இலவச லேப்டாப்கள் பயன்பாடு குறித்து கணக்கெடுப்பு நடத்தி விவரம் சேகரிப்பு: மத்திய அரசு உத்தரவால் பள்ளிக்கல்வித்துறை தீவிரம்

கடந்த 8 ஆண்டுகளில் பள்ளி மாணவர்களுக்கு வழங்கப்பட்ட இலவச லேப்டாப் பயன்பாடு தொடர்பான விவரங்களை திரட்டும் பணியில் பள்ளிக்கல்வித்துறை அதிகாரிகள் இறங்கியுள்ளனர். தமிழகத்தில் பள்ளி மாணவர்களுக்கு பல்வேறு திட்டங்கள் நடைமுறைப்படுத்தப்பட்டு வருகிறது.

கடந்த 2011 முதல் மேல்நிலைக்கல்வி  படிக்கும் மாணவர்கள், பாலிடெக்னிக் மாணவர்களுக்கு இலவச லேப்டாப்கள் வழங்கப்படுகிறது.

இதன் மூலம் அவர்களின் தனித்திறன்களை மேம்படுத்தவும், பாடம் தொடர்பான அதிகப்படியான தகவல்களை அறிந்து கொள்ளவும் முடியும் என்பதற்காக அரசு இத்திட்டத்தை நடைமுறைப்படுத்தியது.

 இவ்வாறு பெறப்படும் லேப்டாப்களை மாணவர்கள் வெளியில் விற்பனை செய்யக்கூடாது என்றும், வேறு யாருக்கும் வழங்கக்கூடாது என்றும் அறிவுறுத்தல்கள் வழங்கப்பட்டன.

 ஆனால், இலவச லேப்டாப்களை பெறும் மாணவர்களில் நூற்றில் 10 சதவீதம் பேரே அரசு வழங்கிய இலவச லேப்டாப்பை இன்னமும் பயன்படுத்தி வருவதாகவும், மற்றவர்களின் அவற்றை விற்பனை செய்திருக்கலாம் என்றும், பழுதடைந்து பயன்பாட்டில் இருந்து விலக்கப்பட்டிருக்கலாம் என்றும் தெரியவந்தது.

இந்நிலையில், தமிழகத்தில் இதுவரை வழங்கப்பட்ட இலவச லேப்டாப்களால் ஏற்பட்ட பயன்பாடு தொடர்பான விவரங்களை தருமாறு மத்திய அரசு தமிழக அரசிடம் கேட்டுள்ளது.

அதன் பேரில், தமிழகம் முழுவதும் கடந்த 8 ஆண்டுகளாக மேல்நிலைக்கல்வி மற்றும் பாலிடெக்னிக் மாணவர்களுக்கு வழங்கப்பட்ட இலவச லேப்டாப்களை இன்னமும் பயன்படுத்தி வருகிறார்களா? என்ற விவரத்துடன், மாணவர் பெயர், அவர்கள் படித்த பள்ளி, எமிஸ் எண், அவர்களுக்கு வழங்கப்பட்ட லேப்டாப் வகை, அதில் பதிவேற்றப்பட்டுள்ள சாப்ட்வேர் விவரம், லேப்டாப் பெற்ற மாணவர்கள் தற்போது செய்யும் வேலை அல்லது படிக்கும் உயர்கல்வி உட்பட பல்வேறு விவரங்களை திரட்டும் பணியில் பள்ளிக்கல்வித்துறை அதிகாரிகள் இறங்கியுள்ளனர்

. வேலூர் மாவட்டத்தில் அரசு மற்றும் அரசு நிதியுதவி பள்ளிகளில் இருந்து ஒவ்வொரு ஆண்டும் லேப்டாப் பெற்ற மாணவர்களின் விவரம் உட்பட அரசு கேட்டுள்ள அனைத்து விவரங்களையும் மாணவர்களின் வீடுகள்தோறும் சென்று கேட்டு பெறும் பணியில் அதிகாரிகள் ஈடுபட்டுள்ளனர்