Title of the document
Tamil_News_large_2358075

1. மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களின் பத்திரிக்கைச் செய்திகளின் அடிப்படையில் தமிழ்நாட்டில் உள்ள அனைத்து வகைப் பள்ளிகளில் கொரோனா வைரஸ் தொடர்பாக முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மேற்கொள்வது குறித்து செயல்முறைகள் வாயிலாக தமிழ்நாட்டில் உள்ள அனைத்து வகைப் பள்ளி மாணவர்களுக்கும் 17.03.2020 முதல் 31.03.2020 வரை விடுமுறை அளிக்க அனைத்து முதன்மைக் கல்வி அலுவலர்களுக்கும் அறிவுறுத்தப்பட்டது .

2 . தற்போது உள்ள அரசாணையில் பள்ளித் தேர்வுகள் மற்றும் விடைத்தாள் மதிப்பீடு பணியில் உள்ளோர் தவிர அனைத்து கல்வி நிறுவனங்களில் பணிபுரியும் ஆசிரியர்கள் மற்றும் பணியாளர்கள் 31.03.2020 வரை வீட்டிலிருந்து தங்கள் பள்ளி சார்பான வேலைகளை பார்க்கலாம் என ஆணையிடப்பட்டுள்ளது .

3 . எனவே கீழ்கண்ட பணிகளை தலைமையாசிரியர்கள் மற்றும் ஆசிரியர்கள் இந்த காலகட்டத்தில் வீட்டிலிருந்தபடியே மேற்கொள்ள கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள் .

அ . இந்த காலத்தில் கல்வி சம்பந்தப்பட்ட பணிகளையும் , பாடத்திட்டம் மற்றும் அடுத்த பருவத்திற்கான முன்னேற்பாடுகளுக்கான ஆயத்தப்பணிகளை செய்யலாம் .

ஆ . 2020 - 2021 ஆம் கல்வி ஆண்டிற்குரிய கற்றல் மற்றும் கற்பித்தல் உபகரணங்கள் தயார் செய்திட ஆயத்தப் பணிகள் மேற்கொள்ளலாம் .

இ . ஆசிரியர்கள் தங்களுக்கு பிடித்தமான கலையினை மாணவர்களுக்கு கற்றுத்தருவதற்காக ஆபத்த பணியாக நடனம் , வரைதல் , பாரம்பரிய உணவு சமைத்தல் , வண்ணம் தீட்டுதல் மற்றும் நடித்தல் போன்றவற்றிற்கான கருத்துக்களை ( concepts ) தயார் படுத்திக் கொள்ளலாம் . அவ்வாறு தயார் செய்த கலை நிகழ்ச்சிகளை மாணவர்களுக்கு வரும் கல்வியாண்டில் பயிற்சி தந்து போட்டிகளில் பங்கு பெறச் செய்தால் மாணவர்களின் தனித்திறன்கள் வெளிப்படுவதற்கு ஏதுவாக அமையும் .

4 . அரசுத் தேர்வுகள் இயக்ககத்தால் ஏற்கனவே 31 . 03 . 2020 அன்று தொடங்க திட்டமிடப்பட்டிருந்த மேல்நிலை முதலாம் ஆண்டு மற்றும் இரண்டாம் ஆண்டு தேர்வுகள் தொடர்பான விடைத்தாட்கள் மைய மதிப்பீட்டுப் பணிகளும் , மண்டல முகாம் சார்ந்த பணிகளும் ஒத்திவைக்கப்படுகின்றன எனவும் , மதிப்பீட்டு பணிகள் குறித்த விரிவான விவரங்கள் பின்னர் தெரிவிக்கப்படும் எனவும் பார்வை 5 - ல் உள்ள கடிதத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது .

5 . தேர்வுகள் மற்றும் விடைத்தாள் மதிப்பீட்டு பணிகள் தொடர்பாக பணிபுரியும் ஆசிரியர்கள் , அரசு தேர்வுகள் இயக்குநரின் உத்தரவுகளுக்கு உட்பட்டு செயல்பட வேண்டும் என அறிவுறுத்தப்படுகிறது .

6 . முதன்மைக் கல்வி அலுவலர் , மாவட்டக் கல்வி அலுவலர்கள் மற்றும் வட்டார கல்வி அலுவலர்கள் எந்நேரத்தில் அழைத்தாலும் பதில் அளிக்கும் நிலையிலும் , தேவையேற்பின் உடனடியாக அலுவலகத்திற்கு வருகை புரிய தயார் நிலையிலும் இருக்க வேண்டும் .

7 . மாவட்ட ஆட்சியர் அவர்களால் முதன்மைக் கல்வி அலுவலர் , மாவட்டக் கல்வி அலுவலர்கள் , வட்டார கல்வி அலுவலர்கள் மற்றும் தலைமையாசிரியர்கள் ஆகியோரிடம் அறிவுறுத்தப்படும் பணிகளை உடனடியாக மேற்கொள்ளப்படவேண்டும்.

8 . அனைத்து மாவட்ட கல்வி அலுவலர்கள் , அனைத்து வட்டாரக் கல்வி அலுவலர்கள் , அனைத்து வகைத் தலைமையாசிரியர்கள் , ஆசிரியர்கள் மற்றும் அலுவலகப் பணியாளர்களின் தொலைபேசி எண்களை மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர்கள் தங்கள் அலுவலகத்தில் தயார் நிலையில் வைத்திருக்க வேண்டும் .

மேலும் , கொரோனா வைரஸ் தொற்று நோய் தடுப்பு மற்றும் கட்டுப்பாடுகள் குறித்து மத்திய மற்றும் மாநில அரசுகள் வழங்கும் அறிவுறுத்தல்கள் சார்ந்து அவ்வப்போது தெரிவிக்கும் நெறிமுறைகளை பின்பற்றுமாறும் கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள் . இது சார்பாக அனைத்து மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர்களும் தங்கள் மாவட்டத்தில் உள்ள அனைத்து தலைமையாசிரியர்கள் மற்றும் ஆசிரியர்களுக்கு உரிய அறிவுரைகளை வழங்கிட கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள் .
# இந்த பயனுள்ள தகவலை அனைவருக்கும் பகிருங்கள் - யாரேனும் ஒருவருக்காவது பயன்படும்...

Post a Comment

Previous Post Next Post