எல்கேஜி, யுகேஜி வகுப்புகளுக்கு நியமிக்கப்பட்ட ஆசிரியர்கள் உடனடியாக பணியில் சேர வேண்டும் என்று தொடக்கக் கல்வித்துறை உத்தரவு  

Join Our KalviNews Telegram Group - Click Here
Add This Number In Your Whatsapp Groups - 8608844408

தமிழகத்தில் தனியார் பள்ளிகளுக்கு இணையான கல்வியை ஆரம்பக் கல்வியில் வழங்கும் வகையிலும், குழந்தைகளை அரசுப் பள்ளிகளுக்கு வரவழைக்கும் நோக்கிலும் பள்ளிக் கல்வித்துறை பல்வேறு நடவடிக்கை எடுத்து வருகிறது. அதன்படி, அரசு தொடக்கப்பள்ளிகளில் எல்கேஜி, யுகேஜி வகுப்புகளில் குழந்தைகள் சேர்க்கப்பட வேண்டும் என்று பள்ளிக் கல்வித்துறை உத்தரவிட்டது. தனியார் பள்ளிகளில் மாணவர் சேர்க்கை கடந்த ஏப்ரல், மார்ச் மாதங்களில் நடந்து முடிந்துவிட்டன. அதேநேரத்தில், அரசுப் பள்ளிகளிலும் மாணவர் சேர்க்கை நடத்தியிருந்தால், அதில் அதிக அளவில் மாணவர்கள் சேர வாய்ப்பு அமைந்திருக்கும். ஆனால் கால தாமதமாக அரசுப் பள்ளிகளில் சேர்க்கை நடத்த பள்ளிக் கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது.

மேலும், அந்த வகுப்புகளில் இடைநிலை ஆசிரியர்களை நியமித்துள்ளதற்கும் ஆசிரியர்கள் எதிர்ப்பு தெரிவித்து வழக்கு தொடர்ந்தனர். இதனால் எல்கேஜி, யுகேஜி வகுப்புகளுக்கு வரவேற்பு தற்போது குறைந்துள்ளது. 

இந்நிலையில், நீதிமன்றம் வழங்கிய தீர்ப்பின் பேரில் எல்கேஜி, யுகேஜி வகுப்புகளுக்கு நியமிக்கப்பட்ட ஆசிரியர்கள் உடனடியாக பணியில் சேர வேண்டும் என்று தொடக்கக் கல்வித்துறை வலியுறுத்தியுள்ளது. 

இதுகுறித்து தொடக்க கல்வி இயக்குநர், அனைத்து மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர்களுக்கு அனுப்பியுள்ள சுற்றறிக்கை:

தமிழகத்தில் உள்ள ஊராட்சி ஒன்றியங்கள், நகராட்சி மற்றும் அரசு நடுநிலைப் பள்ளிகள் வளாகங்களில் இயங்கி வரும் 2381 அங்கன்வாடி மையங்களில் எல்கேஜி மற்றும் யுகேஜி வகுப்புகள் தொடங்க அரசு ஆணையிட்டது. அந்தந்த ஒன்றியங்களில் செயல்படும் தொடக்கப் பள்ளிகளில் உபரியாக உள்ள இடைநிலை ஆசிரியர்களை இந்த எல்கேஜி, யுகேஜி வகுப்புகளில் பாடம் நடத்த தலா ஒரு ஆசிரியர் வீதம் நியமிக்க மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர்களுக்கு உத்தரவிடப்பட்டது. இந்த உத்தரவை எதிர்த்து சில ஆசிரியர்கள் மற்றும் ஆசிரியர் சங்கங்கள் சென்னை உயர் நீதிமன்றம், உயர் நீதி மன்ற மதுரைக் கிளை ஆகியவற்றில் வழக்கு தொடர்ந்தன. ஆனால், நீதிமன்றம் இந்த வழக்குகளை தள்ளுபடி செய்தது. அதைத் தொடர்ந்து கடந்த 22ம் தேதி இதன் மீது தீர்ப்பும் வழங்கியது. அதில், புதியதாக தொடங்கப்பட்டுள்ள வகுப்புகளில் இடைநிலை ஆசிரியர்கள் நியமிக்கப்பட்டால், அவர்களுக்கு, மாண்டிசோரி கல்வி முறை, கிண்டர் கார்டன் கல்வி முறை ஆகியவற்றில் 6 மாதத்துக்கு பயிற்சி கொடுக்க வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. எனவே, எல்கேஜி மற்றும் யுகேஜி வகுப்புகளில் மாணவர் சேர்க்கை உடனடியாக செய்ய வேண்டும். மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர்கள் மூலம் ஏற்கனவே நியமிக்கப்பட்ட ஆசிரியர்கள் பள்ளி திறக்கும் நாளில் பணியில் சேர்வதற்கான நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு சுற்றறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Post a Comment

0 Comments