Title of the document
5 வது மற்றும் 8 வது வகுப்புக்கு பொதுத்தேர்வு கொண்டுவரும் தமிழக அரசின் திட்டத்தை மக்கள் நீதி மய்யம் எதிர்த்துள்ளது. பாடத்திட்டத்தை நவீனப்படுத்தாமல் பிள்ளைகளுக்கு தேர்வை கூட்டுவதன்மூலம் சுமையை உருவாக்குகிறீர்கள் என தெரிவித்துள்ளனர்.

தமிழக அரசு புதிய கல்விக் கொள்கை வருவதற்கு முன்னரே அதில் குறிப்பிடப்படும் 5 வது மற்றும் 8 வது வகுப்புக்கு பொதுத்தேர்வு எனும் முறையை கொண்டு வருகிறது. இதனால் 10 வயதிலேயே மாணவர்களிடையே தேவையற்ற மன அழுத்தம், இடை நிற்றல் அதிகரிக்கும் என பலரும் கண்டித்து வருகின்றனர்.

இதுகுறித்து மக்கள் நீதி மய்யம் இன்று வெளியிட்டுள்ள அறிக்கை:

“தரம் தகுதி என்கிற வார்த்தை ஜாலங்களை கொண்டு நமது பிள்ளைகளின் அடிப்படை உரிமையான கல்வியை அவர்களுக்கு பெரும் சுமையாக்கி கல்வியின் மேல் வெறுப்பு வரும் ஒரு நிலையினைத்தான் இந்த ஐந்தாம் வகுப்பு மற்றும் எட்டாம் வகுப்பு பொதுத்தேர்வு ஏற்படுத்தும்.

நமது கல்வியின் தரம் உயர்த்தப்பட வேண்டும் என்பதில் எந்த மாற்றுக் கருத்தும் இல்லை. ஆனால் இருக்கின்ற பாடத்திட்டங்களை மாற்றாமல் அதன் தரத்தை உயர்த்திடாமல் குழந்தைகளின் தரத்தை மட்டும் மதிப்பிடுவது எம்மாதிரியான சிந்தனை என்பது புதிராக இருக்கின்றது.

தமிழகத்தின் கல்வித்தரம் உலகத்தரத்திற்கு இணையாக இருக்கவேண்டும் என்பதுதான் மக்கள் நீதி மையத்தின் நிலைப்பாடு, என்றாலும் அந்த பொறுப்பை குழந்தைகளின் தலையில் கட்டுவதை கடுமையாக எதிர்க்கிறது.

பாடத்திட்டத்தில் தரம், அப்பாடத்திட்டத்தினை கற்பிக்கும் முறையில் நவீனம் என்ற வகையில் கொண்டு வரவேண்டிய தரத்தினை, குழந்தைகளுக்கு தேர்வு நடத்துவதன் மூலமாக கொண்டு வர முடியாது, என்பதை ஆட்சியாளர்கள் கவனத்தில் கொள்ள வேண்டியது அவசியம்.

எங்கள் கட்சியின் தலைவர் கமல் ஹாசன் குறிப்பிட்டதுபோல் தும்பியின் வாலில் பாராங்கல்லை கட்டாதீர்கள் என்று கூறி புதிய தேர்வு முறையை ரத்து செய்யுமாறு கேட்டுக்கொள்கிறோம்”.

இவ்வாறு அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
# இந்த பயனுள்ள தகவலை அனைவருக்கும் பகிருங்கள் - யாரேனும் ஒருவருக்காவது பயன்படும்...

Post a Comment

Previous Post Next Post