உலகில் பல்வேறு இடங்களில் பல்வேறு தேதிகளில் மகளிர் தினம் கொண்டாடப்பட்டு வந்தது. ஐ.நா மன்றம் 1975 ஆம் ஆண்டு முதல் சர்வதேச மகளிர் தினமாக மார்ச் 8 ஆம் தேதியை அறிவித்த பின்னர் எல்லா நாடுகளும் இன்று பெண்கள் தினத்தினைக் கொண்டாடி வருகின்றன. கூகுள் இந்த நாளைக் கொண்டாடும் விதமாக டூடுல் ஒன்றினையும் இன்று வெளியிட்டிருக்கிறது. சரி, உலகத்தை எல்லாம் ஒருபுறம் வையுங்கள். தமிழகத்தில் பெண்கள் தினம் எப்படி இருக்கிறது? ஏன் பெண்களைக் கொண்டாட வேண்டும்? பெண்களை புனிதமாகக் கருதும் இந்தியாவில் ஏன் இத்தனை பாலியல் அத்துமீறல்கள், உரிமை மறுப்புகள்? இன்று தான் பெண்களின் நிலைமை இப்படி இருக்கிறதா? சங்ககால தமிழகத்தில் எப்படி இருந்தனர் பெண்கள்? விடை தேட முற்படுவோம்.
பேச்சுரிமை வெண்கொற்றக்குடை வேந்தர்களை வைத்து வெண்பா பாடும் புலவர்களை ஒதுக்கிவிட்டு, குடிமக்களின் வாழ்க்கையைப் பதிவு செய்த காப்பியமே சிலப்பதிகாரம். தமிழின் முதற்காப்பியம் என்ற பெருமையையும் தன்னகத்தே கொண்டிருக்கும் இதில் கனல் தெறிக்கும் கண்ணகியின் வாதங்கள் சங்ககால பெண்களின் பேச்சுரிமைக்கு ஒரு எடுத்துக்காட்டு.
மணிமுடி தரித்த வேந்தனையும், அரசவை உறுப்பினர்களையும் தன்னந்தனியாக எதிர்நின்று பார்ப்போர் அறவோர் பசு பெண்டிர் குழவி இவர் விடுத்து தீத்திறத்தார் பக்கமே சார்க என கதிரவனுக்கு கட்டளையிடும் அளவிற்கு கண்ணகிக்கு உரிமை இருந்திருக்கிறது.
கல்வி
பழந்தமிழகத்தில் ஆணுக்கு இணையாக பெண்களும் கல்வியறிவு கொண்டிருந்தனர். ஔவையார், வெண்ணிக் குயத்தியார், காக்கைப் பாடினியார் நச்செள்ளையார், ஒக்கூர் மாசாத்தியார், நக்கண்ணையார், ஆண்டாள் என தமிழ் வளர்த்த மகளிர் அதிகம். தங்களது கவித்திறமையால் மன்னர்களிடத்தே நன்மதிப்பைப் பெற்றிருந்தனர்.
வேந்தர்கள் தவறிழைக்கும் போதெல்லாம் அவர்களை புலவர்கள் நல்வழிப்படுத்தியிருகிறார்கள். ஒளவையாரின் புலமையின் காரணமாக சேர,சோழ,பாண்டிய மன்னர்களிடையே சூழ இருந்த போர்மேகம் விலகியதை நாம் வரலாற்றில் இருந்து அறிகிறோம்.
அறிந்து தெளிக!!
தமிழகத்தில் ஔவையார் என்னும் பெயரில் இரண்டு புலவர்கள் இருந்திருக்கிறார்கள். ஒருவர் சங்ககாலத்தைச் சேர்ந்தவர். அவரது பாடல்கள் பதினெண்மேற்கணக்கு நூல்கள் சிலவற்றில் இடம்பெற்றுள்ளன.
சங்க காலத்திற்குப் பின்னரும் தமிழகத்தில் ஔவையார் என்னும் பெயரில் ஒருவர் வாழ்ந்திருக்கிறார். பதினெண்கீழ்க்கணக்கு நூலான நாலடியாரில் சில பாடல்கள் இவர் இயற்றியதாகும்.
அதிகாரம்
பெண்களிடத்தில் அதிகாரம் இருந்ததற்கான சாட்சியங்கள் இதிகாசமான ராமாயண காலத்திலேயே இருந்திருக்கின்றன. தசரதனின் மனைவியுள் ஒருவரான கைகேயி கோசல நாட்டின் அமைச்சராகவும் இருந்தார் என்கிறார் வால்மீகி. கம்பனும் அதையே வழிமொழிகிறார். இந்திரனோடு போர் வந்தபோது தசரதனுக்கு தேரோட்டியாக இருந்தவரும் கைகேயி தான்.
Kambarமகாபாரதத்தில் குந்தி, போர் கலைகள் கற்ற சிகண்டி என ஆயிரம் எடுத்துக்காட்டுகளைச் சொல்லலாம். தமிழகத்திலும் அரசவை மகளிர் ஆட்சியில் பங்கு செலுத்தியிருக்கின்றனர். வேலு நாச்சியார், அவரது படைப்பிரிவில் இருந்த குயிலி, ராணி மங்கம்மாள் போன்றோர்கள் இன்றும் அவர்களது தன்னலம் கானா தகைசால் குணத்தால் அறியப்படுகின்றனர். சோழ குலத்தில் மாதேவடிகள், குந்தவை நாச்சியார் ஆகியோர் அந்நாட்டு அரசியலில் மிக முக்கிய பங்காற்றினர்.
சுயம்வரம்
தனக்கான மணமகனைத் தானே தேர்ந்தெடுக்கும் உரிமை பண்டைய தமிழக மகளிருக்கு இருந்தது. அதனையும் தாண்டி தங்களது மனம் கவர்ந்தானைக் காதலித்துக் கரம்பிடிக்கும் வழக்கம் அப்போது இருந்தது. தமிழில், நற்றிணை, குறுந்தொகை என அகத்துறை இலக்கியங்கள் எல்லாம் இதற்குச் சான்று பகர்கின்றன.
ஆனால்….
இன்றைய இந்தியாவிலோ, தமிழகத்திலோ பெண்களின் நிலைமை எப்படி இருக்கின்றது என சொல்லித் தெரியவேண்டியதில்லை. ஒரு நாளைக்கு எத்தனை செய்திகள்? என்ன காரணம்? சந்தேகமே இல்லாமல் சமத்துவத்தை நாம் ஏற்க மறுக்கிறோம். கல்வியில், வேலைவாய்ப்பில், வீட்டில், குழந்தை பராமரிப்பில் என அனைத்திலும் நம்மால் சமத்துவமாக இருக்க முடிகிறதா?
காலங்காலமாக இந்த எண்ணம் ஆண்களிடத்தில் இருந்திருக்கிறது. இந்த எண்ணத்தினால் உண்டாகும் குற்றவுணர்ச்சியை மறைக்கவே பெண்ணைப் புகழ்கிறான் ஆண். உடனே நான் அப்படியல்ல என்று முகம் சிவக்க வேண்டாம். எல்லா விதிகளுக்கும் விதி விலக்கும் நிச்சயம் இருக்கும். ஆனால் உங்களைச்சுற்றி இப்படி எதுவுமே நடக்கவில்லை என சொல்லிவிடவும் முடியாது.
கல்வியறிவு, பேச்சுரிமை, புலமை, ஆட்சியுரிமை, அதிகாரம், சுயம்வரம் என அனைத்து உரிமைகளையும் வைத்திருந்த பெண்கள் இன்று ‘பெண் ஏன் அடிமையானாள்?‘ புத்தகம் படிக்கும் நிலைக்கு தள்ளப்பட்டிருக்கிறாள்.
சமூகம் முழுவதும் இம்மாதிரியான சாக்கடைகள் இருக்கின்றன. பெண்கள் யாரும் தங்களை வணங்க வேண்டும் என விரும்பவில்லை. தங்களைச் சுற்றி புனித வளையத்தை போட்டுக்கொள்ள அவர்களுக்கு ஆசை இல்லை. அவர் கேட்பதெல்லாம் நம்மைப் போல் அவர்களையும் நடத்த வேண்டும் என்பதே. ஆகவே பெண்களை சக மனுஷியாக நாம் அணுகுவதில் இருந்துதான் சமத்துவம் பிறக்கிறது. எதிர்கால தமிழ்ச் சமுதாயம் நலமுற்று இருந்திட சமத்துவத்தைத் தவிர வேறு வழியில்லை.
Post a Comment