Title of the document
கொரோனா தாக்கம் ஆகஸ்டு மாதம் வரை நீடிக்கும் என்றும், கல்லூரிகளில் அடுத்த கல்வியாண்டுக்கான வகுப்புகள் செப்டம்பரில் தொடங்கலாம் என்றும் பல்கலைக்கழக மானியக்குழு அமைத்த குழுவினர் பரிந்துரை செய்திருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. 
  குழுக்கள் ஆலோசனை 
  கொரோனா நோய்த் தொற்றால் நாடு முழுவதும் ஊரடங்கு உத்தரவு அமலில் உள்ளது. இதனால் பள்ளி, கல்லூரிகள் மூடப்பட்டு இருக்கின்றன. கல்லூரி இறுதி செமஸ்டர் தேர்வுகளும், நுழைவுத் தேர்வுகளும் தள்ளிவைக்கப்பட்டுள்ளன. 
  இந்த நிலையில் கல்லூரி இறுதி செமஸ்டர் தேர்வுகள் நடத்துவது எப்போது? எப்படி? என்பது குறித்தும், அடுத்த கல்வியாண்டுக்கான வகுப்புகள் எப்போது தொடங்கலாம்? என்பது குறித்தும், நுழைவுத்தேர்வுகள் எப்போது நடத்தலாம்? என்பது குறித்தும் ஆராய 7 பேர் கொண்ட 2 குழுக்களை பல்கலைக்கழக மானியக்குழு அறிவித்தது. 
  அறிக்கை தாக்கல் 
  இந்த குழுக்கள் கடந்த சில நாட்களாக தொடர்ந்து ஆலோசனை மேற்கொண்டு தாக்கல் செய்த அறிக்கையில், கொரோனா வைரஸ் தாக்கம் ஆகஸ்டு மாதம் வரை நீடிக்கும் என்பதால் பல்கலைக்கழகங்கள், கல்லூரிகளில் அடுத்த கல்வியாண்டுக்கான வகுப்புகளை ஜூலை மாதத்துக்கு பதில் செப்டம்பரில் தொடங்கலாம் என்றும், கொரோனா வைரஸ் தாக்கத்தைப் பொறுத்து நீட், ஜே.இ.இ. உள்ளிட்ட நுழைவுத் தேர்வுகளை ஜூன் மாதத்தில் நடத்தலாம் என்றும் பரிந்துரைத்து இருப்பதாக கூறப்படுகிறது.
  செமஸ்டர் தேர்வுகள் எப்போது? 
  அதுமட்டுமில்லாமல் கல்லூரிகளில் ஒத்திவைக்கப்பட்டுள்ள செமஸ்டர் தேர்வுகளை உள்கட்டமைப்பு வசதிகள் கொண்ட பல்கலைக்கழகங்கள் மற்றும் கல்லூரிகள் ஆன்லைனிலேயே நடத்திக்கொள்ளலாம் என்றும், பிற உயர்கல்வி நிறுவனங்கள் ஊரடங்கு முடிந்த உடன், சூழலைப் பொறுத்து நேரடி எழுத்துத் தேர்வாக நடத்தலாம் என்றும் இந்த குழுக்கள் பரிந்துரை செய்துள்ள தகவல்களும் வெளியாகியுள்ளன. 
  இந்த 2 குழுக்களின் பரிந்துரைகளை அப்படியே ஏற்பது இயலாத காரியம் என்றாலும், அதுகுறித்து முக்கிய முடிவுகளை எடுக்க இருப்பதாகவும் மத்திய மனிதவள மேம்பாட்டு அமைச்சகம் தெரிவித்து இருக்கிறது. மே மாதம் 3-ந்தேதி வரை ஊரடங்கு அமலில் இருக்கிறது. அதன் பிறகு ஊரடங்கு தொடர்பாக அரசின் அடுத்த அறிவிப்பை பொறுத்து புதிய அறிவிப்பை பல்கலைக்கழக மானியக்குழு வெளியிடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. 
# இந்த பயனுள்ள தகவலை அனைவருக்கும் பகிருங்கள் - யாரேனும் ஒருவருக்காவது பயன்படும்...

Post a Comment

Previous Post Next Post