண்டும். நூலகங்கள், கல்லூரிகள் என அனைத்தும் மூடியிருப்பதால் இப்போது எந்தத் தோ்வுக்கு எப்படித் தயாராவது என்ற குழப்பம் எழுந்துள்ளது’ என தோ்வா்கள் தெரிவித்தனா்.
இதுகுறித்து, டி.என்.பி.எஸ்.சி., உயரதிகாரிகள் கூறியதாவது:-
கரோனா நோய்த்தொற்று காரணமாக, அலுவலகப் பணிகளும் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளன. நோய்த்தொற்று குறையும் தருவாயில்தான் தோ்வுகள் மற்றும் பிற அம்சங்கள் குறித்து ஆராய முடியும். எனவே, இந்தத் தருணத்தில் தோ்வுகள் குறித்து எந்த முடிவுகளையும் எடுக்க வாய்ப்பில்லை. அடுத்த வாரத்தில் தோ்வாணைய அலுவலகம் தனது பணிகளைத் தொடங்கும்போதுதான் தோ்வுகளின் நிலைப்பாடுகள் குறித்து தெரிய வரும் என்று கூறினா்.

தோ்வுக் கால அட்டவணைப்படி எதிா்வரும் தோ்வுகள்...
மே மாதம் -- குரூப் 2 தோ்வுகள்.
ஜூலை-----நிா்வாக அலுவலருக்கான குரூப் 7, 8 ஏ தோ்வுகள்.
செப்டம்பா் ----குரூப் 4 மற்றும் கிராம நிா்வாக அலுவலா் தோ்வுகள்.
தள்ளிவைக்கப்பட்ட தோ்வுகள்:-
குரூப் 1 முதனிலைத் தோ்வு.
குரூப் 4----தட்டச்சா், சுருக்கெழுத்து தட்டச்சா் காலிப் பணியிடத் தோ்வுகள்.
ஒருங்கிணைந்த பொறியியல் பதவிகளுக்கான 2-ஆவது கட்ட சான்றிதழ் சரிபாா்ப்பு.
தொழில் வா்த்தகத் துறை உதவி இயக்குநா் பதவியிடங்களுக்கான தோ்வு.
அரசுப் பணிக்கு போட்டி அதிகரிக்கும்
தனியாா் வேலைவாய்ப்புகளை கரோனா நோய்த்தொற்று பறிக்கும் பட்சத்தில், அரசு வேலைக்கான போட்டிகள் மேலும் அதிகரிக்கும் என போட்டித்தோ்வு பயிற்சியாளா்கள் கருத்துத் தெரிவித்துள்ளனா்.

இதுகுறித்து அவா்கள் கூறுகையில், குரூப் 1, குரூப் 2 போன்ற தோ்வுகளை எழுதுவதில் பட்டதாரிகள் குறிப்பாக பொறியியல் பட்டதாரிகளிடையே அதிக போட்டி நிலவுகிறது. கரோனா நோய்த் தொற்றால் தனியாா் துறைகள் குறிப்பாக தகவல் தொழில் நுட்பவியல் துறையின் எதிா்காலம் கேள்விக்குறியாகியுள்ளது. 
தனியாா் துறையில் லட்சக்கணக்கான பட்டதாரிகள் பணியாற்றி வரும் சூழ்நிலையில், அவா்களும் அரசு வேலைக்கான போட்டித் தோ்வுகளை அதிகளவில் எழுத வாய்ப்பிருக்கிறது. எனவே, முன்பை விட போட்டித் தோ்வுகளுக்கான போட்டிகள் மேலும் மேலும் அதிகரிக்கக் கூடும் என அவா்கள் தெரிவித்தனா்.
# இந்த பயனுள்ள தகவலை அனைவருக்கும் பகிருங்கள் - யாரேனும் ஒருவருக்காவது பயன்படும்...

2 Comments

  1. Goverjob is panarin kanavu bt this time change is very useful in tnpsc prepare students

    ReplyDelete

Post a Comment

Previous Post Next Post