தேசிய கல்விக் கொள்கை குறித்து மாற்றுத்திறனாளிகளிடம் கருத்துக் கேட்பு: மத்திய, மாநில அரசுகள் பதிலளிக்க உத்தரவு

Join Our KalviNews Telegram Group - Click Here
9092837307 - Add This Number In Your Whatsapp Groups - 9092837307தேசிய கல்விக் கொள்கையின் வரைவு அறிக்கை தொடர்பாக மாற்றுத்திறனாளிகளிடம் கருத்துக் கேட்கக் கோரும் மனுவுக்கு மாற்றுத் திறனாளிகளின் நலத் துறையின் மத்திய, மாநில ஆணையர்கள் பதிலளிக்க சென்னை உயர்நீதிமன்றம் மதுரைக்கிளை வெள்ளிக்கிழமை உத்தரவிட்டது.

தேசிய கல்விக் கொள்கையின் வரைவு அறிக்கையை அரசியலமைப்பு சட்டத்தின் அட்டவணை 8 இல் உள்ள தமிழ் உள்ளிட்ட 22 மொழிகளிலும் மொழி பெயர்த்து வெளியிட வேண்டும். அந்தந்த மாநில மக்களின் கருத்துகளை கேட்டறிந்த பின்பு, தேசிய கல்விக் கொள்கையை அமல்படுத்த வேண்டும் என உத்தரவிடக்கோரி வழக்குரைஞர் பகத்சிங் சென்னை உயர்நீதிமன்ற மதுரைக்கிளையில் மனு தாக்கல் செய்திருந்தார்.

இவ்வழக்கில், தேசிய கல்விக் கொள்கையின் வரைவு அறிக்கையை மாற்றுத்திறனாளிகள் அறிந்துகொள்ளவும், அவர்களிடம் கருத்துக்கேட்கவும் உத்தரவிட வேண்டும் என தீபக்நாதன் என்பவர் கூடுதல் மனு தாக்கல் செய்திருந்தார். 
இந்த மனு, நீதிபதிகள் எம். சத்யநாராயணன், பி. புழேந்தி ஆகியோர் கொண்ட அமர்வில் வெள்ளிக்கிழமை விசாரணைக்கு வந்தது. அப்போது கூடுதல் மனுவின் சார்பில் ஆஜரான வழக்குரைஞர், பார்வை, செவித்திறன் குறைபாடு உள்ள மாற்றுதிறனாளிகள் தேசிய கல்விக் கொள்கை வரைவு அறிக்கையை அறிந்து கொள்ளும் வகையில் அரசு எந்த ஏற்பாடு செய்யவில்லை. 
எனவே, மாற்றுதிறனாளிகள் அறிந்துகொள்ளும் வகையில் உரிய ஏற்பாடுகளை வழங்கி, அவர்கள் அறிக்கையை அறிந்துகொள்ள கூடுதல் கால அவகாசம் வழங்க வேண்டும் என தெரிவித்தார்.
தொடர்ந்து அரசுத் தரப்பு வழக்குரைஞர், தேசிய கல்விக் கொள்கை வரைவு அறிக்கை ஆங்கிலம் மற்றும் ஹிந்தியில் வழங்கப்பட்டுள்ளது. பிற மாநில மொழிகளில் தேசிய கல்விக் கொள்கை வரைவு அறிக்கையின் சுருக்கம் மொழி பெயர்த்து வழங்கப்பட்டுள்ளது.

அறிக்கையின் முழு விவரத்தையும் அனைத்து மொழிகளிலும் மொழிபெயர்க்க வேண்டும் என்பது அவசியமில்லை. விரிவான கருத்துக் கேட்பு கூட்டங்கள் நடைபெற்று வருகின்றன. மக்களவை, மாநிலங்களவை உறுப்பினர்களின் கருத்துக்கள் ஏற்றுக்கொள்ளப்படும் எனத் தெரிவித்தார்.
இருதரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதிகள், இந்த வழக்கில் மாற்றுத்திறனாளிகள் நலத்துறையின் மத்திய மற்றும் மாநில ஆணையர்கள் எதிர் மனுதாரர்களாக சேர்க்கப்படுகின்றனர். தேசிய கல்விக் கொள்கையின் வரைவு அறிக்கையை மாற்றுத்திறனாளிகள் அறிந்துகொள்ளும் வகையில் வழங்குவது குறித்தும், அவர்களிடம் கருத்துக் கேட்பது குறித்தும் மாற்றுத்திறனாளிகள் நலத் துறையின் மத்திய மற்றும் மாநில ஆணையர்கள் பதில் மனு தாக்கல் செய்ய உத்தரவிட்டு வழக்கு விசாரணையை செப்டம்பர் 19-ஆம் தேதிக்கு ஒத்திவைத்தனர்

Post a Comment

0 Comments