Title of the document

தமிழகத்தில் 10 மற்றும் 12ம் வகுப்பு மாணவர்களுக்கு வழங்கும் மாற்றுச்சான்றிதழில் சாதிப்பெயரைக் குறிப்பிட வேண்டாம் என தமிழக பள்ளிக்கல்வித்துறை அறிவுறுத்தியுள்ளது. இது தொடர்பாக அனைத்து பள்ளி தலைமை ஆசிரியர்களுக்கும் கல்வித்துறை சுற்றறிக்கை அனுப்பியுள்ளது. நடப்பாண்டில் 10 மற்றும் 12ம் வகுப்புகளுக்கான பொதுத்தேர்வுகள் நடத்தப்பட்டு தேர்வு முடிவுகளும் வெளியிடப்பட்டன. பிளஸ் 2 தேர்வு முடிவுகள் கடந்த மாதம் 19ம் தேதி வெளியிடப்பட்டது. தமிழகம் மற்றும் புதுச்சேரியை சேர்ந்த 7082 பள்ளிகளை சேர்ந்த 8 லட்சத்து 88 ஆயிரம் பிளஸ் 2 மாணவர்கள் பொதுத்தேர்வை எழுதினர். இந்த தேர்வில் தமிழகத்தில் 91.3% மாணவ, மாணவிகள் தேர்ச்சி பெற்றனர். அதேபோல, தமிழகம் மற்றும் புதுவையில் கடந்த மார்ச் மாதம் 14ம் தேதி தொடங்கி 29ம் தேதி வரை 10ம் வகுப்பு பொதுத்தேர்வு நடைபெற்றது.

அதில் மொத்தம் 9 லட்சத்து 97 ஆயிரத்து 794 பேர்  இந்த தேர்வை எழுதி இருந்தனர். இதற்கான முடிவுகள் ஏப்ரல் 29ம் தேதி வெளியானது. இதில் மொத்தம் 95.2% பேர் தேர்ச்சியடைந்துள்ளனர். இந்நிலையில் கடந்த ஏப்.26ம் தேதி வரை மாணவர்கள் பள்ளிகளில் மதிப்பெண் சான்றிதழை பெற்றுக் கொள்ளலாம் என அறிவிக்கப்பட்டிருந்தது. அதன் பேரில் தமிழகத்தில் உள்ள அனைத்து பள்ளிகளிலும் மதிப்பெண் சான்றிதழ் வழங்கப்பட்டு வந்த நிலையில், தற்போது பள்ளிகளில் மாணவர்களுக்கு வழங்கப்படும் மாற்று சான்றிதழில் சாதி பெயரை குறிப்பிட வேண்டாம் என கூறப்பட்டுள்ளது. பொதுவாக தங்களது படிப்பினை முடித்த பிறகு மாணவர்களுக்கு பள்ளிகளில் மாற்றுச் சான்றிதழ் வழங்கப்படுவது வழக்கம். அதில் மாணவர்களது சாதி குறிப்பிடப்பட்டிருக்கும்.

இது தொடர்பாக பள்ளிக்கல்வித்துறை வெளியிட்டுள்ள சுற்றறிக்கையில், தனியாக சாதிச்சான்றிதழ் வழங்குவதால், மாற்றுச்சான்றிதழில் மாணவரின் சாதியைக் குறிப்பிட வேண்டிய அவசியம் இல்லை என்றும், மாணவரின் மாற்றுச்சான்றிதழில் வருவாய்த்துறையால் வழங்கப்பட்ட சாதி சான்றிதழை’ பார்க்கவும் என்று மட்டுமே குறிப்பிட வேண்டும் என்றும் பள்ளிக்கல்வித்துறை தெரிவித்துள்ளது. சாதி தொடர்பான கேள்வியை  நிரப்ப வேண்டாம் என பெற்றோர் தெரிவித்தால் அந்த இடத்தை காலியாக விட்டு மாற்றுச்சான்றிதழை கொடுக்க வேண்டும் என்று பள்ளிக்கல்வித்துறை அதில் குறிப்பிட்டுள்ளது.

# இந்த பயனுள்ள தகவலை அனைவருக்கும் பகிருங்கள் - யாரேனும் ஒருவருக்காவது பயன்படும்...

Post a Comment

Previous Post Next Post