
அதிராம்பட்டினம், அரசு உதவி பெறும் பள்ளியில், 'வாட்ஸ் ஆப்' குழுவை உருவாக்கி, 10ம் வகுப்புமாணவர்களை தேர்வுக்கு தயார்படுத்தி வருகின்றனர்.ஊரடங்கால், இந்த ஆண்டுக்கான, 10ம் வகுப்பு பொதுத்தேர்வு தள்ளி வைக்கப்பட்டு உள்ளது.
வீட்டில் முடங்கிக் கிடக்கும் மாணவர்களை தேர்வுக்கு தயார் படுத்தும் விதமாக, தஞ்சாவூர் மாவட்டம், அதிராம்பட்டினம் காதிர் முகைதீன் அரசு உதவிப்பெறும் ஆண்கள் மேல்நிலைப் பள்ளி ஆசிரியர்கள், வாட்ஸ் ஆப் குரூப் உருவாக்கி, அதன் மூலம், பாடங்களை நடத்தி வருகின்றனர்.இது குறித்து, தமிழ் ஆசிரியர் அஜ்முதீன் கூறியதாவது: பள்ளியில், 151 மாணவர்கள் தமிழ் வழியிலும், 46 மாணவர்கள் ஆங்கில வழியிலும், 10ம் வகுப்பு படிக்கின்றனர்.
ஊரடங்கால், பொதுத்தேர்வுக்கு தயாராகும் மாணவர்களின் படிப்பு பாதிக்க கூடாது என்பதற்காக, அவர்களின் மொபைல் எண்களை சேகரித்து, வாட்ஸ் ஆப் குழுவை உருவாக்கியுள்ளோம்.இதில், ஒவ்வொரு பாடப்பிரிவுகளின் ஆசிரியர்களும், மாதிரி வினாத்தாள் அனுப்பி, தேர்வு எழுதுவதற்கு பயிற்சி கொடுத்து வருகின்றனர்.மாணவர்களும், வாட்ஸ் ஆப்பிலேயே விடைகளை அனுப்புகின்றனர்.
ஆசிரியர்கள், அதில், திருத்தம் செய்து அனுப்புவதோடு, பாடம் தொடர்பான வீடியோக்கள், ஆடியோக்களும் குழுவில் அனுப்பி வைக்கப்படுகின்றன.வாட்ஸ் ஆப் வசதி இல்லாத, மீனவ குடும்பத்தை சேர்ந்த மாணவர்களுக்கு, அவர்களின் பெற்றோர்கள், உறவினர்கள் நம்பரை வாங்கி, ஆசிரியர்கள் பேசி, தேர்வுக்கு தயாராகும்வழிகளை கற்றுத் தருகின்றனர். இவ்வாறு, அவர் கூறினார்.
Post a Comment