அரசுப்பள்ளி ஆசிரியருக்கு உழைப்பின் சிகரம் விருது!இன்று ஜூன் 16, 2019 அன்று மதுரையில் மகளிர் நுகர்வோர் விழிப்புணர்வு சங்கம் சார்பில் நடைபெற்ற நுகர்வோர் விழிப்புணர்வு கருத்தரங்கம் மற்றும் பல்வேறு சமூக சேவை புரிந்தோருக்கான உழைப்பின் விருது வழங்கும் விழாவில் மதுரை மாவட்ட கூடுதல் நீதிபதி திருமிகு ஆர். ஶ்ரீதரன் அவர்கள் தலைமையிலும் சென்னை மாநில நுகர்வோர் குறைதீர் ஆணைய உறுப்பினர் திருமிகு எஸ்.எம்.முருகேசன், கவிஞர் கவிச்செல்வா, உயர்நீதிமன்ற வழக்கறிஞர் இராமச்சந்திரன் ஆகியோர் முன்னிலையிலும் பேரிடரில் பேருதவிகளைத் தொடர்ந்து மேற்கொண்டு வரும் M3 என்றழைக்கப்படும் மகிழ்வித்து மகிழ் இயக்கம் தன்னார்வ அமைப்பின் ஒருங்கிணைப்பாளரும் திருவாரூர் மாவட்டம் கோட்டூர் ஒன்றியம் மன்னார்குடி அருகேயுள்ள மேலகண்டமங்கலம் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி பட்டதாரி ஆசிரியருமான முனைவர் மணி கணேசன் என்பாருக்கு உழைப்பின் சிகரம் விருது வழங்கிச் சிறப்பிக்கப்பட்டது.

 நிகழ்ச்சி ஏற்பாடுகளை மதுரை மகளிர் நுகர்வோர் விழிப்புணர்வு சங்க நிறுவனர் முனைவர் பாக்யலெட்சுமி மற்றும் பேராசிரியர் பால்பாண்டி ஆகியோர் செய்திருந்தனர். தந்தையர் தினத்தில் பெற்ற உழைப்பின் மேன்மையை உணர்த்தும் இவ்விருதினை ஓய்வறியாமல் உழைத்துக் கொண்டிருக்கும் தந்தையருக்கு அர்ப்பணிப்பதாக விருதாளர் முனைவர் மணி கணேசன் தெரிவித்தது குறிப்பிடத்தக்கது.