இன்று தமிழகமே உற்று நோக்கும் நபராக மாறியிருக்கிறார் சுகாதாரத்துறையின்
செயலாளர் பீலா ராஜேஷ். கொரோனா வைரஸ் தாக்குதல் பற்றிய செய்திகளையும் அரசின்
நடவடிக்கைகளையும் இவரிடமிருந்துதான் மக்கள் அறிந்து கொள்கிறார்கள். மத்திய
மாநில அரசுகளுக்கு இடையே ஒரு தொடர்பு பாலமாகவும் இருக்கிறார். யார் இந்த
பீலா ராஜேஷ்? அவரது பின்புலம் என்ன?
பீலா ராஜேஷின் குடும்பம் பாரம்பர்யமானது. பீலா ராஜேஷின் அம்மா ராணி
வெங்கடேசன் பாரம்பர்ய காங்கிரஸ்காரர். நாகர்கோவிலை பூர்வீகமாகக் கொண்ட ராணி
வெங்கடேசன், 2006 சட்டமன்றத் தேர்தலில் சாத்தான்குளம் தொகுதியில்
போட்டியிட்டு எம்.எல்.ஏ ஆனவர். பிற்பாடு 2016 தேர்தலில் ஸ்ரீவைகுண்டம்
தேர்தலில் போட்டியிட்டு அ.தி.மு.க வேட்பாளர் எஸ்.பி.சண்முகநாதனிடம்
தோல்வியைத் தழுவினார்.
பீலாவின் அப்பா எல்.என்.வெங்கடேசன் காவல்துறை டி.ஜி.பி-யாகப் பணிபுரிந்து
ஓய்வு பெற்றவர். வெங்கடேசனின் சொந்த ஊர் தூத்துக்குடி மாவட்டம் வாழையடி.
சவுக்கு வியாபாரத்தில் கொடிகட்டிப் பறந்த வெங்கடேசனின் குடும்பம், சென்னையை
அடுத்துள்ள கொட்டிவாக்கத்தில் ஏக்கர் கணக்கில் நிலங்களை வாங்கி சவுக்கு
மரங்களைப் பயிரிட்டது. இன்றும் ஏகப்பட்ட சொத்துகள் வெங்கடேசனுக்குச்
சொந்தமாக கொட்டிவாக்கத்தில் உள்ளன. வெங்கடேசன் - ராணி வெங்கடேசன்
தம்பதிக்கு இரண்டு மகள்கள், ஒரு மகன்.
மகன் கார்த்திக், மகள் பீனா இருவரும் சிங்கப்பூரில் செட்டிலாகிவிட, மற்றொரு
மகளான பீலா மட்டும் இந்தியாவில் இருக்கிறார். 1969-ல் பிறந்த பீலா படித்து
வளர்ந்தது எல்லாமே சென்னை கொட்டிவாக்கம்தான். மெட்ராஸ் மருத்துவக்
கல்லூரியில் எம்.பி.பி.எஸ் முடித்த பீலா, 1989 ஒடிசா கேடர் ஐ.பி.எஸ்
அதிகாரியான ராஜேஷ் தாஸை 1992-ல் காதலித்து மணமுடித்தார். திருமணத்துக்குப்
பிறகு, ராஜேஷ் தாஸ் தமிழகத்துக்கு தன் பணியிடத்தை மாற்றிக்கொண்டதால்
தம்பதிகள் இருவரும் மகிழ்ச்சியாகக் குடும்பத்தை நடத்தினர். இவர்களுக்கு
இரண்டு மகள்கள் உள்ளனர். தற்போது மதுவிலக்கு அமலாக்கப் பிரிவின்
ஏ.டி.ஜி.பி-யாக ராஜேஷ் தாஸ் உள்ளார். கொட்டிவாக்கத்திலுள்ள இவர்கள்
வீட்டுக்கு அருகிலேயேதான் பீலா ராஜேஷின் பெற்றோரும் வசிக்கின்றனர்.
கணவரைப் பார்த்து தானும் படித்து உயர்பொறுப்புக்கு வர வேண்டுமென்ற உத்வேகம்
பீலா ராஜேஷின் மனதுக்குள் புகுந்தது. இந்திய குடிமைப் பணிகள் தேர்வெழுதி
1997-ம் ஆண்டு ஐ.ஏ.எஸ் ஆனார். முதலில் இவருக்கு பீகார் மாநில கேடர்தான்
ஒதுக்கப்பட்டது. ஐ.பி.எஸ் அதிகாரியான தன் கணவர் தமிழகத்தில் பணிபுரிவதை
மேற்கோள்காட்டி 2000-ம் ஆண்டு தமிழகத்துக்கு தன் பணியிடத்தை தற்காலிகமாக
மாற்றிக்கொண்டார். பின்னர், 2003-ம் ஆண்டு பீகார் மாநிலத்திலிருந்து
புதிதாக உதயமான ஜார்க்கண்ட் மாநிலத்துக்கு மாற்றப்பட்டார். பின்னர் மத்திய
அரசின் பணிக்குச் சென்றவர், இந்திய ஹோமியோபதி மருத்துவம், மத்திய
ஜவுளித்துறைகளில் பணியாற்றினார். நீண்ட சட்டப் போராட்டத்துக்குப் பிறகு,
மீண்டும் தமிழ்நாடு கேடர் பீலா ராஜேஷுக்குக் கிடைத்தது.
தமிழ்நாட்டில் செங்கல்பட்டு துணை ஆட்சியர், நகர் ஊரமைப்பு இயக்ககத்தின்
இயக்குநர், மீன்வளத்துறை இயக்குநர் எனப் பல்வேறு பொறுப்புகளை
வகித்துள்ளார். நீண்ட காலம் சுகாதாரத்துறை செயலாளராக இருந்த டாக்டர்
ராதாகிருஷ்ணன் மாற்றப்பட்டு, பிப்ரவரி 2019-ல் அப்பொறுப்பு பீலா ராஜேஷுக்கு
வழங்கப்பட்டது. தொடக்கத்திலிருந்தே பீலா ராஜேஷ் துடிப்புடன்
செயலாற்றுவதில் பெயர் பெற்றவர்.
தினமும் காலை 5 மணிக்கு எழுவதை வழக்கமாகக் கொண்டிருக்கும் பீலா, காலை
எழுந்தவுடன் ஒரு டம்ளர் வெந்நீரில் எலுமிச்சை ப்ளஸ் இஞ்சி சாற்றைக் கலந்து
குடிப்பதை வழக்கமாகக் கொண்டவர். வேகவைத்த காய்கறிகளை விரும்பி உண்ணும்
பழக்கமுடையவர். 11 மணிக்கு பப்பாளி அல்லது சாத்துக்குடி ஜூஸ், மதியம் 2
மணிக்கு சிறிது சாதம், பொரியல், அவியல். கண்டிப்பாகக் கீரையும், தயிரும்
மதிய மெனுவில் இடம்பெற்றிருக்கும். இடையே இரண்டு தவணையில் எலுமிச்சை கலந்த
ப்ளாக் டீ. மாலை 5 மணிக்கு வேகவைத்த பச்சைப் பயறு வகைகளை
எடுத்துக்கொள்வார். எண்ணெய் பலகாரங்களை அதிகளவில் உண்பதில்லை. எந்த வி.ஐ.பி
சந்திப்பு என்றாலும் மாலை 6 மணிக்கு மேல் டீ, காபி சாப்பிடுவதே இல்லை
என்பதை வழக்கமாக வைத்துள்ளார்.
இரவு எந்நேரமானாலும் கொட்டிவாக்கத்திலுள்ள தன்னுடைய வீட்டுக்குச் சென்ற
பின்னர்தான் இரவு உணவை உண்பார். தோசை, இட்லி, சப்பாத்தி பிடித்தமான
உணவுகள். தூத்துக்குடி, கன்னியாகுமரி ஸ்பெஷல் உணவுகள் என்றால் ஒருபிடி
பிடித்துவிடுவாராம். இறகுப் பந்து விளையாடுவதில் பீலாவுக்கு மிகுந்த ஆர்வம்
உண்டு. சுகாதாரத்துறை செயலாளராக நியமிக்கப்பட்ட பிறகு, பணிச்சூழல் காரணமாக
இப்போது விளையாடுவதில்லை.
கொரோனா வைரஸ் பாதிப்பு தமிழகத்தில் அதிகரித்து வரும்நிலையில், பீலா
ராஜேஷுக்கான பொறுப்பும் அதிகரித்துள்ளது. தினமும் காலை 8 மணிக்கெல்லாம்
முதல்வர் எடப்பாடி பழனிசாமி, தலைமைச் செயலாளர் சண்முகம் இருவரிடத்திலும்
கொரோனா பாதிப்பு குறித்த அப்டேட்டுகளை பகிர்ந்துகொள்கிறார். தமிழகம்
முழுவதும் எடுக்கப்படும் சுகாதார நடவடிக்கைகள், பாதிக்கப்பட்டோருக்கு
வழங்கப்படும் சிகிச்சை, புதிய நோயாளிகளின் பட்டியல் என்று ஒருநாளைக்கு 18
மணிநேரம் பம்பரமாக உழைக்கிறார். இரவு 12 மணி வரையில் கொரோனா நடவடிக்கைகளை
மேற்பார்வையிட்டுவிட்டு வீட்டுக்குச் சென்றால், காலை 6 மணிக்கெல்லாம்
திரும்ப எழுந்துவிடுகிறார்.
Post a Comment