புதியதாக அச்சிட்டு வழங்கப்பட்டுள்ள பாடங்கள் தொடர்பாக 11 ஆயிரம் ஆசிரியர்களுக்கு பயிற்சி அளிக்க மாநில கல்வியியல் ஆராய்ச்சி மற்றும் பயிற்சி நிறுவனம் முடிவு

Join Our KalviNews Telegram Group - Click Here

பிளஸ் 2 வகுப்புக்கு புதியதாக அச்சிட்டு வழங்கப்பட்டுள்ள இயற்பியல் பாடங்கள் தொடர்பாக மேனிலைப் பள்ளி ஆசிரியர்கள் 11 ஆயிரம் பேருக்கு பயிற்சி அளிக்க மாநில கல்வியியல் ஆராய்ச்சி மற்றும் பயிற்சி நிறுவனம் முடிவு  செய்துள்ளது.

பிளஸ் 2 வகுப்புக்கான கணக்கு, இயற்பியல், வேதியியல் உள்ளிட்ட இரண்டாம் தொகுதி பாடப்புத்தகங்கள் கடந்த வாரம் பள்ளி மாணவர்களுக்கு வழங்கப்பட்டது. அந்த இரண்டாம் தொகுதியில் இடம் பெற்றுள்ள பாடங்களை  நடத்துவது குறித்து முதுநிலை பட்டதாரி ஆசிரியர்களுக்கு தற்போது பயிற்சி அளிக்கப்பட்டு வருகிறது.

 இந்த பயிற்சியில் மாவட்ட வாரியாக கணக்கு, இயற்பியல், வேதியியல் பாடங்களில் தலா 3 முதுநிலை பட்டதாரி ஆசிரியர் வீதம் 288 பேர்  பயிற்சி பெறுகின்றனர்.

இந்த பயற்சி பெறும் ஆசிரியர்கள் அந்தந்த மாவட்டங்களில் உள்ள மற்ற ஆசிரியர்களுக்கு 22ம் தேதி முதல் 31ம் தேதி வரை பயிற்சி அளிப்பார்கள்.

 இதன் மூலம் 11 ஆயிரத்து 145 ஆசிரியர்கள் பயன் பெறுவார்கள்.

 இதையடுத்து, மத்திய மனித  வள மேம்பாட்டுத்துறை(எம்எச்ஆர்டி), தேசிய கல்வியியல் ஆராய்ச்சி மற்றும் பயிற்சி நிறுவனம்(என்சிஇஆர்டி), தேசிய கல்வித் திட்டமிடல் மற்றும் நிர்வாக நிறுவனம்(என்ஐஇபிஏ) ஆகியவை இணைந்து உருவாக்கப்பட்ட, தேசிய அளவிலான  பள்ளித் தலைமை  ஆசிரியர் மற்றும் ஆசிரியர்களின் மேம்பாட்டுக்கான பயிற்சியும் மாவட்ட அளவில் நடத்தப்படுகிறது.

 இதில் 1ம் வகுப்பு முதல் 8ம் வகுப்புகளை கையாளும் 335 உயர் தொடக்க நிலை, 459 தொடக்கநிலை ஆசிரியர்களுக்கு 5  நாட்கள் ஒருங்கிணைந்த பயிற்சி 5கட்டங்களாக நவம்பர் 15ம் தேதி வரை நடக்கிறது. சென்னை மாவட்டத்தில் ஜார்ஜ் டவுன், ராயபுரம், பெரியமேடு, பெரம்பூர்,  ஆகிய மண்டலங்களில் நடக்கிறது.

இந்த பயிற்சியில் என்சிஎப் 2009 தேசிய கல்விக் கொள்கையின் படி உருவாக்கப்பட்ட கற்றல் விளைவுகள், கலைத்திட்ட எதிர்பார்ப்புகள், கற்றல் செயல்முறைகள் ஆகியவற்றுடன் ஒரு தொடர்பை ஏற்படுத்த உதவும் வகையில்  வடிவமைக்கப்பட்டுள்ளது.

 மாணவர்கள் அந்தந்த சூழ்நிலைகளுக்கு ஏற்றபடி செயல்படத் தேவையான திறன்கள், அறிவு, பொறுப்புணர்வு போன்றவற்றை பெறும் வகையில் கற்றல் கற்பித்தல் செயல்பாடுகளை வடிவமைத்து செயல்படுத்த உதவும்  கருத்துகள் இந்த பயிற்சியின் மூலம் ஆசிரியர்களுக்கு வழங்கப்பட உள்ளது.
🔴🔴 இந்த பயனுள்ள தகவலை அனைத்து Whatsapp குழுக்களிலும் பகிருங்கள் - யாரேனும் ஒருவருக்காவது பயன்படும்.