Title of the document



சென்னை:தமிழக அரசின் நல்லாசிரியர் விருதுக்கு, விண்ணப்பம் பெறும் போது, விதிகளில் மாற்றம் ஏற்படுத்த கோரிக்கை எழுந்துள்ளது.முன்னாள் ஜனாதிபதி, டாக்டர் ராதாகிருஷ்ணனின் பிறந்த நாளான, செப்., 5ல், நாடு முழுவதும் ஆசிரியர் தினம் கொண்டாடப்படுகிறது. மத்திய - மாநில அரசுகளின் சார்பில், டாக்டர் ராதாகிருஷ்ணன் பெயரில், நல்லாசிரியர் விருதும் வழங்கப்படுகிறது.இந்த ஆண்டுக்கான, ஆசிரியர் தேசிய விருதுக்கு, ஆன்லைனில் விண்ணப்ப பதிவு முடிந்து உள்ளது. மாநில விருதுக்கான விண்ணப்ப பதிவு குறித்து, இன்னும் அறிவிப்பு வெளியாகவில்லை.

இந்நிலையில், நல்லாசிரியர் விருது வழங்குவதில், தமிழகத்தில் பல்வேறு மாற்றங்கள் தேவை என்ற, கோரிக்கை எழுந்துள்ளது.இது குறித்து, ஆசிரியர்கள் மற்றும் பெற்றோர் கூறியதாவது:ஆசிரியர்களின் வயது வரம்பு, பணிக்காலம் போன்றவற்றை கணக்கில் கொள்ளாமல், அவர்களின் திறமை, நேர்மை, அர்ப்பணிப்பு உணர்வுடன் கூடிய பணித்திறன் போன்றவற்றுக்கு, முக்கியத்துவம் தர வேண்டும்.போராட்டங்களில் ஈடுபடுவோர், ஊதிய பிரச்னைக்காக குரல் கொடுத்து, மாணவர்களின் கற்பித்தலில் பாதிப்பு ஏற்படுத்துவோர், திட்டங்களை அமல்படுத்த தடையாக இருப்போர், நீதிமன்ற வழக்குகளால், தேவையின்றி கல்வித்துறையின் செயல்பாடுகளை முடக்குவோர், பதவியை மட்டும் குறியாக வைத்து பணியாற்றுவோர் போன்றவர்களுக்கு, விருது வழங்கக் கூடாது.

கிரிமினல் வழக்குகள், ஒழுங்கு நடவடிக்கையில் சிக்கியோர், பள்ளி பணிகளில் சரிவர ஈடுபடாதோர், கட்டணம் வசூலிக்கும் டியூஷனுக்கு முக்கியத்துவம் கொடுப்போருக்கு, நல்லாசிரியர் விருது வழங்க பரிந்துரை செய்யக் கூடாது.அரசியல்வாதிகளின் சிபாரிசு, அதிகாரிகளின் செல்வாக்கால் பதவிக்கு வந்தவர்கள், அதிகார துஷ்பிரயோகத்தால் பரிசு பெற நினைப்பவர்கள் போன்றவர்களுக்கும், நல்லாசிரியர் விருது கூடாது. இந்த நிபந்தனைகளை உள்ளடக்கி, விதிகளை மாற்ற வேண்டும்.இவ்வாறு அவர்கள் கூறினர்


# இந்த பயனுள்ள தகவலை அனைவருக்கும் பகிருங்கள் - யாரேனும் ஒருவருக்காவது பயன்படும்...

Post a Comment

Previous Post Next Post