Title of the document

விழுப்புரம் மாவட்டத்தில் 10, 12ம் வகுப்பு பொதுத்தேர்வுகளில் தேர்ச்சி சதவீதம் அதிகரித்தபோதும் தமிழகத்தில் கடைசி இடத்தில் பின்தங்கிவருவது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

 அரசுபள்ளிகளின் தேர்ச்சி சதவீதம் குறைவே இதற்கு காரணம் என்று கூறப்படுகிறது. இதனால் வரும் கல்வியாண்டில் முதல் 10 மாவட்டங்களுக்குள் கொண்டுவர பல்வேறு நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகின்றன.

அதன்படி தற்போதைய தேர்வில் தேர்ச்சி சதவீதம் குறைந்த அரசுபள்ளி ஆசிரியர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என சிஇஓ முனுசாமி தெரிவித்துள்ளார்.

தமிழகத்தில் ஒவ்வொரு ஆண்டும் வௌியாகும் 10, 12ம் வகுப்பு தேர்வு முடிவுகளில் கடைசி இடத்திற்கு போட்டிபோடும் மாவட்டமாக விழுப்புரம் உள்ளது. அதிக கிராமப்புறங்களைக் கொண்டுள்ள இம்மாவட்டத்தில் அரசுபள்ளிகளும், மாணவ, மாணவிகளின் எண்ணிக்கையும் அதிகம்தான்.

 கல்வியில் பின்தங்கும் இம்மாவட்டத்தை முதல் 10 இடங்களுக்குள் கொண்டு வருவதற்கு மாவட்ட முதன்மைக்கல்வி அலுவலர் பள்ளிகள் துவங்கப்பட்ட நாள் முதலே கடும் நடவடிக்கைகளை எடுத்து வந்தார். தலைமை ஆசிரியர்கள், ஆசிரியர்களுடன் அவ்வப்போது ஆலோசனை நடத்தி 100 சதவீதம் தேர்ச்சிக்கு அறிவுறுத்திவந்தார்.

 இருப்பினும் தேர்வு முடிவுகள் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளன. 12ம் வகுப்பு தேர்வு முடிவுகளில் விழுப்புரம் மாவட்டம் 85.85% பேர் தேர்ச்சி பெற்று 31வது மாவட்டமாக கடைசி இடத்தில் இருந்தது.

 10ம் வகுப்பு தேர்வு முடிவுகள் வெளியான நிலையில் 93.85 சதவீதம் பேர் தேர்ச்சி பெற்று தமிழக அளவில் 26வது இடத்தை பிடித்துள்ளது.

10ம் வகுப்பு தேர்வில் விழுப்புரம் மாவட்டத்தில் 353 அரசுப்பள்ளிகள், 5 நகராட்சி பள்ளிகள், 117 மெட்ரிக் பள்ளிகள் என மொத்தம் 569 பள்ளிகளைச் சேர்ந்த 46,732 பேர் தேர்வு எழுதினார்கள். அதில் 43,856 பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர்.

2,876 பேர் தோல்வியடைந்துள்ளனர். தேர்ச்சி சதவீதம் 93.85 ஆகும். இது கடந்த ஆண்டைவிட 3.67 சதவீதம் அதிகரித்துள்ளது. கடந்த 8 ஆண்டுகளுக்குப்பிறகு மாவட்டத்தில் தேர்ச்சி சதவீதம் அதிகரித்துள்ளது.

 இருப்பினும் தமிழக அளவில் 26 வது இடம்தான் கிடைத்தது. கடைசியிடம் சென்றதற்கும் அரசுபள்ளிகளின் ரிசல்ட் போதிய அளவுக்கு கைகொடுக்கவில்லை. அரசுபள்ளிகளில் 29,527 பேர் தேர்வு எழுதினார்கள். அதில் 27,261 பேர் மட்டுமே தேர்ச்சி பெற்றனர்.

12ம் வகுப்பில் அரசுபள்ளிகள் 181, நிதியுதவிபெறும் பள்ளிகள்23, மெட்ரிக் பள்ளிகள் 62 சுயநிதிபள்ளிகள்15, ஆங்கிலோ இந்தியன் பள்ளி 1 என மொத்தம் 282 பள்ளிகளைச் சேர்ந்த 39,698 பேர் தேர்வு எழுதினார்கள். அதில் 34,080 பேர் மட்டுமே தேர்ச்சி பெற்றுள்ளனர். தேர்ச்சி சதவீதம் 85.85 சதவீதமாக இருந்தது.

கடந்த ஆண்டைவிட 2.50 சதவீதம் தேர்ச்சி அதிகரித்தும் 31வது மாவட்டமாக விழுப்புரம் உள்ளது. இதற்கும் காரணம் அரசுப்பள்ளிகளின் தேர்ச்சி கொடுக்கவில்லை.

அரசு பள்ளி மாணவ, மாணவிகள் 25794 பேரில் 20933 பேர் மட்டுமே தேர்ச்சி பெற்றுள்ளனர். அரசுபள்ளிகளின் தேர்ச்சி சதவீதம் 81.15 ஆகும்.

இப்படி அரசுப்பள்ளிகளின் தேர்ச்சி விழுக்காடு உயராததால் ஒட்டுமொத்த விழுப்புரம் மாவட்டம் தமிழக அளவில் பின் தங்கியிருக்கிறது. இதற்கு அரசுபள்ளி ஆசிரியர்கள் தான் காரணம் என்ற குற்றச்சாட்டு இருந்து வருகிறது.

இது குறித்து மாவட்ட முதன்மைக்கல்வி அலுவலரிடம் கேட்டபோது, இனி வரும் காலங்களில் பள்ளிகள் துவங்கப்பட்ட நாள் முதலே சிறப்பு வகுப்புகள் நடத்தப்படும்.

 10, 11, 12ம் வகுப்பு பொதுத்தேர்வு எழுதும் மாணவிகள், மாணவர்கள் மீது தனிகவனம் செலுத்தப்பட்டு காலை, மாலை சிறப்பு வகுப்புகள் நடத்தப்படும்.

மேலும் தேர்ச்சி விழுக்காடு குறைந்த பள்ளி தலைமை ஆசிரியர்கள், வகுப்பு ஆசிரியர்களுக்கு விளக்கம் கேட்டு நோட்டீஸ் அனுப்பப்பட உள்ளது.

 குறிப்பாக 80 சதவீதத்துக்கும் கீழ் தேர்ச்சி பள்ளி தலைமை ஆசிரியர்களுக்கு நோட்டீஸ் அனுப்பப்பட முடிவு செய்துள்ளோம். கடந்த ஆண்டில் 70 சதவீதத்திற்கு கீழ் தேர்ச்சியடைந்த பள்ளிகளுக்கு நோட்டீஸ் அனுப்பியிருந்தோம்.

 ஆசிரியர்கள் அளிக்கும் விளக்கம் திருப்தியளிக்காவிட்டால் அவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்றார். மேலும் அவர் கூறுகையில், இம்மாவட்டத்திலுள்ள சமூக, பொருளாதார பிரச்னைதான்.

 பிள்ளைகளை பள்ளிக்கு அழைத்துவந்து பாடம் நடத்துவதே சவாலாக உள்ளது. இந்த நிலையும் மாற வேண்டும், மாற்ற வேண்டும். அப்போதுதான் எதிர்பார்த்த தேர்ச்சி சதவீதமும், முதலிடங்களை பிடிப்பதும் சாத்தியமாகும் என்றார்

# இந்த பயனுள்ள தகவலை அனைவருக்கும் பகிருங்கள் - யாரேனும் ஒருவருக்காவது பயன்படும்...

Post a Comment

Previous Post Next Post