உள்ளாட்சி தேர்தல் பணிகளுக்காக அரசாணை வெளியீடு.. அரசிதழில் வெளியிட்டது தமிழக அரசு


உள்ளாட்சி தேர்தலுக்கான வாக்காளர் பட்டியலை தயாரிப்பதற்கான அரசாணையை தமிழக அரசு அரசிதழில் வெளியிட்டுள்ளது.

வாக்குச்சாவடிகள் அமைத்தல், வாக்காளர் பட்டியலை இறுதி செய்வதற்கான பணிகளை தொடங்குவது உள்ளிட்டவை குறித்த வழிமுறைகளை பற்றிய தகவல்கள் அந்த அரசாணையில் உள்ளது.
2011-ம் ஆண்டுக்கு பிறகு தமிழ்நாட்டில் உள்ளாட்சி தேர்தல் நடத்தப்படவில்லை. அப்போது நடத்தப்பட்ட உள்ளாட்சித் தேர்தலில் தேர்ந்தெடுக்கப்பட்டவர்களின் பதவிக்காலம் 2016 அக்டோபர் 24ஆம் தேதி முடிந்தது.
2016-ம் ஆண்டு தேர்தல் அறிவிக்கப்பட்ட போதிலும், வார்டு வரையறை பிரச்சனையால் கடந்த 3 ஆண்டுகளாக தேர்தல் நடத்தப்படவில்லை. கடந்த மூன்று ஆண்டுகளாக தனி அதிகாரிகள் நியமிக்கப்பட்டு, உள்ளாட்சி அமைப்புகள் இயங்கி வருகின்றன.உள்ளாட்சித் தேர்தலுக்கான தொகுதி சீரமைப்புப் பணிகளைத் தொடர்ந்து, வாக்காளர் பட்டியல் சரிசெய்யும் பணியை மாநில தேர்தல் ஆணையம் மேற்கொண்டிருந்தது.
சமீபத்தில் உச்சநீதிமன்றத்தில் இதுதொடர்பான வழக்கில் பதிலளித்த மாநிலத் தேர்தல் ஆணையம், தமிழக உள்ளாட்சித் தேர்தலை நடத்த வாக்களார் பட்டியல் சரிசெய்யும் பணி நடப்பதாகக் கூறி 3 மாத அவகாசம் தருமாறு கோரியது.
இந்நிலையில் தற்போது வெளியிட்டுள்ள அரசாணையை தமிழக அரசு, மாநில தேர்தல் ஆணையத்திடமும் சமர்பித்துள்ளது. இதில், மாவட்டம், ஊராட்சி ஒன்றியம், கிராம ஊராட்சி, மாவட்ட ஊராட்சி வாரியாக வாக்காளர் பட்டியல் தயாரிக்க அரசு வலியுறுத்தியுள்ளது.
இதேபோல வாக்குச்சாவடிகள் அமைக்கும்போது வாக்குச்சாவடி எண், வாக்குச்சாவடி பெயர், வாக்குச்சாவடி வகை ஆகியவற்றை உள்ளடக்கியிருப்பதை கருத்தில் கொள்ளுமாறும் தெரிவித்துள்ளது.