அலுவலகப் பணிகளில் அரசுப்பள்ளி ஆசிரியர்கள்; கற்பித்தலுக்கு பெரும் பாதிப்பு!!


அலுவலகப் பணிகளில் அரசுப்பள்ளி ஆசிரியர்கள் ஈடுபடுத்தப்படுவதால், கற்பித்தலுக்கு பெரும் பாதிப்பு ஏற்படுவதாக தமிழ்நாடு ஆசிரியர் சங்கம் வேதனை தெரிவித்துள்ளது.

இதுதொடர்பாக அச்சங்கத்தின் மாநிலத் தலைவர் பி.கே.இளமாறன் வெளியிட்டுள்ள அறிக்கையில், ''தமிழ்நாடு அரசு பள்ளிக் கல்வித்துறையின் கீழ் 37,358 அரசுப் பள்ளிகள் இயங்கி வருகின்றன. 8,386 அரசு உதவி பெறும் பள்ளிகள் செயல்பட்டு வருகின்றன. தொடக்க, நடுநிலை, உயர்நிலை, மேல்நிலைப் பள்ளிகள் என மொத்தம் 45,744 பள்ளிகள் உள்ளன. இவற்றில் அரசுப் பள்ளிகளில் 54,71,544 மாணவர்களும், அரசு உதவி பெறும் பள்ளிகளில் 28,44,693 மாணவர்களும் பயின்று வருகிறார்கள்.

மிகச்சிறந்த முறையில் பாடத் திட்டத்தை மாற்றியமைத்து புதிய பாடத்திட்டம் மூலம் தரமான கல்வியினை அளிப்பதில் பள்ளிக் கல்வித்துறை மேலோங்கியுள்ளது. ஆனால் அப்பாடத் திட்டத்தினை மாணவர்களுக்கு எடுத்துச் செல்ல ஆசிரியர்களுக்கு முழு வாய்ப்பளிக்க வேண்டும். அப்போதுதான் கற்றல்- கற்பித்தல் பணி சிறப்பாக நடந்து, அரசுப் பள்ளிகளில் கல்வித் தரம் உயரும்.

தற்போது பரவலாக அரசுப் பள்ளிகள் குறித்தும் ஆசிரியர்களைக் குறித்தும் கல்வித் தரமில்லை என்று தவறாகச் சித்தரித்து வருவது வேதனையளிக்கிறது. வருடம் முழுதும் ஆசிரியர்களைப் பல்வேறு பணிகளில் ஈடுபடச் செய்து இடையிடையே கற்பித்தல் பணி நடைபெற்றால் அரசுப் பள்ளிகளில் கல்வித்தரம் எப்படி உயரும்?

அலுவலர்கள், ஊழியர்கள், கணினி உதவியாளர்கள் இல்லாததால் அவர்கள் செய்ய வேண்டிய பணிகளையும் ஆசிரியர்களை மேற்கொள்ளச் செய்வதால் கற்பித்தல் பணி பாதிக்கிறது. மாணவர்களுக்கு ஆதார் அட்டை, சாதிச் சான்றிதழ், சிறுபான்மை மற்றும் ஆதி திராவிடர் உதவித் தொகை, வாக்காளர் சரிபார்ப்பு பணிகளான BLO,DLO இது தவிர அரசு வழங்கும் 14 வகையான சலுகைகள், திறன் தேர்வு இணையதளத்தில் பதிவு செய்தல், EMIS கல்வி மேலாண்மை தகவல் முகமை உள்ளிட்ட தொடர் பணிகளுக்கிடையே ஆசிரியர்களுக்கான பயிற்சிகள் என அரசுப் பள்ளி ஆசிரியர்கள் ஈடுபட்டு வருகிறார்கள். மேற்கண்ட பணிகள் எதையும் தனியார் மெட்ரிக் பள்ளிகளின் ஆசிரியர்கள் செய்வதில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும், மனித வள மேம்பாட்டுத்துறை அமைச்சகம் சார்பில் கடந்த 14.10.2019 முதல் ஆசிரியர்களுக்கு 5 நாட்கள் பயிற்சி நடைபெற்று வருகிறது. வாரந்தோறும் இரண்டு மூன்று ஆசிரியர்களுக்கு பயிற்சி என்பதால் கற்றல்- கற்பித்தல் பெரும்பாதிப்புக்கு உள்ளாகிறது. இப்பயிற்சிகள் மாநிலப் பாடத்திட்டத்தில் நடத்தும் தனியார் மெட்ரிக் பள்ளி ஆசிரியர்களுக்கு இல்லை.

எனவே அரசுப் பள்ளிகளை மேம்படுத்த, அரசுப் பள்ளி மாணவர்களின் கல்வித் தரத்தை உயர்த்திட அரசுப் பள்ளி ஆசிரியர்களுக்கு முழுமையாகக் கற்பித்தல் பணி செய்திட வாய்ப்பளிக்கும்படி தமிழ்நாடு ஆசிரியர் சங்கம் சார்பில் கேட்டுக்கொள்கிறேன்.

மேலும் அரசுப் பள்ளிகளில் தேவையான அலுவலக ஊழியர்கள், கணினி உதவியாளர்களை நியமித்திடவும், மத்திய மனிதவள மேம்பாட்டுத்துறை அமைச்சகம் நடத்தும் பள்ளித் தலைமையாசிரியர் மற்றும் ஆசிரியர் மேம்பாட்டுத் திறனுக்கான முன்னெடுப்பு (நிஷ்தா) பயிற்சியினை ஐந்து நாள்களிலிருந்து இரண்டு நாளாகக் குறைத்திட நடவடிக்கை எடுத்திடவும் தமிழக முதல்வரைக் கேட்டுக்கொள்கிறேன்'' என்று தெரிவித்துள்ளார்