அரசு பள்ளி மாணவர்களுக்கு காலை சிற்றுண்டி வழங்க முடிவு?

Join Our KalviNews Telegram Group - Click Here
ஜெயலலிதா பிறந்த நாள் முதல், அரசு பள்ளிகளில் படிக்கும்மாணவ, மாணவியருக்கு,தினமும் காலை, இலவச சிற்றுண்டி வழங்க, தமிழக அரசு முடிவு செய்துள்ளது.

வரும் சட்டசபை தேர்தல் வெற்றிக்கான வியூகமாக, முதல்வர் இ.பி.எஸ்., இந்தஇலவச சிற்றுண்டி திட்டத்தை, விரைவில் அறிவிக்க உள்ளதாக,அரசு வட்டாரத்தில் கூறப்படுகிறது.பள்ளிகளில் படிக்கும் ஏழை மாணவர்கள், மதிய உணவு சாப்பிட்டால், அவர்கள் தொடர்ந்து படிக்க வருவர் என்ற, தொலைநோக்கு பார்வையில், காமராஜர் ஆட்சியில், இலவச மதிய உணவு திட்டம் செயல்படுத்தப்பட்டது. எம்.ஜி.ஆர்., ஆட்சியில், அது சத்துணவு திட்டமாக உருமாறியது. சத்துணவு பள்ளிக்கூடம் என்ற, மழலையர் பள்ளியும் துவக்கப்பட்டது. பின், கருணாநிதி ஆட்சியில், சத்துணவுடன் இலவச முட்டை வழங்கும் திட்டம் அறிமுகமானது.

கோரிக்கை

ஜெயலலிதா ஆட்சியில், சத்துணவு திட்டம், விதவிதமான கலவை உணவுகளை வழங்கும் வகையில் விரிவுப்படுத்தப்பட்டது. தற்போதைய சூழலில், பெரும்பாலான ஏழை குடும்பங்களில், கணவன், மனைவி வேலைக்கு செல்கின்றனர். அவர்களால் தங்கள் குழந்தைகளுக்கு, முறையாக காலை சிற்றுண்டி வழங்க முடியாத நிலை உள்ளது. காலை உணவு சாப்பிடாமல், பள்ளிக்கு வரும் குழந்தைகளுக்கு, பாடத்தில் கவனம் செலுத்த முடியாத நிலை உள்ளது.இப்பிரச்னைக்கு தீர்வு காண, அரசு பள்ளி மாணவ, மாணவியருக்கு, காலை சிற்றுண்டி வழங்க வேண்டும் என்ற, கோரிக்கை எழுந்தது.

கடந்த ஆண்டு, ஜெயலலிதாவின், 71வது பிறந்த நாள் விழாவை ஒட்டி, சென்னை மாநகராட்சி மற்றும் 'அக் ஷய பாத்ரா' தொண்டு நிறுவனம் இணைந்து, மாநகராட்சி பள்ளிகளில் படிக்கும் மாணவர்களுக்கு, காலை சிற்றுண்டி வழங்கும் திட்டத்தை ஆரம்பித்தன. இத்திட்டத்தை, கவர்னர் பன்வாரிலால் புரோஹித் துவக்கி வைத்தார். காலையில், இட்லி, உப்புமா, பொங்கல், சாம்பார் என, தென் மாநில உணவுகள் வழங்கப்பட்டன.இந்த திட்டம் வாயிலாக, ஆயிரக்கணக்கான மாணவர்கள் பயன் அடைந்தனர். மாணவர்கள், பசியுடன் பள்ளிக்கு வரக் கூடாது என்ற, எண்ணத்துடன் துவங்கிய, இந்த திட்டம் வெற்றி பெற்றது. அதன் தொடர்ச்சியாக, பிற மாவட்டங்களிலும், பல்வேறு பள்ளிகளில், தனியார் நிறுவனங்கள் உதவியுடன், காலை சிற்றுண்டி வழங்கும் திட்டம் துவக்கப்பட்டது. ஆனால், பொருளாதார சிக்கல் காரணமாக, அனைத்து பள்ளிகளுக்கும், திட்டத்தை விரிவுப்படுத்த முடியவில்லை.

வரவேற்பு

காலை சிற்றுண்டி வழங்கும் திட்டத்திற்கு, மாணவர்கள் மற்றும் பெற்றோரிடம் நல்ல வரவேற்பு உள்ளதால், இத்திட்டத்தை, தமிழக அரசே ஏற்று நடத்த வேண்டும் என்ற, கோரிக்கை எழுந்தது; அதை, அரசு பரிசீலித்து வருகிறது. இதற்காக, அரசு பள்ளிகளில் படிக்கும் மாணவர்கள் எண்ணிக்கை; அவர்களுக்கு காலை உணவு வழங்குவதற்கான செலவு ஆகியவை குறித்து மதிப்பிடப்பட்டுள்ளது.இத்திட்டத்தை துவக்கினால், மக்களிடம் வரவேற்பு கிடைக்கும். இது, சட்டசபை தேர்தலுக்கு பெரிதும் உதவும் என்பதால், காலை சிற்றுண்டி வழங்கும் திட்டத்தை துவக்கி வைத்து, காமராஜர், எம்.ஜி.ஆர்., போல், வரலாற்றில் இடம்பிடிக்க, முதல்வர் இ.பி.எஸ், முடிவு செய்துஉள்ளார். இதை, அமைச்சர் வேலுமணி உறுதிப்படுத்தி உள்ளார்.அவர், 8ம் தேதி தன், 'டுவிட்டர்' பக்கத்தில், 'சென்னை மாநகராட்சி பள்ளிகளில், ஓராண்டுக்கு முன் துவக்கப்பட்டு, வெற்றிகரமாக செயல்பட்டு வரும், மாணவ, மாணவியருக்கு சத்துள்ள சிற்றுண்டி வழங்கும், காலை உணவு திட்டத்தை, தமிழகம் முழுவதும் உள்ள, அரசு பள்ளிகளுக்கு விரிவுப்படுத்த, தமிழக அரசு பரிசீலித்து வருவது, மகிழ்ச்சி அளிக்கிறது' என, பதிவிட்டுள்ளார்.

அரசு பள்ளிகளில், மாணவர்களுக்கு காலை சிற்றுண்டி வழங்கும் திட்டத்தை, ஜெயலலிதா பிறந்த நாளான, பிப்ரவரி, 24ல், முதல்வர் துவக்கி வைக்க வாய்ப்புள்ளதாக, ஆளும் கட்சி வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.காலை சிற்றுண்டி வழங்கும் திட்டத்தை துவக்கி வைத்து, காமராஜர், எம்.ஜி.ஆர்., போல், வரலாற்றில் இடம்பிடிக்க, முதல்வர் இ.பி.எஸ், முடிவு செய்துள்ளார்.
🔴🔴 இந்த பயனுள்ள தகவலை அனைத்து Whatsapp குழுக்களிலும் பகிருங்கள் - யாரேனும் ஒருவருக்காவது பயன்படும்.

கருத்துரையிடுக

0 கருத்துகள்