5, 8ஆம் பொதுத்தேர்வு குலக்கல்வி முறையை ஊக்குவிக்கும்- ஆசிரியர் சங்கம்

ஒன்றாம் வகுப்பு முதல் எட்டாம் வகுப்புவரை அனைத்து மாணவர்களும் கட்டாயமாக தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும் என்ற முறை தற்போது நடைமுறையில் உள்ளது. இந்நிலையில் இந்த ஆண்டின் தொடக்கத்தில் மத்திய அரசு கல்விக்கொள்கையில் சில திருத்தங்களை அறிவித்தது. கடந்த பிப்ரவரி 11ஆம் தேதி வெளியான மத்திய அரசிதழின் படி, மாணவர்களுக்கு 5 மற்றும் 8 ஆம் வகுப்புகளில் பொதுத்தேர்வு நடத்த வேண்டும். இதில் தோல்வியுற்ற மாணவர்களுக்கு அடுத்த இரண்டு மாதத்தில் மறு தேர்வுகள் நடத்தப்படும். அதிலும் தோல்வியுற்ற மாணவர்கள் மீண்டும் அதே வகுப்பில் படிக்கவேண்டும் எனக் கூறப்பட்டிருந்தது.

இதற்கு நாடு முழுவதும் பல்வேறு தரப்பினர் எதிர்ப்புகள் தெரிவித்தனர்.

இந்த அறிவிப்பு மசோதாவாகவும் நிறைவேற்றப்பட்டது. ஆனால், இதற்கு அனைத்து மாநிலங்களிலும் எதிர்ப்புகள் வெளியான நிலையில், இது தொடர்பாக மாநிலே அரசே முடிவெடுக்கும்படி மாற்றம் கொண்டு வரப்பட்டது.

இந்த விவகாரம் தொடர்பாக பள்ளிக்கல்வித்துறை இயக்குனரகம் சார்பாக நேற்று அறிக்கை வெளியிடப்பட்டது. அதில், தமிழகத்தில் மாநிலப் பாடத்திட்டத்தை பின்பற்றும் அனைத்துப் பள்ளிகளிலும் இந்தக் கல்வியாண்டு முதல் 5 மற்றும் 8ஆம் வகுப்பு மாணவர்களுக்கு பொதுத்தேர்வு நடத்தப்படும். ஆனால், தேர்வு முடிவுகளைக் கொண்டு மாணவர்களின் தேர்ச்சி 3 ஆண்டுகளுக்கு நிறுத்த வேண்டாம் எனத் தெரிவித்துள்ளது.

இதுதொடர்பாக தமிழக ஆசிரியர் முன்னேற்ற சங்கத்தின் மாநிலத் தலைவர் தியாகுவிடம் பேசினோம். அவர் கூறியதாவது: தமிழக அரசு அவசர நிலையில் இதைக் கொண்டுவருவது கண்டிக்கத்தக்கது. ஏற்கெனவே அரசுப் பள்ளிகளில் மாணவர்கள் குறைவான எண்ணிக்கையில் உள்ளனர் என அமைச்சர்கள் கூறி வருகின்றனர். ஓராசியர், இரண்டு ஆசிரியர் உள்ளப் பள்ளிகளை நூலகங்களாக மாற்றி வருகின்றனர். பள்ளிகளில் முறையாக ஆசிரியர்களை நியமித்து மாணவர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கச் செய்யவேண்டும்.

தமிழக அரசு 5, 8 ஆம் வகுப்புகளுக்கு பொதுத்தேர்வு கொண்டு வருவதன் மூலம் மீண்டும் குலக்கல்வி முறையைக் கொண்டுவரப் பார்க்கிறது. ஒரு மாணவரை 5ஆம் வகுப்பில் தேர்ச்சிப் பெறவில்லை என நிறுத்திவிட்டால், அந்த மாணவன் பின் கல்வியைத் தொடர்வான் என்பது சந்தேகம்தான். இதனை அனுபவப்பூர்வமாக நாங்கள் பார்த்துள்ளோம். இவ்வாறு அவர் தெரிவித்தார். மேலும் இவர் கூறிய கருத்துக்கள் முழுமையாகக் கீழே ஆடியோ வடிவில் உள்ளது.

அதேபோல தமிழ்நாடு ஆசிரியர் முன்னேற்ற சங்கத்தின் மாநில ஒருங்கிணைப்பாளர் ஆ.மணிகண்டன் அவர்களை தொடர்பு கொண்டோம். அவர் கூறியதாவது: தற்போது 10 மற்றும் 12ஆம் வகுப்பு பொதுத் தேர்வுகளுக்குப் பின் மாணவர்கள் தோல்வியின் காரணமாக தற்கொலை செய்துகொள்வது சமீபகாலமாக குறைந்து வருகிறது. இந்த தற்கொலை சம்பவங்கள் நடைபெறுவதற்கான முக்கிய காரணமே மன உளைச்சல்தான் காரணம். இவ்வளவு செலவு செய்து படிக்க வைத்துள்ளோம், மதிப்பெண் குறைவாக எடுத்துவிட்டாய் எனக் குறை கூறுவர். இதனால் மன உழைச்சல் ஏற்பட்டு பலர் தற்கொலை முடிவை எடுக்கின்றனர்.

தற்போது 5ஆம் வகுப்பிலே மாணவர்களுக்கு பொதுத்தேர்வை கொடுக்கும்போது அவர்கள் சிறு வயதிலேயே அதிக மன உழைச்சலுக்கு ஆளாவர்கள். 5ஆம் வகுப்பில் பொதுத்தேர்வு வைக்கும் போது மாணவர்களுக்கு 3ஆம் வகுப்பிலேயே பயிற்சி வகுப்புகளுக்கு அனுப்புவர். விளையாட வேண்டிய வயதில் மாணவர்கள் பயிற்சி வகுப்புகளில் இருந்து படிப்பார்கள். இதனால் மாணவர்களின் முழுக்க முழுக்க படிப்பில் மட்டும் கவனம் செலுத்துவார்கள். விளையாட்டு, ஓவியம் எனப் பிறத் துறைகளில் அவர்களது திறமைய வெளிப்படுத்த முடியாமல் போகும்.

தற்போது 3 ஆண்டுகளுக்கு தேர்ச்சியை நிறுத்தி வைக்கவேண்டாம் எனத் தமிழக அரசு தெரிவித்துள்ளது. பின்னாளில் இவை மாற்றப்படலாம். 8ஆம் வகுப்பு வரும்போது 5ஆம் வகுப்பில் தேர்ச்சிப் பெறவில்லை எனக் கூறி மாணவர்களை மீண்டும் அதே தேர்வை எழுத சொல்வதற்கான வாய்ப்புகள் அதிகம் உள்ளது.

ஒரு மாம்பழம் நன்றாகப் பழுத்தப்பின்பு அதில் நல்லது, சிறந்தது எனத் தேர்ந்தெடுக்கலாம். ஆனால் பிஞ்சாக இருக்கும் போதே தேர்ந்தெடுப்பதென்பது முறையானது அல்ல. மாணவர்களுக்கு தேவையானது மனப் பாடச்சக்தி மட்டுமல்ல.

அதாவது மதிப்பெண்களை மட்டும் வைத்து ஒருவர் அறிவாளி, திறமைசாலி எனக் கூறமுடியாது. வாய்ப்பாடுகள் கூடத் தெரியாமல் பலர் பேராசிரியர்களாகியுள்ளனர். ஒருவருக்கு ஒரு விசயம் தெரிந்திருக்கும், மற்றொன்று தெரிந்திருக்காது. அதை வைத்துக்கொண்டு அவர்களின் திறமையைக் கணக்கிடுவது தவறு. திறமை பயிற்சியின் மூலம் தான் வருமேத் தவிற பரிட்சையினால் வராது.

மாணவர்களுக்கு பாடத்திட்டங்களில் புதிய அம்சங்களை அறிமுகப்படுத்தியிருக்கலாம். அவர்களது திறமையை வளர்த்துக்கொள்ளும் வகையில் புதியப் பாடத் திட்டங்களை அறிமுகப்படுத்தி இருக்கலாம். ஆனால் பொதுத்தேர்வு என்பது தேவையில்லாத ஒன்று. குழந்தைகளுக்கு மன அழுத்தம் இருக்கவேக் கூடாது. 14 வயது வரை உள்ளக் குழந்தைகள் மனவலிமை மற்றும் உடல்வலிமை அடையாத பருவத்தினர். அவர்களுக்கு கூடுமான வரை கற்றலை எளிமையாக்கவேண்டும்.

தற்போது 3 ஆண்டுகள் வரை தேர்ச்சியை நிறுத்தவேண்டாம் என தமிழக அரசு தெரிவித்துள்ளது. அதன்பின்னர் தேர்ச்சி பெறாத மாணவர்கள் மீண்டும் அதே வகுப்பில் படிக்கவேண்டும் என வரும் போது ஆரம்பக் கல்வியிலேயே மாணவர்கள் இடைநிற்றல் அதிகரிக்கும் என்றார்.