தமிழகத்தில் 6 புதிய மருத்துவக் கல்லூரிகள், பிஎஸ்என்எல் நிறுவனத்திற்கு 4ஜி உரிமம் : மத்திய அமைச்சரவை ஒப்புதல்

Join Our KalviNews Telegram Group - Click Here
9092837307 - Add This Number In Your Whatsapp Groups - 9092837307


தமிழகத்தில் 6 புதிய மருத்துவக் கல்லூரிகள் தொடங்க மத்திய அரசு ஒப்புதல் அளித்துள்ளது. திருப்பூர், நீலகிரி, ராமநாதபுரம், நாமக்கல், திண்டுக்கல், விருதுநகரில் புதிய மருத்துவக் கல்லூரிகளை தலா ரூ.325 கோடியில் அமைக்க மற்றும் தொடங்குவதற்கு மத்திய அரசு அனுமதி அளித்துள்ளது.

பிரதமர் மோடி தலைமையில் மத்திய அமைச்சரவை கூட்டம்

நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடர் கூடவுள்ள நிலையில், பிரதமர் மோடி தலைமையில் மத்திய அமைச்சரவை கூட்டம் இன்று நடைபெற்றது. நாடாளுமன்ற குளிர்காலக் கூட்டத் தொடர் வரும் நவ.18ம் தேதி தொடங்கவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இதையொட்டி, பிரதமர் நரேந்திர மோடி தலைமையில் இன்று டெல்லியில் மத்திய அமைச்சரவைக் கூட்டம் நடைபெற்றது.. இந்த கூட்டத்தில் நாடாளுமன்ற கூட்டத்தொடர் மற்றும் கூட்டத்தொடரில் கொண்டுவரவுள்ள நலத்திட்டங்கள். சட்டத்திருத்தங்கள் குறித்து ஆலோசிக்கப்பட்டது. அதே சமயம் பல்வேறு திட்டங்களுக்கும் மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்தது.

மத்திய அமைச்சரவை ஒப்புதல் வழங்கியவை

*பிஎஸ்என்எல் மற்றும் எம்டிஎன்எல். தொலைத்தொடர்பு நிறுவனங்களுக்கு 4ஜி அலைக்கற்றை வழங்க ஒப்புதல் வழங்கப்பட்டுள்ளது. பிஎஸ்என்எல் மற்றும் எம்டிஎன்எல்.நிறுவனங்களை மறு சீரமைக்க ரூ.15,000 கோடி நிதி ஒதுக்கவும் ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது.

*தமிழகத்தில் 6 புதிய மருத்துவக் கல்லூரிகள் தொடங்க மத்திய அரசு ஒப்புதல் அளித்துள்ளது. திருப்பூர், நீலகிரி, ராமநாதபுரம், நாமக்கல், திண்டுக்கல், விருதுநகரில் புதிய மருத்துவக் கல்லூரிகளை தலா ரூ.325 கோடியில் அமைக்க மற்றும் தொடங்குவதற்கு மத்திய அரசு அனுமதி அளித்துள்ளது. 6 புதிய மருத்துவக் கல்லூரிகள் அமைக்க மத்திய அரசு தலா ரூ.195 கோடியும், மாநில அரசு தலா ரூ.130 கோடியும் வழங்குகிறது.6 புதிய மருத்துவ கல்லூரிகளால் தமிழகத்திற்கு கூடுதலாக 900 எம்பிபிஎஸ் சீட்கள் கிடைக்கும். 900 இடங்களில் 85% தமிழக மாணவர்களுக்கும் 15%பிற மாநிலத்தவர்களுக்கும் வழங்கப்படும்.

*கோதுமை, பார்லி உள்ளிட்ட 6 விவசாய பொருட்களுக்கான 2019-20ம் ஆண்டு விலை நிர்ணயத்திற்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது. மேலும் கணிசமாக உயர்த்தப்பட்டுள்ள அடிப்படை ஆதார விலை நிர்ணயத்திற்கும் மத்திய அமைச்சரவை ஒப்புதல் வழங்கியுள்ளது.

*புதிய நிறுவனங்கள் பெட்ரோல் பங்குகளை தொடங்க மத்திய அரசு அனுமதி அளித்துள்ளது. புதிய பெட்ரோல் பங்க் திறக்க அனுமதிப்பதால் ஏராளமான வேலை வாய்ப்புகள் உருவாகும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

*டெல்லியில் அங்கீகரிக்கப்படாத வீடுகளில் வாழும் 40 லட்சம் பேருக்கு பட்டா வழங்கப்படும் என மத்திய அரசு தெரிவித்துள்ளது.

*பெட்ரோலை சில்லறை விற்பனை மூலம் மேற்கொள்ள மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது.  இந்த ஒப்புதல் மூலம் பெட்ரோல் ஹோம் டெலிவரி செய்யும் திட்டத்திற்கு அனுமதி கிடைத்துள்ளது.

ரவிசங்கர் பிரசாத் கூறியதாவது:

இந்த கூட்டத்தில் எடுக்கப்பட்ட முடிவுகள் குறித்து  மத்திய அமைச்சர் ரவிசங்கர் பிரசாத் செய்தியாளர்களிடம் பேசும்போது கூறியதாவது:பிஎஸ்என்எல் நிறுவனத்திற்கு 4ஜி உரிமம் வழங்க பிரதமர் மோடி தலைமையிலான மத்திய அமைச்சரவை கூட்டத்தில் ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது. பிஎஸ்என்எல் மற்றும்  எம்டிஎன்எல் நிறுவனங்களை மூடப்போவதாக வரும் செய்திகளில் உண்மை கிடையாது.அதேபோல் இந்த இரண்டு நிறுவனங்களில் இருந்து அரசின் பங்குகளை விலக்கிக் கொள்ளப் போவதோ அல்லது ஏதேனும் ஒரு மூன்றாம் நிறுவனத்திற்கு  குத்தகைக்கு விடப்போவதோ  இல்லை.மாற்றாக பிஎஸ்என்எல் மற்றும் எம்டிஎன்எல் நிறுவனங்கள் ஒன்றாக இணைக்கப்படும். பிஎஸ்என்எல்-லில் இருந்து விருப்ப ஓய்வு (VRS) பெறுவோருக்கு சிறப்பு ஓய்வூதிய தொகுப்பு வழங்கப்படும். இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.