Title of the document
குளமங்கலத்தில் தாங்கள் படித்த அரசுப் பள்ளிக்கு முன்னாள் மாணவர்கள் விழா மேடை அமைத்து கொடுத்தனர்.


கீரமங்கலம், செப், 9.
குளமங்கலம் வடக்கு கிராமத்தில் தாங்கள் படித்த அரசுப் பள்ளிக்கு முன்னாள் மாணவர்கள் இணைந்து ரூ. 3 லட்சம் செலவில் விழா மேடை அமைத்துக் கொடுத்தனர்.


புதுக்கோட்டை மாவட்டம் கீரமங்கலம் அருகில் உள்ள குளமங்கலம் வடக்கு கிராமத்தில் அரசு உயர்நிலைப் பள்ளி உள்ளது. அந்தப் பகுதி மாணவர்கள் மட்டுமின்றி அருகில் உள்ள திருநாளூர், குளமங்கலம் தெற்கு கிராமத்தைச் சேர்ந்த மாணவ, மாணவிகளும் படித்து வருகின்றனர். தொடர்ந்து நூறு சதவீதம் தேர்ச்சி பெறும் பள்ளிகளில் இந்தப் பள்ளியும் ஒன்றாக உள்ளது. இந்த நிலையில் ஒவ்வொரு ஆண்டும் பள்ளியில் நடத்தப்படும் விழாக்களில் முக்கிய பிரமுகர்களை அழைத்து விழாக்கள் நடத்தும் முன்னாள்   மாணவர்கள் தங்கள் பயின்ற பள்ளியில் மேடை இல்லாமல் இருப்பதால் மேடை அமைத்துக் கொடுக்க  எண்ணினர்.
இந்த நிலையில் முன்னாள் மாணவர்கள் சங்கம் அமைத்து தாங்கள் படித்த அரசுப் பள்ளிக்கு தங்கள் சொந்த செலவில் விழா மேடை அமைப்பது என்று முடிவெடுத்து பணம் சேமித்து விழா மேடைகட்டினார்கள். மேடை பணிகள் முழுமையடைந்தது.

மேடையை பள்ளிக்கு ஒப்படைக்கும் விழா மற்றும் பள்ளியின் ஆண்டுவிழா, ஆசிரியர் தினவிழா ஆகிய முப்பெரும் விழா பள்ளி வாளகத்தில் தலைமை ஆசிரியர் ஸ்ரீதரன் தலைமையில் நடந்தது. விழாவில் பெற்றோர் ஆசிரியர் கழகத் தலைவர் ராமநாதன், முன்னாள் ஊராட்சி மன்றத் தலைவர் தயாளன், பள்ளி மேலாண்மைக்குழுத் தலைவர் மலர்விழி, பள்ளி வளர்ச்சிக்குமு செயலாளர் சங்கர், முன்னாள் ஒன்றியக்குழு உறுப்பினர் தியாகராஜன், முன்னாள் கல்விக்குழுத் தலைவர் சிவலிங்கம் ஆகியோர் முன்னிலை வகித்தனர். விழாவில் அறந்தாங்கி கல்வி மாவட்ட அலுவலர் திராவிடச்செல்வத்திடம் விழா மேடையை முன்னாள் மாணவர்கள் ஒப்படைத்தனர். ரூ. 3 லட்சம் மதிப்பில் விழா மேடை அமைத்துக் கொடுத்த முன்னாள் மாணவர் சங்கத்தினரை கல்வித்துறை அதிகாரிகளும், ஆசிரியர்களும் பாராட்டினார்கள். தொடர்ந்து மேடையில் ஆண்டுவிழா மற்றும் ஆசிரியர் தினவிழா, மாணவர்களின் கலை நிகழ்ச்சிகள், பரிசளிப்புகள் நடந்தது. முன்னதாக ஆசிரியர் சிவானந்தம் வரவேற்றார், ஆசிரியர் செம்புலிங்கம் நன்றி கூறினார்.
# இந்த பயனுள்ள தகவலை அனைவருக்கும் பகிருங்கள் - யாரேனும் ஒருவருக்காவது பயன்படும்...
Previous Post Next Post