அலுவலகமாக மாறும் வீடுகள்
கரோனா பரவலால் கொண்டுவரப்பட்டுள்ள ஊரடங்கு காரணமாக நிறுவனங்கள் பலவும் அதன்
ஊழியர்களை வீட்டில் இருந்தே பணிபுரியக் கேட்டுக்கொண்டுள்ளன.
இது தற்காலிகமானது என்றாலும், இந்தச் சூழல் உண்டாக்கும் சில விளைவுகள்
ஒட்டுமொத்த பணிச்சூழலில் பல்வேறு மாற்றங்களை ஏற்படுத்தப்போகிறது.
அலுவலகத்திலேயே தன் வாழ்நாளின் முக்கால்வாசி நேரத்தை செலவிடும் இந்தியச்
சமூகத்துக்கு வீட்டிலிருந்தே பணிபுரிவது புதிய அனுபவமாக இருக்கிறது.
வேலையே இல்லாவிட்டாலும் அலுவலகத்துக்கு வர வேண்டும் என்று கூறும்
நிறுவனங்கள், வீட்டு சூழலிலிருந்து தப்பிக்க வேலைக்கு வரும் ஊழியர்கள்
என்று இருந்த சூழல் இனியும் அப்படியே தொடருமா என்பது சந்தேகம்தான். சமூக
வலைதளங்களில் வீட்டிலிருந்து பணிபுரிவது தொடர்பாக வரும் மீம்களையெல்லாம்
பார்க்கையில் அதை உணர முடிகிறது.
வழக்கமான வேலைச் சூழலில், காலையில் சீக்கிரமாக எழுந்து, அவசர அவசரமாக
தயாராகி, காலை உணவை சாப்பிட்டும் சாப்பிடாமலும் பஸ், ரயிலைப் பிடித்து
கூட்ட நெரிசலில் வியர்த்து விறுவிறுத்து அலுவலகத்தை அடையும்போது பாதி ஜீவன்
போயிருக்கும்.
சென்னை போன்ற பெருநகரங்களில் அலுவலகத்தை நோக்கிய பயணம் மட்டுமே சராசரியாக
இரண்டு மணி நேரத்துக்குக் குறையாமல் இருக்கிறது. பலர் நான்கு மணி நேரம்
பயணத்தை தினசரி மேற்கொள்கின்றனர். அந்தவகையில் அலுவலக வேலை நேரம் ஒரு
நாளைக்கு 9 மணி நேரம் என்றால், அலுவலகம் சார்ந்து ஒரு நாளைக்கு 13 மணி
நேரம் செலவிடுகின்றனர்.
நன்றி தி இந்து தமிழ் திசை 1313/04/2020
மீதமிருக்கும் நேரம் தூங்குவதற்கும், மீண்டும் அலுவலகம் கிளம்பவும்தான்
சரியாக இருக்கும். இந்தச் சூழலில் அலுத்துப்போனவர்களுக்கு வீட்டிலிருந்து
பணி புரிதல் என்பது பெரும் ஆசுவாசத்தை தரக்கூடிய ஒன்றாக இருக்கிறது. பயண
நேரம் முழுதும் சேமிப்பாகி விடுகிறது; குடும்பத்தினருடன் கூடுதல் நேரம்
செலவிட முடிகிறது; பணிகளை நிதானமாக மேற்கொள்ள முடிகிறது.
லுங்கி பனியனுடன் சமையலறையில் ஒருவர் சமைத்துக்கொண்டே, காதில்
அலுவலகத்துடன் பேசுவதற்கு ஹெட்ஃபோன் மாட்டிகொண்டிருக்கிறார். பெரும்பாலான
வீடுகளில் இன்று இதுதான் சூழல். தற்போது பல குடும்பங்களில் அண்ணன், தங்கை,
கணவன், மனைவி என ஆளாளுக்கு லேப்டாப்களைத் திறந்து வைத்து வீட்டையே
அலுவலகமாக மாற்றியுள்ளனர்.
இது குறுகிய காலத்துக்கு மட்டும் நீடிக்கும் என்ற மனநிலையில் சிலருக்கு இது
ஜாலியான அனுபவமாக இருக்கிறது. சிலருக்கு இந்தச் சூழலும் மன அழுத்தத்தைத்
தரக்கூடியதாக இருக்கிறது என்பதையும் ஒப்புக்கொள்ள வேண்டும்.
வீட்டுச் சூழலிலிருந்து தப்பிப்பதற்காகவே அலுவலகம் செல்பவர்கள் விடுமுறை
நாட்களையே வேண்டா வெறுப்பாக பார்ப்பார்கள். சிலருக்கு அலுவலகம்
சென்றால்தான் வேலைபார்க்கும் மனநிலையே வரும். சிலர் வேலை நேரத்தையும்
குடும்பத்துக்கான நேரத்தையும் சரியாகக் கையாளத் தெரியாமல் திணறுகின்றனர்.
இது தவிர, வீட்டிலிருந்து வேலைப் பார்ப்பதற்கான வசதிகள் இல்லாததும் ஒரு
பிரச்சினை. விளைவாக, உரிய நேரத்தில் பணிகளை முடிப்பதில் நெருக்கடியை
எதிர்கொள்கின்றனர். அலுவலகத்தில் 9 மணி நேரம் வேலை பார்ப்பவர்கள், தற்போது
12 மணி நேரம் அலுவலகம் தொடர்பான பணிகளில் இருப்பதாக உணர்கின்றனர்.
பொதுவாக வீட்டில் இருந்து வேலை பார்ப்பது என்பது ஏதோ விதத்தில் தனி மனித
திட்டமிடலைக் கோரக் கூடியதாகவே இருக்கிறது.
ஆனால், நிறுவனங்கள் பார்வையில் பார்க்கையில், நீங்கள் படுத்துக்கொண்டோ
தலைகீழாக நின்றுகொண்டோ வேலை பாருங்கள்; அன்றைக்கு முடிக்க வேண்டிய வேலைகளை
முடிக்க வேண்டும் என்பதுதான் நிறுவனங்கள் விதிக்கும் கெடு. அது
நிறைவேறும்பட்சத்தில் பெரும்பாலான நிறுவனங்கள் இந்தச் சூழலை இப்படியே தொடர
வாய்ப்புள்ளது.
இதனால் நிறுவனங்களின் செலவுகள் பெருமளவு குறையும் என்பது ஒரு
பலன்.இந்தியாவில் செயல்படும் நிறுவனங்கள், வீட்டில் இருந்து பணி
புரிவதற்கான முழுக்கட்டமைப்பைக் தற்போது கொண்டிருக்கவில்லை. ஆனால்,
விரைவிலேயே அதற்கான கட்டமைப்பை அவை உருவாக்கும்.
ஆனால், வீட்டிலிருந்து பணி புரிதல் என்பது கணினி மற்றும் இணையம் மூலம்
செய்து முடிக்கப்படும் வேலைகளுக்கு மட்டுமே சாத்தியப் பட்டது.
உற்பத்தித் துறை உள்ளிட்ட நேரடியாக வேலை இடத்தில் இருக்க வேண்டியவர்களுக்கு
இந்த வாய்ப்பு இல்லை. அத்துறை சார்ந்த ஊழியர்கள், இனி வேலையே இருக்குமா
இருக் காதா என்ற கவலையில் இருக்கின்ற னர். எது எப்படியோ கரோனாவுக்குப்
பிறகு வேலை சார்ந்த சூழல் நிச்சயம் பெரும் மாற்றத்துக்கு உள்ளாகும் என்பது
மட்டும் உறுதி.
Post a Comment