Title of the document
திருவண்ணாமலை மாவட்டம், வேங்கிக்கால் ஓம் சக்தி நகரில் வசித்து வரும் சுரேஷ், சூரியகாந்தி தம்பதியினரின் மகள் கோபிகா (9) திருவண்ணாமலை கேந்திரிய வித்யாலயா பள்ளியில் 4-ம் வகுப்பு படித்து வருகிறார். கடந்த ஓராண்டாகத் தனது உண்டியலில் நாணயங்களைச் சேமித்து வந்துள்ளார்.
இந்நிலையில், தமிழக அரசு கொரோனா நிவாரண நிதிக்கு பொதுமக்களிடம் நிதியுதவி, பொருள் பெற்று வருவதை அறிந்த கோபிகா, தான் சேமித்து வைத்த உண்டியல் தொகையை மாவட்ட ஆட்சியரிடம் நேரில் சந்தித்து வழங்க ஆசைப்படுவதாகத் தன் பெற்றோரிடம் கூறியுள்ளார். இதன் அடிப்படையில் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் 20.4.2020 அன்று மாவட்ட ஆட்சியரை நேரில் சந்தித்து கோபிகா தனது உண்டியல் சேமிப்புத் தொகையை வழங்கினார்.

அப்போது, மாவட்ட ஆட்சியர் கோபிகாவை பாராட்டிவிட்டு `இந்தத் தொகையை நான் சொல்லும் ஏழை மாற்றுத்திறனாளி பெண்ணுக்கு உனது கைகளால் வழங்க வேண்டும்’ எனக் கூறிவிட்டு நேற்று (21.4.2020) இரவு 7 மணி அளவில் கோபிகாவை அழைத்துக்கொண்டு திருவண்ணாமலை டவுனில் உள்ள மாற்றுத்திறனாளி பெண் சுகுணா என்பவரின் வீட்டுக்கு அழைத்துச் சென்றார். அங்கு உண்டியல் சேமிப்புத் தொகையைக் கோபிகாவின் கைகளால் வழங்கச் செய்தார்.
அதோடு கோபிகாவின் மனிதாபிமானத்தைப் போற்றும் வகையில் அவருக்குப் பாராட்டுச் சான்றிதழ் வழங்கிவிட்டு, தனது இருக்கையிலும் அமர வைத்தார் ஆட்சியர் கந்தசாமி.
கலெக்டரின் செயலால் உதவி பெற்ற ஏழை மாற்றுத்திறனாளி சுகுணா (32), பிறவியிலேயே நடக்க இயலாதவர். இவரின் தந்தை இறந்துவிட்டார். சுகுணா தன் தாய் மற்றும் தம்பியுடன் வசித்து வருகிறார். சுகுணாவின் அக்கா மற்றும் தங்கை இருவருக்கும் திருமணம் ஆகிவிட்டது.

சுகுணாவிடம் பேசினோம். ``எங்கள் அப்பா வண்டி மாடு ஓட்டி எங்கள் குடும்பத்தைக் காப்பாற்றி வந்தார். அப்பாவின் இறப்புக்குப் பிறகு, என் தம்பி எங்கள் குடும்பத்தை வண்டி மாடு ஓட்டி கஷ்டப்பட்டுக் காப்பாற்றி வருகிறார். 
இந்த நிலையில் மாணவி குழந்தை கோபிகா இன்று எங்கள் வீட்டுக்கு கலெக்டருடன் நேரில் வந்து அவரது உண்டியல் சேமிப்பினை அளித்தது ரொம்ப சந்தோஷமாக உள்ளது. கஷ்டப்படும் நேரத்தில் அந்த கடவுளே குழந்தை கோபிகா வடிவில் எங்கள் குடும்பத்திற்கு உதவி செய்துள்ளார்" என்றார் நெகிழ்ச்சியுடன்
# இந்த பயனுள்ள தகவலை அனைவருக்கும் பகிருங்கள் - யாரேனும் ஒருவருக்காவது பயன்படும்...

Post a Comment

Previous Post Next Post