ஆந்திராவில் புதிய ஓய்வூதிய திட்டம் ரத்து !!

CPS BAN

திருமலை: ஆந்திராவில் புதிய ஓய்வூதிய திட்டம் ரத்து செய்யப்படும். அரசு ஊழியர்களுக்கு இடைக்கால நிவாரண நிதி 27 சதவீதம் உயர்த்தப்படும் என்று முதல்வர் ஜெகன்மோகன் ரெட்டி அறிவித்தார். ஆந்திர மாநில முதல்வராக ஜெகன் மோகன் ரெட்டி பதவியேற்ற பிறகு கிருஷ்ணா மாவட்டம் தாடேப்பள்ளியில் உள்ள அவரது இல்லத்தில் இருந்தபடி பல்வேறு துறை அதிகாரிகளுடன் தொடர்ந்து ஆலோசனை மேற்கொண்டு வந்தார். இந்நிலையில், விசாகப்பட்டினம் சாரதா பீடாதிபதி சொரூபானந்த சுவாமி குறித்துக் கொடுத்த சுபமுகூர்த்த நேரப்படி நேற்று ஆந்திர மாநில முதல்வர் ஜெகன்மோகன் ரெட்டி முதல் முறையாக தலைமை செயலகத்திற்கு காலை 8.39 மணிக்கு வந்தார்.

பின்னர், முதல்வர் அறையில் அமர்ந்து மூன்று முக்கிய கோப்புகளில் கையெழுத்திட்டார். இதில், முதல் கோப்பில் முதல்வர் பதவி ஏற்றப்பின் அதிகாரிகள் ஆலோசனைக் கூட்டத்தின்போது தெரிவித்தபடி ஆரம்ப சுகாதார நிலையங்களில் பணிபுரியக் கூடிய ஆஷா பணியாளர்களுக்கு ரூ.3 ஆயிரத்தில் இருந்து ரூ.10 ஆயிரமாக சம்பளம் உயர்த்தி முதல் கையெழுத்திட்டார். இரண்டாவதாக அனந்தப்பூரில் இருந்து அமராவதி வரை எக்ஸ்பிரஸ் தேசிய நெடுஞ்சாலை பணிகளுக்காக அமைச்சரவை ஒப்புதலுக்கு கையெழுத்திட்டார். மூன்றாவதாக பத்திரிகையாளர்களுக்கான ரூ.10 லட்சம் காப்பீட்டு திட்டத்தை நீட்டிப்பு செய்து கையெழுத்திட்டார். இதையடுத்து, தலைமைச் செயலக பணியாளர்கள் முதல்வர் ஜெகன்மோகன் ரெட்டிக்கு வாழ்த்துக்களை தெரிவித்தனர்.

தொடர்ந்து முதல்வர் அலுவலகத்தில் சிறப்பு பூஜைகள் செய்யப்பட்டு வேத பண்டிதர்கள் வேத ஆசிர்வாதம் செய்து வைத்தனர். இதைத்தொடர்ந்து தலைமைச் செயலக பணியாளர்களுடன் ஜெகன்மோகன் ரெட்டி பேசியதாவது: அரசு பணியாளர்களுக்கு தேர்தலின்போது கொடுத்த வாக்குறுதியின்படி இடைக்கால நிவாரண நிதி 27 சதவீதம் உயர்த்தி வழங்கப்படும். பங்களிப்பு (புதிய) ஓய்வூதியத் திட்டம் (சிபிஎஸ்) ரத்து செய்யப்படும். ஒப்பந்த ஊழியர்களுக்கு சம்பள உயர்வு செய்வதோடு அவரவர் தகுதி மற்றும் பணி செய்த சர்வீஸ் காலத்தைப் பொறுத்து அரசு பணியாளர்களாக ஏற்கப்படுவார்கள். இதற்கான அறிவிப்பை முதல் அமைச்சரவைக் கூட்டத்தில் முடிவு எடுக்கப்படும். தேர்தல் வாக்குறுதிகள் அனைத்தையும் நிறைவேற்றும் விதமாக அந்தந்த துறை அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக் கொண்டுள்ளேன். தேர்தல் வாக்குறுதிகள் அனைத்தையும் நிறைவேற்றி அடுத்த தேர்தலின்போது அரசு செய்த திட்டங்களை கூறி வாக்குகளை பெற வேண்டும். அரசு நிர்வாகம் என்பது முதல்வர் மட்டுமல்ல அரசு ஊழியர்கள் அனைவரும் சேர்ந்ததுதான். எனவே, அரசு ஊழியர்கள் அனைவரும் முழு ஒத்துழைப்புடனும், துணையோடும் இருந்து இந்த அரசை சிறந்த முறையில் கொண்டு செல்ல கைகோர்க்க வேண்டும். இவ்வாறு அவர் பேசினார்.