10ம் வகுப்பு செய்முறைத் தேர்வுக்கு 6ம் தேதி முதல் பதிவு செய்ய வேண்டும்

வரும் மார்ச் 2020ல் நடக்க உள்ள பத்தாம் வகுப்பு தேர்வுக்கு விண்ணப்பிக்க உள்ள நேரடித்  தனித் தேர்வர்கள், ஏற்கெனவே பழைய பாடத்திட்டத்தில் தேர்வு எழுதி அறிவியல் பாடத்தில் தோல்வி அடைந்தவர்களுக்கும் அறிவியல் பாட செய்முறை பயிற்சி வகுப்பில் சேர தங்கள் பெயர்களை பதிவு செய்து கொள்ள வேண்டும் என்று தேர்வுத்துறை அறிவித்துள்ளது.

இதன்படி அனைத்து தனித் தேர்வர்களும் 6ம் தேதி முதல் 29ம் தேதிக்குள் அந்தந்த மாவட்ட கல்வி அலுவலர் அலுவலகங்களில் தங்கள் பெயர்களை பதிவு செய்து கொள்ள வேண்டும். மாவட்ட கல்வி அலுவலர்களால் ஒதுக்கீடு செய்யப்பட்ட பள்ளிகளுக்கு சென்று செய்முறைப் பயிற்சி வகுப்புகளில் கலந்து கொள்ள வேண்டும். பயிற்சி வகுப்புகளுக்கு 80 சதவீதம் வருகை தந்த தனித் தேர்வர்கள் மட்டுமே 2020 மார்ச் தேர்வுக்கு விண்ணப்பிக்க முடியும்.

செய்முறைப் பயிற்சி பெற்ற மாணவர்கள் அந்தந்த மாவட்ட கல்வி அலுவலரை தொடர்பு கொண்டு செய்முறைத் தேர்வு நடத்தப்படும் நாட்கள், மையங்கள் விவரம் தெரிந்து கொள்ள வேண்டும். செய்முறைப் பயிற்சி வகுப்புகளில் கலந்து கொள்ளாத மாணவர்களின் விண்ணப்பம்  நிராகரிக்கப்படும். இதற்கான விண்ணப்பங்கள் www.dge.tn.gov.in  என்ற இணைய தளத்தில் 6ம் தேதி முதல் 29ம் தேதி வரை பதிவிறக்கம் செய்து பூர்த்தி செய்து இரண்டு நகல்கள் எடுத்து மாவட்ட கல்வி அலுவலர்களிடம் 29ம் தேதிக்குள் நேரில் சமர்ப்பிக்க வேண்டும்.