பாழடைந்த பள்ளி இப்போது பளபள...
ராஜஸ்தானில் கொரோனாவுக்காக தனிமைப்படுத்தப்பட்ட வெளிமாநில
தொழிலாளர்கள் தங்களுக்கு புகலிடம் அளித்த கிராம மக்களுக்கு நன்றி செலுத்த,
அங்கிருந்த பள்ளியை அழகுபடுத்திய சம்பவம் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
கொரோனா பரவலை தடுக்க, நாடு முழுவதும் ஊரடங்கு உத்தரவு அமல்படுத்தப்பட்டு
உள்ளது. இதனால், பல்வேறு மாநிலங்களில் இருந்து புலம் பெயர்ந்து வந்து
ராஜஸ்தான் மாநிலத்தில் தங்கியுள்ள பலர் சொந்த ஊருக்கு செல்ல முடியாது நிலை
ஏற்பட்டது.
இதனால், அரியானா, உத்தரபிரதேசம், மத்திய பிரதேசத்தில் இருந்து பணி
நிமித்தமாக வந்த 54 பேர், இங்குள்ள சிகார் மாவட்டத்தின் பல்சானா
கிராமத்தில் உள்ள பழமையான அரசு சீனியர் மேல்நிலைப் பள்ளியில் தங்க
வைக்கப்பட்டு உள்ளனர். அவர்களுக்கு கொரோனா அறிகுறி எதுவும் இல்லாத
நிலையிலும், அவர்களை 14 நாள்கள் தனிமைப்படுத்தி வைத்திருக்க ஊர் பஞ்சாயத்து
உத்தரவிட்டது.
மேலும், அந்த தொழிலாளர்களுக்கு சிறப்பான உணவு மற்றும் மருத்துவ
உதவிகளையும் வழங்கி வருகிறது. தாலுகாவில் இருந்து மருத்துவ குழுவும் வந்து
அவர்களுக்கு அடிக்கடி மருத்துவ சோதனையும் செய்தது. கையில் காசில்லாத
நிலையிலும் தங்களுக்கு ஊர் பஞ்சாயத்து வழங்கிய உபசரிப்பால் மகிழ்ந்த
தொழிலாளர்கள், அந்த ஊருக்கு எதாவது நன்மை செய்ய வேண்டும் என நினைத்தனர்.
எனவே, பழமையான அந்த பள்ளி பல ஆண்டுகளாக பெயின்ட் அடிக்காமல் இருப்பதை கண்டு
கவலை அடைந்தனர். இதையடுத்து அந்த பள்ளியை வண்ணமயமான பெயின்ட் அடித்து
அழகுப்படுத்தினர், பள்ளியில் சேதமடைந்திருந்த கட்டிடங்களை சீரமைத்தனர்.
சுத்தமின்றி காணப்பட்ட காம்பவுண்ட் சுவரையும் ஒட்டடை அடித்து
சுத்தம் செய்தனர். அழகான பூச்செடிகளையும் பள்ளியில் நட்டு வைத்து
அசத்தியுள்ளனர். இப்போது அந்த பள்ளிக்கூடமே புதுப்பொலிவுடன் காணப்படுகிறது.
ஊரடங்கால் கடைகள் மூடப்பட்டு இருந்தாலும், அதன் உரிமையாளர்கள் இந்த நல்ல
சேவைக்காக பொருட்களை எடுத்து கொடுத்து உதவினர். இதற்காக பள்ளி முன்னாள்
மாணவர்களிடம் இருந்து வசூலிக்கப்பட்ட 1.15 லட்சம் செலவிடப்பட்டதாக இந்த ஊர்
பஞ்சாயத்து தலைவர் ரூப் சிங் செகாவத் தெரிவித்தார்.
Post a Comment