Title of the document
புதுக்கோட்டை மாவட்டம், அறந்தாங்கி அருகே உள்ளது ஆவணத்தாங்கோட்டை ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி. இங்கு சுமார் 80-க்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள் படித்து வருகின்றனர். ஸ்மார்ட் கிளாஸ் வகுப்பறை, திறன் பயிற்சி வகுப்புகள் எனத் தனியார் பள்ளிக்கு இணையாக முன்மாதிரிப் பள்ளியாகச் செயல்பட்டு வருகிறது.

கராத்தே, யோகா, சிலம்பம் என மாவட்ட, மாநில, தேசிய அளவிலான போட்டிகளிலும் இப்பள்ளி மாணவர்கள் அசத்தி வருகின்றனர். இந்தநிலையில், பள்ளியில் படிக்கும் மாணவர்கள் ஒவ்வொருவரும் தலைமுடியை ஒரே மாதிரி வெட்டாமல், பாக்ஸ் கட்டிங், கோடு போடுதல், ஸ்பைக் எனப் பல்வேறுவிதமான தோற்றங்களில் வகுப்பறைக்கு வந்துள்ளனர்.


கோரிக்கை நோட்டீஸ்

இதனால், அதிர்ச்சியடைந்த ஆசிரியர்கள், `போலீஸ் கட்டிங் போன்றுதான் முடிவெட்டி வர வேண்டும்' என்று அன்போடு சொல்லிப் பார்த்துள்ளனர்.


ஆனாலும், மாணவர்கள் தங்களை மாற்றிக்கொள்ளவில்லை. இதையடுத்து, முடிதிருத்தும் கடைகளுக்குச் சென்ற ஆசிரியர்கள் சிலர், ` உங்கள் கடைகளைத் தேடி மாணவர்கள் வந்தால், ஒரே மாதிரியாக முடிவெட்டுங்கள்' எனக் கூறி கோரிக்கை நோட்டீஸ் ஒன்றையும் அளித்துள்ளனர்.

இந்த விநோத கோரிக்கை குறித்து நம்மிடம் பேசிய பள்ளி ஆசிரியர் பாஸ்கர், "பாக்ஸ் கட்டிங், கிராஸ் கோடு, சினிமா பிரபலங்கள்போல கட்டிங் எனப் புதிது, புதிதாக கட்டிங் செய்து கொண்டு மாணவர்கள் பள்ளிக்கு வருகின்றனர். ஒரு மாணவரைப் பார்த்து மற்றவர்களும் அதே பாணியைப் பின்பற்றி கட்டிங் செய்து கொள்கின்றனர். இதனால், அவர்களால் படிப்பில் முழுமையாகக் கவனம் செலுத்த முடிவதில்லை.

மாணவர்களின் நலன் தொடர்பாக, பள்ளிக் கல்வித்துறை வகுத்துள்ள விதிமுறைகளைத் தொடர்ந்து கடைப்பிடித்து வருகிறோம். சாதியை மையப்படுத்தி கயிறு கட்டி வருவதை முழுமையாகக் கட்டுப்படுத்திவிட்டோம்.

 கோரிக்கை நோட்டீஸ் கொடுக்கும் ஆசிரியர்
இந்த முடி விஷயத்தில் மட்டும்தான் மாணவர்களைக் கட்டுப்படுத்த முடியவில்லை. மாணவர்களோ, முடி திருத்துபவர்கள்தான் இதுபோன்று கட்டிங்கை செய்து கொள்ளுமாறு வலியுறுத்துவதாகச் சொல்கின்றனர்.

எனவேதான், கடை கடையாக இறங்கி அவர்களிடம் கோரிக்கை நோட்டீஸ் கொடுத்தோம். நேரடியாகச் சென்று கோரிக்கை வைத்ததால், அனைவருக்கும் ஒரே மாதிரியாக முடிவெட்டுவோம் என்று அவர்களும் வாக்குறுதி கொடுத்துள்ளனர். எங்களின் முயற்சிக்கு நல்ல பலனும் கிடைத்துள்ளது" என்றார் உற்சாகத்துடன்.
# இந்த பயனுள்ள தகவலை அனைவருக்கும் பகிருங்கள் - யாரேனும் ஒருவருக்காவது பயன்படும்...

Post a Comment

Previous Post Next Post