'பயோமெட்ரிக்' வருகை பதிவு சிக்னல் இல்லாததால் சிக்கல் ஆசிரியர்கள் அவதிஇணைய வசதி முறையாக கிடைக்காததால், பள்ளிகளில் பயோமெட்ரிக் வருகை பதிய, மணிக்கணக்கில் காத்திருக்க வேண்டியுள்ளதாக ஆசிரியர்கள் புலம்புகின்றனர்.தமிழகம் முழுவதும் உள்ள உயர்நிலை, மேல்நிலைப்பள்ளிகளில் பயோமெட்ரிக் வருகை பதிவேடு முறை ஜூன் 3 முதல் அமல்படுத்தப்பட்டுள்ளது. ஆசிரியர் மற்றும் ஆசிரியர் அல்லாத பணியாளர்கள் இம்முறையில் வருகையை பதிவு செய்து வருகின்றனர். இதன்மூலம் ஆசிரியர்கள் பள்ளிக்கு தாமதமாக வருவது குறைந்து உள்ளது.இருப்பினும் முறையான இணைய வசதி கிடைக்காததால், பெரும்பாலான பள்ளிகளில் ஆசிரியர்கள் வருகை பதிவு செய்ய முடியாமல் திணறி வருகின்றனர். காலை, மாலை சேர்த்து ஒரு நாளில் இரண்டு மணி நேரம் இதற்கே செலவாவதால், மாணவருக்கு வகுப்பு எடுக்க தாமதமாவதாக ஆசிரியர்கள் புலம்புகின்றனர்.தமிழ்நாடு ஆசிரியர் முன்னேற்ற கழக மாவட்ட தலைவர் சுந்தரமூர்த்தி கூறியதாவது:'பயோமெட்ரிக்' கருவியில் ஆசிரியர் விரல் ரேகையை பதிவு செய்ததும், கம்ப்யூட்டரில் போட்டோவுடன் திரை தோன்றும்.


அதில் ஆதார் எண்ணை குறிப்பிட்டால் ஆசிரியரின் வருகை பதிவாகிவிடும். ஆனால், இணைய வசதி முறையாக கிடைப்பதில்லை.காலை, 9:35 மணிக்குள் பதிய வேண்டிய வருகை, 10:00 மணிக்கு மேலாகியும் முடிவதில்லை. இதனால், காலை வகுப்பு மாணவருக்கு தாமதமாகவே துவங்குகிறது. குறிப்பாக, 50க்கும் மேற்பட்ட ஆசிரியர்கள் உள்ள பள்ளிகளில் காலை, மாலை நேரங்களில், 'க்யூ'வில் மணிக்கணக்காக காத்திருக்க வேண்டிஉள்ளது. மாலை, 4:30 மணிக்கு சரியாக பதிவு செய்ய முடிவதில்லை; மாலை, 6:00 மணியாகியும் பதிவு செய்ய முடியாமல் ஆசிரியர்கள் சிரமப்படுகின்றனர்.பெரும்பாலான ஆசிரியர்கள் கடும் மனஉளைச்சலுக்கு ஆளாகியுள்ளனர். நல்லதொரு திட்டத்தை கொண்டு வந்த அரசு அதனை முறையாக நடைமுறைப்படுத்த வேண்டும். இவ்வாறு, அவர் கூறினார்.