கலையருவி போட்டியில் வென்ற சேலம் அரசுப் பள்ளி மாணவர்கள் கனடா செல்ல தேர்வு

Join Our KalviNews Telegram Group - Click Hereமாநில அளவிலான கலையருவிப் போட்டியில் வெற்றி பெற்ற சேலம் மாவட்டத்தைச் சேர்ந்த அரசுப் பள்ளி மாணவர்கள் இருவர் கனடா நாட்டு சுற்றுப் பயணத்துக்கு தேர்வு செய்யப்பட்டுள்ளனர்.

எடப்பாடியை அடுத்த கொங்கணாபுரம் சின்னப்பம்பட்டி அரசு உயர் நிலைப்பள்ளி பிளஸ் 1 மாணவர் மு.பாலாஜி பிரசாத் (16). முருகன், சந்திரமதி தம்பதியின் மகனான இவர் கடந்தாண்டு சமுத்திரம் அரசு உயர்நிலைப் பள்ளியில் எஸ்எஸ்எல்சி படித்தபோது, பள்ளிக் கல்வித்துறை சார்பில் நடந்த மாநில அளவிலான கலையருவி போட்டியில் ஓவியம் வரைதலில் முதலிடம் பெற்றார். மேலும், எம்ஜிஆர் நூற்றாண்டு விழாவையொட்டி, தமிழக அரசு சார்பில் நடந்த ஓவியப் போட்டியிலும் மாநில அளவில் முதலிடம் பெற்றார்.

சேலத்தில் நடைபெற்ற அரசுப் பொருட்காட்சியில் பள்ளிக் கல்வித்துறை அரங்கில், முதல்வர் பழனிசாமியின் ஓவியத்தை வரைந்து, முதல்வரிடம் பாராட்டு மற்றும் ரொக்கப் பரிசை பெற்றார்.

இதேபோல, சேலம் குகை அரசு மேல்நிலைப் பள்ளியில் கடந்த ஆண்டு பிளஸ் 2 பயின்ற மாணவர் லோ.மதிவாணன். லோகநாதன், ரேவதி தம்பதியின் மகனான இவர் பள்ளிக் கல்வித்துறை சார்பில் நடந்த மாநில அளவிலான கலையருவிப் போட்டியில், பிற மொழியில் கவிதை புனைதல் பிரிவில் பங்கேற்றார்.

இப்போட்டியில், தாய், தந்தையரைப் பற்றி ஹிந்தியில் கவிதை கூறி, 2-வது இடம் பெற்றார். இவரது தாய் மொழி கன்னடம் தவிர, தமிழ், ஆங்கிலம், ஹிந்தி ஆகிய மொழிகள் பேசவும், எழுதவும் தெரியும் என்பது குறிப்பிடத்தக்கது.

மாநில அளவிலான கலையரு விப் போட்டியில் வெற்றி பெற்ற மாணவர்கள் மு.பாலாஜி பிரசாத், லோ.மதிவாணன் ஆகியோர் கனடா நாட்டில் கலை, இலக்கிய சுற்றுலாப் பயணம் மேற்கொள்ள தேர்வு செய்யப்பட்டுள்ளனர்.
இந்த பயனுள்ள தகவலை அனைத்து வாட்ஸ்அப் குழுக்களிலும் பகிருங்கள் - யாரேனும் ஒருவருக்காவது பயன்படும்..