கல்வி இணை செயல்பாடுகளுக்கு முக்கியத்துவம்: ஆசிரியர்களுக்கு இணை இயக்குநர் அறிவுறுத்தல்

Join Our KalviNews Telegram Group - Click Here
9080019831 - Add This Number In Your Whatsapp Groups - 9080019831

மாணவர்களின் ஒழுக்க நெறி மற்றும் சமுதாய பொறுப்பு மேம்படுவதற்கு கல்வி இணை செயல்பாடுகளுக்கு முக்கியத்துவம் அளிக்க வேண்டும் என நாட்டு நலப் பணித் திட்ட இணை இயக்குநர் வாசு அறிவுறுத்தினார்.

திண்டுக்கல், பழனி, வேடசந்தூர் மற்றும் வத்தலகுண்டு கல்வி மாவட்டங்களைச் சேர்ந்த சாரணசாரணியர் இயக்கம், நாட்டு நலப்பணித் திட்ட இயக்கம், இளைஞர் செஞ்சிலுவை சங்கம், தேசிய பசுமைப் படை, சாலை பாதுகாப்பு அமைப்புகளின் பொறுப்பு ஆசிரியர்களுக்கான ஆலோசனைக் கூட்டம் புதன்கிழமை நடைபெற்றது.திண்டுக்கல் ரவுண்ட் ரோடு பகுதியிலுள்ள தனியார் பள்ளியில் நடைபெற்ற இக்கூட்டத்திற்கு மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் கு.சொ.சாந்தகுமார் தலைமை வகித்தார்.

இதில் சிறப்பு அழைப்பாளராக நாட்டு நலப் பணித்திட்ட இணை இயக்குநர் வாசு கலந்து கொண்டு கூறியது:வன்முறை, பாலியல் வன்முறை குறித்து மாணவர்கள் மத்தியில் விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில், ஒவ்வொரு பள்ளியிலும் தலா ஒரு ஆண் மற்றும் பெண் ஆசிரியர்கள் நியமிக்கப்பட வேண்டும். சாலை பாதுகாப்பு செயல்பாடுகள் மூலம்,அனைத்து மாணவர்களுக்கும் விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும். அனைத்து மாவட்டங்களிலும் சாலை பாதுகாப்பு குறித்து 40 வார நிகழ்ச்சிக்கான கையேடு ஜூன் மாதத்தில் வழங்கப்படும்.

அதனை தீவிரமாக செயல்படுத்தும் பணியில் ஆசிரியர்கள் ஈடுபட வேண்டும். அதனை மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் தீவிரமாக கண்காணிக்க வேண்டும். சமுதாய முன்னேற்றத்தில் மாணவர்களின் பங்களிப்பு, ஒழுக்க நெறிமுறைகள் குறித்து புரிந்துணர்வை ஏற்படுத்த வேண்டும். பேரிடர் காலங்களில் மீட்புப் பணியில் மாணவர்கள் தங்களை முழுமையாக ஈடுபடுத்திக் கொள்ளும் வகையில் தயார்படுத்த வேண்டும்.பள்ளியிலுள்ள தமிழ், ஆங்கிலம், கணிதம், அறிவியல்உள்ளிட்ட மன்றங்கள், பெயரளவுக்கு இல்லாமல் சிறப்பாக செயல்படுவதற்கு தலைமையாசிரியர்கள் மற்றும் ஆசிரியர்கள் தீவிர கவனம் செலுத்த வேண்டும்.

குறிப்பாக மன்றங்களின் செயல்பாடு பொதுமக்கள் மத்தியில் விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் அமைய வேண்டும் என்றார்.கூட்டத்தில் மாவட்ட கல்வி அலுவலர் கருப்புசாமி(பழனி), சுப்பிரமணியன் (திண்டுக்கல்), பிச்சை முத்து(வேடசந்தூர்) உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

Post a comment

0 Comments