Title of the document
சென்னை: கொரோனா வைரஸ் பிரச்னைக்கு மத்தியில், குறித்த காலத்தில் கல்வி கட்டணம் செலுத்தும்படி, தனியார் பள்ளிகள் நெருக்கடி தருகின்றன. அதனால், கூடுதல் அவகாசம் வழங்க, பெற்றோர் கோரிக்கை விடுத்துள்ளனர்.
அத்தியாவசிய தேவை
கொரோனா வைரஸ் பரவலை தடுக்கும் வகையில், நாடு முழுவதும் ஊரடங்கு அமல்படுத்தப் பட்டுள்ளது. ஏப்., 14 வரை, அத்தியாவசிய தேவைகள் தவிர, மற்ற அனைத்து நிறுவனங்களுக்கும், விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. இதன் காரணமாக, பல்வேறு துறை தொழிலாளர்கள் மற்றும் தனியார் நிறுவன ஊழியர்களுக்கு, வருவாய் பற்றாக்குறை ஏற்பட்டுள்ளது. 

தனியார் நிறுவனங்களுக்கான வருமானமும் தடைபட்டுள்ளது. இதனால், வங்கிகள் தரப்பில் பல்வேறு சலுகைகள் வழங்கப்பட்டுள்ளன. கடன்களுக்கான தவணைகளை செலுத்த, மூன்று மாதம் வரை அவகாசம் தரப்பட்டுள்ளது. இந்நிலையில், தனியார் பள்ளிகள் தரப்பில், வரும் கல்வி ஆண்டுக்கான கட்டணத்தை, ஏப்., 14க்குள் செலுத்தும்படி, பெற்றோருக்கு நெருக்கடி தரப்படுவதாக, புகார் எழுந்துள்ளது. பல பள்ளிகள் ஏற்கனவே முன்னறிவிப்பு செய்துள்ளன. 

மன உளைச்சல்
தற்போது, ஊரடங்கு அமலில் இருந்தாலும், கல்வி கட்டணத்தை பள்ளிக்கு வந்து செலுத்த வேண்டாம். அதற்கு பதிலாக, பள்ளிகளின் இணையதளத்தில் குறிப்பிட்டுள்ள ஆன்லைன் வழியே, கட்டணத்தை உரிய காலத்துக்குள் கட்டாயம் செலுத்த வேண்டும் என, பெற்றோருக்கு, எஸ்.எம்.எஸ்., அனுப்பப் பட்டுள்ளன. இந்த நெருக்கடி, பெற்றோருக்கு மன உளைச்சலை ஏற்படுத்தியுள்ளது. ஊரடங்கு அமலில் உள்ள நிலையில், பள்ளிகள் தரப்பில் கட்டணம் செலுத்துவதற்கான அவகாசத்தை நீட்டிக்க வேண்டும் என்ற, கோரிக்கை எழுந்துள்ளது.

இதுதொடர்பாக, பள்ளி கல்வித்துறை அதிகாரிகள் விசாரித்து, கட்டணம் வசூலிப்பில் தீவிரம் காட்டும் பள்ளிகள் மீது, நடவடிக்கை எடுக்க வேண்டுமென, பெற்றோர் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.
# இந்த பயனுள்ள தகவலை அனைவருக்கும் பகிருங்கள் - யாரேனும் ஒருவருக்காவது பயன்படும்...

Post a Comment

Previous Post Next Post