இதுதொடர்பாக அச்சங்கத்தின் மாநிலத் தலைவர் பி.கே.இளமாறன் வெளியிட்டுள்ள அறிக்கையில், ''குழந்தைகளின் உடல் நலத்தையும் மன நலனையும் கருத்தில் கொண்டு முன்னாள் முதல்வர் ஜெயலலிதா பாடச் சுமையினைக் குறைக்க முடிவு செய்தார். பாடங்களைப் பிரித்து முப்பருவத் தேர்வு முறையினை 2012-2013 ஆம் கல்வி ஆண்டில் அறிமுகப்படுத்தினார். அம்முறை இன்று வரை நடைமுறையில் இருந்து வருகிறது.
அதனைத் தொடர்ந்து 2020-2021 ஆம் கல்வியாண்டில் இருந்து முப்பருவத்தேர்வு முறையினை ஒழித்து ஒரே பருவமாக பொதுத்தேர்வு நடத்த, பாடப் புத்தகங்களை ஒரே புத்தகமாக மாற்றிட அரசாணை பிறப்பிக்கப்பட்டுள்ளது வேதனையளிக்கிறது.
குழந்தை உளவியல் அறிஞர்களின் ஆலோசனைப்படியே அன்றையை முதல்வர், குழந்தைகளை மையப்படுத்திப் பாடப் புத்தகம் தயாரித்தார். புத்தகச் சுமையோடு மனச் சுமையையும் குறைத்தார்.
மத்திய அரசின் தேசியக் கல்விக் கொள்கையில் திருத்தம் வேண்டி பல்வேறு அமைப்புகள் முன்வைத்த கோரிக்கை இன்னும் மத்திய அரசின் பார்வையில் உள்ளது. புதிய கல்விக் கொள்கையை அமல்படுத்துவதற்கு முன்பே அவசர அவசரமாக முப்பருவத் தேர்வு முறையை ரத்து செய்து, தமிழக அரசு ஆணை பிறப்பிப்பது வெந்த புண்ணில் வேலைப் பாய்ச்சுவதாக உள்ளது.
எனவே, மாணவர்களின் மனநலம் மற்றும் உடல் நலத்தைக் கருத்தில் கொண்டு தற்போது நடைமுறையில் இருக்கும் 1 முதல் 8 ஆம் வகுப்பு வரையான முப்பருவ முறையே தொடர வேண்டுமெனவும் 5 மற்றும் 8 ஆம் வகுப்புப் பொதுத்தேர்வை ரத்து செய்து கிராமப்புற மாணவர்களின் பயத்தையும் அச்சத்தையும் போக்க வேண்டும் என்றும் வலியுறுத்துகிறேன்'' என்று இளமாறன் தெரிவித்துள்ளார். # இந்த பயனுள்ள தகவலை அனைவருக்கும் பகிருங்கள் - யாரேனும் ஒருவருக்காவது பயன்படும்...
Post a Comment