தேர்ச்சி விகிதம் குறைந்தால் ஆசிரியர்களுக்கு கட்டாய ஒய்வு: உத்தரகண்ட் அரசு முடிவு
உத்தரகண்டில் மாணவர்களுக்கு பாடங்கள் சரியாக போதிக்காத, அனுமதியின்றி விடுப்பு எடுக்கும் அரசு பள்ளி ஆசிரியர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்பட உள்ளது. இதுபோல், தொடர்ந்து தேர்ச்சி விகிதம் குறையக் காரணமான அந்த ஆசிரியர்களுக்கு கட்டாய ஓய்வு அளிக்க அம்மாநில அரசு முடிவு செய்துள்ளது.
உ.பி.யில் இருந்து கடந்த 2000 ஆவது ஆண்டில் பிரிந்த மாநிலம் உத்தராகண்ட். பாஜக ஆளும் மாநிலமான இது இமயமலையின் சரிவுப்பகுதியில் அமைந்துள்ளது.
இதன் கடுவால் மற்றும் குமாவ்ன் பகுதி மாவட்டங்களில் உள்ள அரசு பள்ளிகளில் மாணவர்கள் தேர்ச்சி எண்ணிக்கை தொடர்ந்து குறைந்து வருகிறது. இதற்கு, அதன் ஆசிரியர்கள் மாணவர்களுக்கு சரியாக பாடங்கள் போதிக்காதது காரணம் எனக் கருதப்படுகிறது.
இத்துடன் அவர்களில் பலர் முன்கூட்டியே அனுமதி பெறாமல் விடுப்பு எடுப்பதால் மாற்று ஆசிரியர்களையும் அமர்த்த முடியாமல் உள்ளதாகப் புகார் உள்ளது.
எனவே, இந்த நிலையை மாற்ற உத்தரகண்ட் மாநில அரசின் கல்வி நிர்வாகம் ஒரு புதிய முடிவு எடுத்துள்ளது. தொடர்ந்து தேர்ச்சி விகிதம் குறையக் காரணமானவர்கள் மற்றும் அனுமதியின்றி விடுப்பு எடுக்கும் ஆசிரியர்களுக்கு அவர்கள் பணியில் இருந்து கட்டாய ஓய்வு அளிக்க உள்ளனர்.
இது குறித்து உத்தரகண்ட் கல்வியகத்தின் இயக்குநர் ஆர்.கே.குன்வர் தன் மாவட்ட கல்வி அதிகாரிகளுக்கு அனுப்பியுள்ள சுற்றறிக்கையில் கூறியிருப்பதாவது: தேர்ச்சி சதகிதம் குறையக் காரணமான ஆசிரியர்களை அடையாளம் கண்டு அறிக்கை அனுப்பப்பட வேண்டும்.
வரும் நவம்பர் 20-ம் தேதிக்குள் அனுப்பும் இந்த அறிக்கையில் குறிப்பிடும் ஆசிரியர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும்.’ எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த கட்டாய ஓய்வு ஐம்பது வயது நிறைந்தவர்களுக்கு மட்டும் என நிர்ணயிக்கப்பட்டுள்ளது. உத்தரகண்டில் மொத்தம் 65,000 ஆசிரியர்கள் பள்ளிகளில் பணியாற்று வருகின்றனர்.
உத்தரகண்ட் அரசின் புதிய முடிவை எதிர்த்து வேலைநிறுத்தப் போராட்டம் செய்யவும் அந்த ஆசிரியர்களின் சங்கங்கள் ஆலோசனை செய்து வருகின்றன.
இதனிடையே, பல மாதங்களாக பள்ளிப் பணிக்கு வராமல் தொடர்ந்து விடுப்பில் உள்ள குமாவ்ன் பகுதியின் 26 ஆசிரியர்கள் பணியில் இருந்து நீக்கப்பட்டுள்ளனர்.
Post a Comment