Title of the document

அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் பயிலும் மாணவர்களுக்கு ஆதார் எண் கட்டாயம் என பள்ளிக்கல்வித்துறை அறிவித்துள்ளது.
இதுதொடர்பாக அனைத்து மாவட்ட முதன்மை கல்வி அலுவலர்கள், தலைமை ஆசிரியர்களுக்கு ஒருங்கிணைந்த பள்ளிக்கல்வி இயக்ககம் சுற்றறிக்கை அனுப்பி உள்ளது. அதில் கூறியிருப்பதாவது:-

அனைத்து பள்ளி மாணவர்களுக்கும் ஆதார் எண் பதிவு வழங்கப்பட வேண்டும். சம்பந்தப்பட்ட மாணவர்களின் எண் விவரங்கள் கல்வியியல் மேலாண்மைத் தகவல் மைய விவரங்களுடன் ஒருங்கிணைப்பு செய்திட வேண்டும்.மேற்கண்ட பள்ளி மாணவர்களுக்கான ஆதார் பதிவுப் பணிகளை சிறப்பாக தொய்வின்றி செய்திடும் விதமாகவும் கணினி விவரப் பதிவாளர்கள் பணியில் இருக்கும் ஒவ்வொரு கிராமப்புற வட்டார வள மையத்துக்கு ஒன்று வீதம் ஆதார் பதிவுக் கருவிகள் கொள்முதல் செய்யப்பட்டு ஆதார் பதிவு மேற்கொள்ள தயார் நிலையில் நிறுவப்பட்டுள்ளன.

வட்டார வள மைய கணினி விவரப் பதிவாளர்களும் ஆதார் பதவி செய்யும் கருவியை இயக்கி, சம்பந்தப்பட்ட மாணவர்களிடம், மாணவர்களின் பெற்றோர்களிடம் சம்பந்தப்பட்ட மாணவர்களின் ஆதார் எண் விவரங்களை சேகரித்து, விவரங்களை ஆதார் கருவி மூலம் பதிவு செய்திட வேண்டும். பதிவு செய்யப்பட்ட விவரங்களை குறிப்பிட்ட காலவரைக்குள் ஆதார் இணையதளத்தில் பதிவேற்றம் செய்திட வேண்டும்.

ஆதார் எண் சம்பந்தப்பட்ட விவரங்களில் ஏதேனும் மாற்றம் செய்யப்பட வேண்டினால், மேற்படி மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் அறிவுரைப்படி செய்யப்பட வேண்டும். மேலும், ஆதார் எண் பதிவு செய்த பின்பு சம்பந்தப்பட்ட மாயணவர்களுக்குப் பதிவு செய்யப்பட்டமைக்கான ரசீது அளிக்கப்பட வேண்டும்.மேற்படி ஆதார் பதிவு பள்ளி வேலை நாட்களில் காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மட்டும் செயல்பட வேண்டும்.

மாணவர்களின் ஆதார் எண் பதிவில் மாணவர்களின் பெயர், முகவரி, தொலைபேசி எண் போன்ற விவரங்களில் மாற்றம் செய்யப்பட வேண்டி இருப்பின் மாற்றும் செய்து ரூ.50 கட்டணமாக வசூல் செய்யலாம்.அரசு, அரசு உதவி பெறும் மற்றும் தனியார் பள்ளிகளில் பயிலும் மாணவர்களுக்கு மட்டுமே இச்சேவை வழங்கப்படுகிறது. பிற பொது மக்களுக்கு இம்மையங்களில் சேவை அளிக்கக்கூடாது.

விதிமுறைகள் மற்றும் வழிகாட்டுதல்களுக்கு புறம்பாகவோ அல்லது புகார் பதிவுகள் மற்றும் மாற்றங்கள் செய்யும் பணிகள் ஏதேனும் செய்யப்பட்டது என கண்டறியப்பட்டால் சம்பந்தப்பட்டவர் மீது குற்றவியல் ஒழுங்கு நடவடிக்கை எடுக்கப்படும்.ஆதார் எண் பெறப்படாத மாணவர்களின் விவரங்களை சம்பந்தப்பட்ட பள்ளித் தலைமை ஆசிரியர் மூலம் சரிபார்த்தபடி மாணவர்களை ஆதார் பதிவு மையத்திற்கு அழைத்து வந்து ஆதார் எண் பதிவு செய்திட வேண்டும்.

5 வயது மற்றும் 15 வயது முடிவடைந்த மாணவர்களுக்கு புகைப்படம், கைரேகை மற்றும் கண் கருவிழி பதிவு புதிதாக செய்யப்பட வேண்டும்.ஆதார் பதிவுப் பணிகளை துரிதமாக செய்யும் பொருட்டு மாவட்ட அளவில் ஆதார் பதிவு கண்காணிப்புக் குழு ஏற்படுத்தவும், அந்த குழுவிற்கு தகுந்த அறிவுரைகள் வழங்க வேண்டும்.இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

# இந்த பயனுள்ள தகவலை அனைவருக்கும் பகிருங்கள் - யாரேனும் ஒருவருக்காவது பயன்படும்...

Post a Comment

Previous Post Next Post