முதுநிலை படிப்பை முடித்துவிட்டு பி.எச்டி. ஆராய்ச்சி
படிப்பு படிக்க விரும்பும் மாணவர்களுக்கு ஜுனியர் ரிசர்ச் பெல்லோஷிப்
(ஜெ.ஆர்.எப்.), சீனியர் ரிசர்ச் பெல்லோஷிப் (எஸ்.ஆர்.எப்.) உதவித்தொகைகள்
வழங்கப்படுகின்றன. இதற்கு பல்கலைக்கழக மானியக்குழு அல்லது சி.எஸ்.ஐ.ஆர்.
ஆய்வு நிறுவனம் நடத்தும் சிறப்புத்தேர்வில் வெற்றிபெற வேண்டும்.
அதன்படி, இதுவரை ஜெ.ஆர்.எப். கல்வி உதவித்தொகை
திட்டத்தின் கீழ் மாதம்தோறும் ரூ.12 ஆயிரமும், எஸ்.ஆர்.எப். திட்டத்தின்
கீழ் மாதம்தோறும் ரூ.14 ஆயிரமும் வழங்கப்பட்டு வந்தது. உதவித்தொகை தவிர
புத்தகம் மற்றும் இதர செலவினங்களுக்காக ஆண்டுக்கு ரூ.20 ஆயிரம் தனியாக
வழங்கப்பட்டது. தொடர்ந்து 3 ஆண்டுகளுக்கு உதவித்தொகை பெறலாம்.
இந்த நிலையில், பி.எச்டி. படிக்கும் மாணவ-மாணவிகளின்
நலனை கருத்தில் கொண்டு உதவித்தொகையை யு.ஜி.சி. ரூ.4 ஆயிரம் உயர்த்தி
உள்ளது. அதன்படி, ஜெ.ஆர்.எப். உதவித்தொகை திட்டத்தில் ரூ.16 ஆயிரமும்,
எஸ்.ஆர்.எப். திட்டத்தில் ரூ.18 ஆயிரமும் கிடைக்கும். ஏற்கனவே ஓராண்டுக்கு
வழங்கப்பட்டு வந்த புத்தகம் மற்றும் இதர செலவினங்களுக்கான ரூ.20 ஆயிரம்
தொடர்ந்து அளிக்கப்படும் என்று யு.ஜி.சி. அண்மையில் புதிய உத்தரவை
பிறப்பித்து உள்ளது.
சி.எஸ்.ஐ.ஆர். மற்றும் யு.ஜி.சி. ஜெ.ஆர்.எப்.,
எஸ்.ஆர்.எப். உதவித்தொகை தற்போது குறைந்த எண்ணிக்கையிலேயே வழங்கப்பட்டு
வருகிறது. உதவித்தொகை பெறுவோரின் எண்ணிக்கையை இன்றைய சூழ்நிலைக்கு ஏற்ப
அதிகரிக்க வேண்டும் என்று தேர்வு எழுதி வரும் மாணவ-மாணவிகள் யு.ஜி.சி.க்கு
கோரிக்கை விடுத்துள்ளனர்.
Post a Comment