ஏப்ரல் மாத சம்பளம் காலதாமதம் பகுதிநேர ஆசிரியர்கள் அதிருப்தி!

ஏப்ரல் மாத சம்பளம் காலதாமதம்
பகுதிநேர ஆசிரியர்கள் அதிருப்தி
கல்வித்துறை அதிகாரிகள் விரைந்து நடவடிக்கை எடுக்க பகுதிநேர ஆசிரியர்கள் வலியுறுத்தல்.

இதுகுறித்து தமிழ்நாடு அனைத்து பகுதிநேர  ஆசிரியர்கள் கூட்டமைப்பு மாநில ஒருங்கிணைப்பாளர் செந்தில்குமார் இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில் குறிப்பிட்டுள்ளதாவது:-

மறைந்த முதல்வர் ஜெயலலிதாவால் கடந்த 8 வருடங்களுக்கு முன்பு அரசுப் பள்ளிகளில்  உடற்கல்வி, ஓவியம், கணினி, இசை, தையல், தோட்டக்கலை, கட்டிடக்கலை, வாழ்வியல்திறன்கல்வி உள்ளிட்ட 8 பாடங்களை பகுதிநேரமாக நடத்திட 16549 ஆசிரியர்கள் ரூ.5ஆயிரம் தொகுப்பூதியத்தில் நியமிக்கப்பட்டனர்.
 6 ஆண்டுக்கு முன்பு ரூ.2ஆயிரம் ஊதியம் உயர்த்தியால் தொகுப்பூதியம் ரூ.7ஆயிரமானது.
 இப்போதைய முதல்வர் எடப்பாடி பழனிசாமி ஆட்சியில் சென்ற ஆண்டு ரூ.7நூறு ஊதியம் உயர்த்தியதால் தொகுப்பூதியம் ரூ.7ஆயிரத்து 7 நூறாக தரப்படுகிறது.
சரிவர சம்பள உயர்வை வழங்கி இருந்தால் ரூ.10ஆயிரம் சம்பளமாக கிடைத்திருக்கும். கடந்த 8 ஆண்டுகளில் ரூ.2 ஆயிரத்து 7 நூறு ஊதிய உயர்வு என்பது மிகவும் குறைவானது.
இது ஒருபுறமிருக்கு 8 ஆண்டுகளாகியும் 1ந்தேதி சம்பளம் வழங்க முடியாமல் வருவது சரியான நடைமுறையல்ல.
அதுவும் இந்த ஏப்ரல் மாதம் சம்பளம் SSA மாநில மையத்தில் இருந்து அனைத்து மாவட்ட மையங்களுக்கும் இதுவரை சம்பளம் வழங்க நிதி அனுப்பவில்லை என்பது அனைவரையும் கவலை அடைய செய்கிறது. எனவே கல்வித்துறை அதிகாரிகள் உடனடியாக இதனை சரிசெய்ய நடவடிக்கை மேற்கொள்ளவேண்டும்.

பள்ளிகளை பொறுத்தவரை கோடைகால விடுமுறை விடப்பட்டுவிட்டது. நிரந்தரப் பணியில் உள்ள ஆசிரியர்களுக்கு சம்பளம் பிரச்சனை எதுவும் கிடையாது. ஆனால் இதில் பகுதிநேர ஆசிரியர்களுக்கு மே மாதம் சம்பளம் கொடுக்காமல் கடந்த 7 ஆண்டுகளாக இதுவரை ஒவ்வொருவரும் ரூ.45ஆயிரத்து 7நூறு இழந்துள்ளார்கள். எந்த அரசாணையும் இல்லாமல் இதுபோல தொடர்ந்து 7 ஆண்டுகள் கண்டுகொள்ளாமல் இருப்பது கல்வித்துறை அதிகாரிகளின் தவறான கொள்கை.
 நமக்கு அருகில் உள்ள ஆந்திரா மாநிலத்தில் மட்டும் எப்படி இதே பகுதிநேர ஆசிரியர்களுக்கு ரூ.14ஆயிரத்து 203 மாதம் சம்பளமாக தரமுடிகிறது. சம்பளத்துடன் 6 மாதம் மகப்பேறு விடுப்பும் தருகிறார்கள். இதை ஏன் இங்குள்ள அரசும் அதிகாரிளும் செய்ய மறுக்கிறார்கள் என அனைத்து பகுதிநேர ஆசிரியர்களுமே கேட்டு வருகிறார்கள்.
ஜாக்டோஜியோ போராட்ட காலங்களில் பள்ளிகளை இயக்க பகுதிநேர ஆசிரியர்களை பயன்படுத்திவரும் அரசும் அதிகாரிகளும் பகுதிநேர ஆசிரியர்களின் எந்தவொரு கோரிக்கையும் காதுகொடுத்து கேட்காதது ஏன் என அனைவரும் கேட்கும் நிலையை உருவாக்கி விட்டார்கள்.
பள்ளிகளில் ஏனைய ஆசிரியர்களுடன் பகுதிநேர ஆசிரியர்களின் சம்பளத்தை வழங்கினால் மட்டுமே சம்பளம் எல்லா மாதமும் 1ந்தேதியில் கிடைக்கும். VEC, SMC  எப்படி வேண்டும் என்றாலும் நடைமுறைகள் இருக்கட்டும், இறுதியில் சம்பளம் ECS முறையில் பள்ளி ஆசிரியர்களின் சம்பளப்பட்டியலுடன் வழங்குங்கள். முட்டுக்கட்டைகளை தவிறுங்கள்.
பணிநிரந்தரம் மற்றும் ஊதியம் உயர்வு கோரிக்கைகளை கல்வித்துறை அதிகாரிகள் அரசுக்கு உரிய முறையில் பரிந்துரை செய்து இருந்தால் பின்னடைவு ஏற்பட்டு இருக்காது.
போனஸ் தரவில்லை, P.F. மற்றும்  ESI கிடையாது. விடுமுறை சலுகைகள் இல்லாமையால் சம்பளம் பிடித்தம், சம்பளம் காலதாமதம், மே மாதம் சம்பளம் தராதது, ஆண்டு ஊதிய உயர்வு தராதது, 7வது சம்பள கமிஷன் 30% ஊதிய உயர்வை தராதது, மகப்பேறு விடுப்பு தராதது இதுபோன்ற நடவடிக்கைகளால் பகுதிநேர ஆசிரியர்கள் மிகவும் மனிதநேயமின்றி வாழ்வாதாரத்தை இழந்து வருகின்றனர். இதனை தடுப்பதற்கு பணிநிரந்தரமே ஒரே வழி. சமவேலை சமஊதியம் என்ற நீதிமன்ற உத்தரவை கல்வித்துறை தற்காலிக, ஒப்பந்த வேலையில் உள்ள பகுதிநேர ஆசிரியர்களுக்கும் அமுல்படுத்த கோரிக்கை. எனவே பணிநிரந்தரம் செய்வதற்குரிய துறை ரீதியான நடவடிக்கைகளை கல்வித்துறை அதிகாரிகள் எடுத்திட தமிழ்நாடு அனைத்து பகுதிநேர ஆசிரியர்கள் கூட்டமைப்பு கேட்டுக்கொள்கிறது.

இவண்
சி.செந்தில்குமார்
மாநில ஒருங்கிணைப்பாளர்
தமிழ்நாடு அனைத்து பகுதிநேர ஆசிரியர்கள் கூட்டமைப்பு
செல் : 9487257203