எம்பில்., பிஎச்டி., முடித்தவர்களுக்கான ஊக்க ஊதியம் வழங்கும் அரசாணை வெளியிட தயக்கம்

Join Our KalviNews Telegram Group - Click Here
9092837307 - Add This Number In Your Whatsapp Groups - 9092837307

தமிழகத்தில் அரசு கல்லூரி பேராசிரியர்களுக்கு எம்பில்., பிஎச்டி., முடித்தவர்களுக்கான ஊக்க ஊதியம் வழங்கும் அரசாணை வெளியிட, உய ர்கல்வித்துறை தயக்கம் காட்டுவதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. தமிழக உயர்கல்வித்துறையின் கீழ் 95க்கும் மேற்பட்ட அரசு கலை, அறிவியல் கல்லூரிகளும், 120க்கும் அதிகமான அரசு உதவிபெறும் கல்லூரிகளும் செயல்பட்டு வருகின்றன. இக்கல்லூரிகளில் உதவி பேராசிரியர், இணை பேராசிரியர் மற்றும் பேராசிரியர் என 2 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் பணிபுரிந்து வருகின்றனர். அரசு கல்லூரி பேராசிரியர்கள் எம்பில்., பிஎச்டி., ேபான்ற ஆராய்ச்சி படிப்புகளை மேற்கொள்வது கூடுதல் தகுதியாக பார்க்கப்பட்டது. இதனால், அதுபோன்ற படிப்புகளை முடித்தவர்களுக்கு தனியாக ஊக்க ஊதியம் வழங்கப்பட்டு வந்தது.


இதனிடையே அரசு கல்லூரியில் சேர்வதற்கான கல்வித்தகுதியாக, மத்திய அல்லது மாநில அரசுகள் நடத்தும் தகுதித்தேர்வில் தேர்ச்சி அல்லது பி.எச்டி., முனைவர் பட்டம் பெற்றிருக்க வேண்டும் என நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இதனையடுத்து, கல்வித் தகுதியாகவே பி.எச்டி., உள்ளதால், தனியாக அதற்கு ஊதிய உயர்வு வழங்க வேண்டாம் என பல்கலைக்கழக மானியக்குழு (யூஜிசி) தெரிவித்தது. இது கடந்த 2016ம் ஆண்டின் 7வது ஊதியக்குழு பரிந்துரையிலேயே அமல்படுத்தப்பட்டது. இதனால், தமிழகம் உள்பட பல்வேறு மாநிலங்களில், கல்லூரி பேராசிரியர்களுக்கான ஊக்க ஊதியம் நிறுத்தப்பட்டது. இதனால் பேராசிரியர்கள் அதிர்ச்சியடைந்தனர். தொடர்ந்து, அகில இந்திய பல்கலைக்கழக மற்றும் கல்லூரி ஆசிரியர் கூட்டமைப்பின் சார்பில், நிறுத்தப்பட்ட ஊக்க ஊதியத்தை மீண்டும் வழங்க வேண்டும் என பல்கலைக்கழக மானியக்குழுவிற்கு கோரிக்கை விடுக்கப்பட்டது. இதனை ஏற்ற யூஜிசி, நிறுத்தப்பட்ட ஊக்க ஊதியத்தை வழங்க உத்தரவிட்டது. இதனை ஏற்று, பல்வேறு மாநிலங்களில் மீண்டும் கல்லூரி பேராசியர்களுக்கான ஊக்க ஊதியம் வழங்கப்பட்டு வருகிறது. ஆனால் தமிழகத்தில் இதற்கான ஆணையை வெளியிட உயர்கல்வித்துறை தாமதம் செய்வதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.


இதுகுறித்து அரசு கல்லூரி பேராசிரியர்கள் கூறியதாவது: தமிழகத்தில் அரசு மற்றும் உதவி பெறும் கல்லூரிகளில் 2 ஆயிரத்திற்கும் அதிகமான பேராசிரியர்கள் பணிபுரிந்து வருகின்றனர். இவர்களில் பெரும்பாலானோர் பழைய கல்வித்தகுதி அடிப்படையில் சேர்ந்தவர்கள். இதனால், எம்பில்., பி.எச்டி.,க்கான ஊக்க ஊதியம் பெற்று வந்தனர். திடீரென அதனை நிறுத்திய யூஜிசி, ஆசிரியர்களின் கோரிக்கையை ஏற்று மீண்டும் வழங்க உத்தரவிட்டது.


ஆனால், தமிழக அரசு அந்த மறுஉத்தரவை செயல்படுத்த தாமதம் செய்து வருகிறது. ஏற்கனவே பணியில் சேர்ந்த பலர், கல்லூரி முதல்வர் பதவியை பெற வேண்டும் என்பது உள்ளிட்ட பல்வேறு காரணங்களுக்காக பி.எச்டி., படித்துள்ளனர். இவர்கள் உள்பட பலரும் ஊக்க ஊதியம் நிறுத்தப்பட்டதால் பாதிக்கப்பட்டுள்ளனர். இதுகுறித்து கேள்வி எழுப்பினாலும், உயர்கல்வித்துறை சரியான பதிலை அளிக்க மறுக்கிறது. எனவே, இனியும் காலதாமதம் செய்யாமல், நிறுத்தப்பட்ட ஊக்க ஊதியத்தை வழங்குவதற்கான அரசாணையை வெளியிட வேண்டும். இவ்வாறு அவர்கள் தெரிவித்தனர்.