ஆசிரியர் தகுதித் தேர்வு கடினமாக இருந்ததாக தேர்வர்கள் கருத்து: முதல் தாளில் அதிகளவிலான மறைமுக வினாக்கள்

Join Our KalviNews Telegram Group - Click Here
9092837307 - Add This Number In Your Whatsapp Groups - 9092837307

ஆசிரியர் தகுதித்தேர்வு முதல் தாளில் அதிகளவிலான மறைமுக வினாக்கள் இடம்பெற்றிருந்ததால் தேர்வு கடினமாக இருந்ததாக தேர்வர்கள் தெரிவித்தனர்.
மத்திய அரசின் கல்வி உரிமை சட்டத்தின்படி, அனைத்து வகை பள்ளிகளிலும் ஆசிரியராக பணியில் சேருவதற்கு ஆசிரியர் தகுதி தேர்வில் (டெட்) தேர்ச்சி பெறுவது அவசியம். தமிழகத்தில் இந்தத் தேர்வை ஆசிரியர் தேர்வு வாரியம் (டி.ஆர்.பி.) நடத்தி வருகிறது. 23.8.2010-க்கு பிறகு பணியில் சேர்ந்த அரசு உதவிபெறும் பள்ளி ஆசிரியர்களும் ஆசிரியர் தகுதித் தேர்வில் தேர்ச்சி பெற்று இருக்க வேண்டும் என்று உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

நிகழாண்டில் ஆசிரியர் தகுதித் தேர்வுக்கு கடந்த மார்ச் 15-ஆம் தேதி முதல் கடந்த ஏப்ரல் 12-ஆம் தேதி வரை இணையதளத்தின் மூலம் மொத்தம் 6 லட்சத்து 4 ஆயிரத்து 156 பேர் விண்ணப்பித்து இருந்தனர். ஒன்றாம் வகுப்பு முதல் 5-ஆம் வகுப்பு வரை ஆசிரியராகப் பணியாற்ற முதல் தாள் தேர்வையும், 8-ஆம் வகுப்பு வரை பணியாற்ற 2-ஆம் தாள் தேர்வையும் எழுத வேண்டும். இந்த நிலையில், தமிழகத்தில் இடைநிலை ஆசிரியர்களுக்கான ஆசிரியர் தகுதித் தேர்வின் முதல் தாள் 471 மையங்களில் சனிக்கிழமை நடைபெற்றது. இந்தத் தேர்வுக்கு ஒரு லட்சத்து 83,415 தேர்வர்கள் விண்ணப்பித்திருந்த நிலையில் ஒரு லட்சத்து 62,330 பேர் தேர்வில் பங்கேற்றனர். காலை 10 மணிக்கு தேர்வு தொடங்கிய நிலையிலும் ஒரு மணி நேரத்துக்கு முன்னதாகவே (9 மணி) தேர்வர்கள் தேர்வறைக்குள் அனுமதிக்கப்பட்டனர்.

தேர்வின்போது முறைகேடுகளில் ஈடுபடும் மாணவர்களைக் கண்டறிய பறக்கும் படையினர் கண்காணிப்புப் பணியில் ஈடுபட்டனர். 150 மதிப்பெண்களுக்கு நடைபெற்ற முதல் தாள் பகல் 1 மணிக்கு நிறைவடைந்தது. இதையடுத்து வினாத்தாள் குறித்து சென்னையைச் சேர்ந்த தேர்வர்கள் பி.கனிமொழி, கே.திருமுருகன் உள்ளிட்டோர் கூறியது:
ஆசிரியர் தகுதித் தேர்வு முதல் தாளில் தமிழ், ஆங்கிலம், அறிவியல் உள்ளிட்ட பிரிவுகளில் வினாக்கள் ஓரளவுக்கு பதிலளிக்கக் கூடிய வகையில் இருந்தன. அதே நேரத்தில் கணிதம், உளவியல் ஆகிய பிரிவுகளில் கடினமான வினாக்கள் இடம்பெற்றிருந்தன. கணிதப் பகுதியில் ஒரு வினாவுக்கு பதிலளிக்க 5 நிமிடங்கள் வரை ஆனது. மேலும் உளவியல் பாடத்தில் இடம்பெற்ற பெரும்பாலான கேள்விகள் மறைமுக வினாக்களாக இருந்தன. ஒட்டுமொத்தமாக பார்க்கும்போது வினாத்தாள் மிகவும் கடினமாகவே இருந்தது என்றனர்.

மேலும் ஆசிரியர் தகுதித் தேர்வின் முதல் தாளே இந்தளவுக்கு கடினமாக இருக்கும்போது ஞாயிற்றுக்கிழமை நடைபெறவுள்ள இரண்டாம் தாள் எப்படி இருக்குமோ என்ற பதற்றம் தேர்வர்களிடையே ஏற்பட்டுள்ளது. இரண்டாம் தாளுக்கான தேர்வு, தமிழகம் முழுவதும் 1,552 மையங்களில் நடைபெறவுள்ளது. இந்தத் தேர்வை 4 லட்சத்து 20 ஆயிரத்து 815 பேர் எழுதவுள்ளனர்

Post a Comment

0 Comments