பணிமாறுதல் சம்பள உயர்வு மகப்பேறு விடுப்பு EPF ESIசலுகைகள் தரவேண்டும். தமிழக அரசுக்கு பகுதிநேர ஆசிரியர்கள் வேண்டுகோள்.

Join Our KalviNews Telegram Group - Click Here


மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதா கடந்த 2012ல் அரசுப் பள்ளிகளில் உடற்கல்வி ஓவியம் கணினி இசை தையல் தோட்டக்கலை கட்டிடக்கலை வாழ்வியல்திறன்கல்வி ஆகிய கல்விஇணைச்செயல்பாடு பாடங்களை பகுதிநேரமாக நடத்திட16ஆயிரத்து 549 பகுதிநேர ஆசிரியர்களை நியமித்தார். தொகுப்பூதியம் ரூ.5ஆயிரம் தரப்பட்டது. இதனை ரூ.2ஆயிரம் உயர்த்தி நிலுவைத்தொகை ரூ.12 ஆயிரத்துடன் இவரது ஆட்சிகாலத்தில் தரப்பட்டது.

இவரது மறைவுக்குப்பின் எடப்பாடி பழனிசாமி முதல்வராகி ரூ.700 மட்டுமே தொகுப்பூதியத்தை 2017 ஆகஸ்டில் உயர்த்தி வழங்கினார். முன்புபோல ஊதியஉயர்வு ஏப்ரல்முதல் கணக்கிட்டு தராததால் ரூ.7700 ஆக தொகுப்பூதியம் உயர்ந்தது.

இந்த சொற்ப ஊதியத்தில் கடும்விலைவாசி உயர்வினை இந்த ஆசிரியர்கள் தங்களது குடும்பங்களை சமாளிக்க முடியாமல் சிரமப்படுகின்றனர். இதனுடன் இன்னும் இவர்களுக்கு 7வது ஊதியக்குழுவின் 30 சதவீத ஊதியஉயர்வு தரப்படாமல் உள்ளதால் மிகவும் கவலையுடன் உள்ளனர். இதனை கொடுத்திருந்தால் இந்நேரம் ரூ.10ஆயிரம் சம்பளமாவது கிடைத்திருக்கும். ஊதியக்குழு அனைவருக்கும் பொதுவானது, இதனை மத்தியஅரசின் திட்டவேலையில் தமிழகஅரசு நியமித்த இப்பகுதிநேர ஆசிரியர்களுக்கு இதுவரை தராமல் உள்ளது அடிப்படை உரிமையை பறிக்கும் செயலாகும்.

அவ்வப்போது அரசுஊழியர்கள் மற்றும் ஆசிரியர்களுக்கு அகவிலைப்படி உயர்த்தப்படுகிறது. அதைப்போலவே  தொகுப்பூதியப்பணியில் உள்ளவர்களுக்கும் ஊதியஉயர்வுகள் விலைவாசிஉயர்வுக்கேற்ப உயர்த்தி தருவதே நியாயமானது. இதனை துறைரீதியாக உடனடியாக அமுல்செய்ய வேண்டும் என கோரிக்கை எழுந்துவருகிறது. இதில் தினக்கூலிகள், தற்காலிக தொகுப்பூதிய பணியாளர்கள், பகுதிநேர பணியாளர்கள், அரசின் திட்டவேலையில் பணிபுரிபவர்கள் என பாரபட்சம் காட்டக்கூடாது என தெரிவிக்கின்றனர்.

கல்வித்துறையில் ஒருங்கிணைந்தக்கல்வியில் ஒரு அங்கமாக 9 கல்விஆண்டுகளாக பணிபுரிந்துவரும் இப்பகுதிநேர ஆசிரியர்களுக்கு தற்போது ரூபாய் 7700 தொகுப்பூதியத்தை தவிர வேறெந்த சம்பள சலுகைகளும் இவர்களுக்கு கிடையாது.

 ஆனால் ஆந்திரா மாநில பகுதிநேர ஆசிரியர்கள் ரூபாய்14ஆயிரம் தொகுப்பூதியமாக பெறுகிறார்கள். இதனுடன் வருங்கால வைப்பு நிதி, 6 மாதம் மகப்பேறுகாலவிடுப்பு, இதர விடுப்பு சலுகைகளும் கிடைக்கின்றது. 

கர்நாடகா மாநில பகுதிநேர ஆசிரியர்கள் ரூ10ஆயிரம் தொகுப்பூதியமாக பெறுகிறார்கள். இதனுடன் ESI மற்றும் 3 பள்ளிகளில் பணியும் கிடைக்கின்றது.

ஒரிசா மாநில பகுதிநேர ஆசிரியர்களுக்கும் சம்பளத்துடன் EPF நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளது.

இதனால் தமிழக அரசுப்பள்ளிகளில் பணியாற்றும் 12 ஆயிரம் பகுதிநேர ஆசிரியர்கள் தங்களுக்கு ஊதியத்தை உயர்த்தி தரவும், இதர சலுகைகளும் தர தமிழக அரசை வலியுறுத்தி வருகின்றனர்.

ஆனால் பகுதிநேர ஆசிரியர்கள் ஊதியஉயர்வு கேட்கும் போதெல்லாம் தமிழகஅரசு நிதி நெருக்கடியில் இருக்கிறது. அதுவும் பகுதிநேர ஆசிரியர்கள் மத்திய அரசின் திட்டவேலையில் உள்ளவர்கள். மத்திய அரசு போதுமான நிதியை தருவதில்லை என தமிழகஅரசு கைவிரித்து வருகிறது. அரசின் இந்த பதில் தமிழக அரசால் நியமிக்கப்பட்ட பகுதிநேர ஆசிரியர்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சியை உண்டாக்கிவருகிறது.

மத்திய அரசின் திட்டமாக இருந்தாலும் தமிழகஅரசு தமிழ்நாடு மாநில மாணவர்களின் நலன்கருதி பகுதிநேர ஆசிரியர்களை நியமித்தது. இவர்களின் சம்பளத்திற்கான நிதிபங்களிப்பு மத்தியஅரசு 60 சதவீதம் மற்றும் மாநிலஅரசு 40 சதவீதம் என ஒப்புக்கொள்ளப்பட்டு இத்திட்டம் செயல்படுத்தப்பட்டுவருகிறது. அதனால் மத்தியஅரசு நிதி பங்கினை தருவதில்லை என்றாலும் நிதியை கேட்டு பெறவேண்டியது இந்த ஆசிரியர்களை நியமனம் செய்த மாநில அரசின் தலையாய கடமையாகும்.

ஊதியம் உயர்த்தி இப்போது 2 ஆண்டுகள் முடிந்தும் அரசு மாற்றாந்தாய் மனப்போக்குடன் நடத்துவதாக தங்களின் கவலையை இந்த ஆசிரியர்கள் தெரிவித்து வருகின்றனர்.

இதுகுறித்து பகுதிநேர ஆசிரியர்கள் கூட்டமைப்பின் மாநில ஒருங்கிணைப்பாளர் செந்தில்குமார் கூறியது:-

எங்களை நியமிக்கும்போது இருந்த அரிசி, பால், கேஸ் சிலிண்டர்,வீட்டுவாடகை, மின்சாரகட்டணம், பெட்ரோல்விலை, பஸ்டிக்கெட், டீ,பிஸ்கெட் எல்லாம் 2 மடங்கு விலை உயர்ந்துவிட்டது. மலைபோல ஏறிவிட்ட விலைவாசி உயர்வை எங்களால் சமாளிக்க முடியவில்லை. எனவே தமிழக முதல்வரும், துணை முதல்வரும்,பள்ளிக்கல்வி அமைச்சரும் ஒருங்கிணைந்து சம்பளஉயர்வை மனிதநேயத்துடன் அறிவித்து வாழ்வாதாரத்தை பாதுகாத்திட வேண்டுகிறோம்.

2ஆயிரம் பேர் இன்னும் சொந்த ஊருக்கு அருகில் உள்ள பள்ளிகளில் பணிமாறுதல் கிடைக்காமல் தொடர்ந்து சிரமத்தில் உள்ளனர். எனவே பணிமாறுதல் குறித்த ஆணைகளை உடனடியாக பிறப்பிக்க வேண்டும்.

வெளி மாநிலங்களில் இதேவேலையில் உள்ளவர்களுக்கு ஆந்திராவில் ரூ.14ஆயிரம்,கர்நாடகாவில் ரூ.10ஆயிரம் தருகிறார்கள். சம்பளத்துடன் EPF. ESI, மகப்பேறு விடுப்பு, தற்செயல் விடுப்பும் தருகிறார்கள். இதனை தமிழக அரசு எங்களுக்கும் கிடைக்கசெய்ய வேண்டும்.

இதுவரை 50க்கும் மேற்பட்டவர்கள் பணியில் சேர்ந்தபின்னர் இறந்துபோய்விட்டனர்.  மனிதநேயத்துடன் தமிழகஅரசு இறந்தவர்களின் குடும்பத்திற்கு 3 இலட்சம் நிதி வழங்கி உதவ வேண்டும்.இறந்தவர்களின் குடும்பத்தில் தகுதியுள்ள ஒருவருக்கு வேலைவழங்கவேண்டும்.இறந்தவர்களின் குடும்பத்திற்கு இதனை அரசு செய்வதே பணியில் தொடரும் எங்களுக்கு பாதுகாப்பானது. இதனை மனிதாபிமானத்துடன் அரசாணையாக வெளியிடவேண்டும்.

பணிநிரந்தரம் செய்வோம், பணிநிரந்தரத்திற்கு கமிட்டி அமைப்போம் என 2017ம் ஆண்டில் சட்டசபையில் கல்விஅமைச்சர் செங்கோட்டையன் அறிவித்துவிட்டு இப்போது பணிநிரந்தரம் செய்ய முடியாது என அடிக்கடி செய்தியாளர்கள் சந்திப்பில் பரப்பாக சொல்லி வருகிறார்.பணிநிரந்தரத்தை மறுக்கும்போது அதிகபட்ச சம்பளத்தையாவது தரவேண்டும். இதற்கான நிதிச்செலவை தமிழகஅரசு எங்களின் வாழ்வாதாரம் மேம்பட ஏற்றுக்கொள்ளவேண்டும்.மத்தியஅரசு எங்களை நியமிக்கவில்லை. இத்திட்டப்படி 60சதவீதம் நிதியை மத்தியஅரசு அளிக்கவேண்டும். 40சதவீதம் நிதியை தமிழகஅரசு அளிக்கவேண்டும்.மத்தியஅரசை காரணம் காட்டக்கூடாது  என்றார். எங்களின் கருணைமனு, 8 அம்ச கோரிக்கைகள் அடங்கிய தொகுப்பை முதல்வர் தனிப்பிரிவு, பள்ளிக்கல்வி அமைச்சர் அலுவலகத்தில் கொடுத்துள்ளோம். எனவே அரசு பகுதிநேர ஆசிரியர்களின் கோரிக்களின் மீது கவனம் செலுத்தி விரைந்து நடைமுறைப்படுத்த என்றார்.

இவண்


சி.செந்தில்குமார்


மாநில ஒருங்கிணைப்பாளர்


தமிழ்நாடு அனைத்துப் பகுதிநேர ஆசிரியர்கள் கூட்டமைப்பு


செல் நம்பர் : 9487257203

இந்த பயனுள்ள தகவலை அனைத்து வாட்ஸ்அப் குழுக்களிலும் பகிருங்கள் - யாரேனும் ஒருவருக்காவது பயன்படும்..

கருத்துரையிடுக

0 கருத்துகள்